ஒரு நிலப்பகுதி அல்லது ஒரு நாட்டின் ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ (Gross Domestic Product - GDP) என்பது, அப்பகுதி அல்லது அந்தநாட்டின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்திசெய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் சந்தைப் பெறுமதியே ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ எனப்படுகின்றது.
அதாவது சுருக்கமாகக் கூறினால் ‘GDP அதிகம்’ என்றால் ‘சிறப்பு’ என அர்த்தம் கொள்ளலாம். இலங்கையைப் பொறுத்தவரை ‘GDP’ என்பது தலைநகரை மட்டும்தான் பிரதானமாக கொண்டுள்ளது.
GDP என்னும் கருப்பொருளை ஒரு சிறிய ஊருக்கு எனப் பயன்படுத்தி தரவுகளைப் பெறுவது என்பது மேதாவித்தனமான ஒரு விடயம்தான். ஆனலும் ஒரு விளக்கத்துக்கு என எடுத்துக்கொண்டு, GDP என்பது வல்வையில் அல்லது யாழ் மாவட்டத்தில் எந்தளவில் உள்ளது எனச்சற்று உற்றுநோக்கிப் பாருங்கள்.
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் உள்ள GDP யை ஒத்த வித்தியாசம் என்ன? பலரும் அறிய முற்பட்டிருக்கமாட்டார்கள். விடை தெரிந்தால் ஆச்சரியப்பட்டுவிடுவீர்கள்.
ஒரு பிரதேசம் அல்லது நாட்டின் வளர்ச்சி என்பது மொத்தத்தில் எவ்வளவு பணத்தை வருவாயாகப் பெறுகின்றது என்பதிலேயே தங்கியிருக்கின்றது. இன்னொரு பக்கத்தில் ஒரு பிரதேசத்தின் அல்லது ஒரு நாட்டின் வீழ்ச்சி என்பது எவ்வளவை பணத்தை இழக்கின்றது என்பதில் தங்கியிருக்கின்றது.
இந்தியாவுடன் முறுக்கிக் கொண்டிருக்கும் சீனா இந்தியாவுடன் போர்செய்ய விரும்பவில்லை, காரணம் வருடத்துக்கு 200 பில்லியன் (?) டொலர்களை - தனது பொருட்களை இந்தியாவில் சந்தைப் படுத்துவதன் மூலம் பெறுகின்றது. ஆகவே சண்டையில் இந்தியாவுக்கு சேதத்தைக் கொடுப்பதை விட இதுமாதிரி பொருளாதாராத்தில் சேதத்தைக் கொடுக்கவே தாம் சீனர்கள் விரும்புகின்றோம் என என்னுடன் பணி புரிந்த சீனர் ஒருவர் கூறினார்.
அமெரிக்காவில் அண்மையில் நேரடியாகவும், இந்தியாவில் மின்சாதனப் பொருட்களுக்கு எனவும் வரி அதிகப்படுத்தப்பட்டமையானது சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களின் அளவைக் குறைப்பதற்குத்தான்.
யாழ்ப்பாண பணப்புழக்கத்தினைப் பேணும் வகையில், இதே கருப்பொருளை நாம் கொழும்பு - யாழ்ப்பாணம் என்ற ரீதியிலும் பார்க்கமுடியும்,
ஆனாலும் யாழ்ப்பாணம் எனக்கதைத்து எனது பக்கத்தை நீட்டாமல் வல்வெட்டித்துறையைப் பற்றிப் பார்ப்போம்.
தற்பொழுது வல்வையின் வருவாயாக விளங்குபவை,
•புலம்பெயர் மக்கள்
•கப்பலில் பணிபுரிபவர்கள்
•மீன்பிடி
•அரச மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிவோர்
•அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள்
•விவசாயம், கால்நடை கோழிவளர்ப்பு போன்றவை
•ஏனையவை - கடைகள், உற்பத்திப்பொருட்கள் போன்றவை
மேலே கூறப்பட்டுள்ளவற்றில், தற்பொழுது அதிகநிதியை ஊருக்குக் கொண்டுவருவது புலம்பெயர் மக்கள் நிதிதான்.
இவை தனிப்பட்ட குடும்பங்களினூடாகவோ அல்லது பொது விடயங்கள் மூலமாகவோ கிடைக்கப்பெற்றுவருகின்றது. இதர ஊர்களைவிட அதிகமாகவே இங்கு இது கிடைக்கின்றது. உதாரணமாக உதயசூரியன் அணைக்கட்டு, நெடியகாடு கணபதி பாலர் பாடசாலை புதிய கட்டடம் போன்றவை. (உள்ளூர் மக்கள் கொடுத்த நிதி நீங்கலாக)
தமது ஊருக்கு மட்டுமின்றி, இதர ஊர்களுக்கும் இவர்கள் அவ்வப்போது உதவிகள் வழங்கவது பெருமைபடக்கூடிய விடயம்.
ஆனாலும் சகல புலம்பெயர் வல்வை மக்களையும் இந்த புகழ் வட்டத்துக்குள் உட்படுத்தமுடியாது. புலம்பெயர்ந்த காலத்திலிருந்து இன்றுவரை தாம் பிறந்து வளர்ந்து ஊருக்கு சல்லிக்காசு கூட கொடுக்காத உத்தமர்கள் நிறையவே உள்ளார்கள் எனப் பலரும் குறைபட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை.
இன்று அதிகம் என்றாலும் புலம்பெயர் மக்கள் நிதி என்பது சில காலங்கள் கழிந்து படிப்படியாக குறையத்தொடங்கி அடுத்த தலைமுறையில் கிட்டத்தட்ட முற்றாக நின்றுவிடும்.
இரண்டாவதாக வருமானம் ஈட்டுவது கப்பற்றொழில்.
வல்வெட்டித்துறையின் வரலாறு தெரிந்த காலத்திலிருந்து வல்வையின் முதுகெலும்பாக இருந்து வருகின்றது இது. மற்றைய ஊர்களை விட இது வல்வைக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதம். இந்த நிதி தொடர்ந்துகொண்டேயிருக்கும். ஊரின் பல நிகழ்வுகளுக்கு உடனடி வங்கியாக இந்த நிதி குறிப்பிடக்கூடியளவில் இருந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.
மூன்றவதாக மீன்பிடி.
தொடர்ச்சியாகவும் குறிப்பிடக்கூடியளவிலும் மீன்பிடி மூலம் வருமானத்தைக் கொண்டுவருவதில் ஆதிகோவில் மீன்பிடிப் படகுகள் விளங்கிவருகின்றது. அடுத்ததாக மதவடி, ரேவடி மற்றும் கொத்தியால் பகுதிகளில் உள்ள வள்ளங்கள். வள்ளங்கள் மூலம் சில மாதங்கள் தான் வருமானாம். ஆனாலும் தொகை குறிப்பிடக்கூடியவை. இவை இரண்டும் இதுவரை ஒரு நிரந்திரமான வருமானதான்.
ஆனாலும் றோலர் தொழில் இழுபறிநிலையில் உள்ளது, விரைவில் நிறுத்தப்படும் என்பது திண்ணம். மாற்றுத்தொழில் தேடாவிட்டால், மீன்பிடி வருவாயில் ஆதிகோவில் மட்டும்தான் தொடர்ந்து நீடிக்கும்.
அடுத்ததாக அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர்
அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் – உண்டு, ஆனாலும் விரலுக்கு ஏற்ற வீக்கம் இல்லை.
தொடர்ந்து அரச மற்றும் அரச சார்பற்ற நிதிகள்.
அரச மற்றும் அரச சார்பற்ற நிதிகளை மேலும் பெறமுயற்சிக்க வேண்டும். இவை நேரடியாக எங்கள் கைகளுக்கு கிடைக்கப்பெறாவிட்டாலும் பிரதேசத்தின் நிதிவளர்ச்சியில் இவை அதிகளவில் பங்களிப்புச் செய்பவை – உதாரணம் ரேவடியில் அமையும் நீச்சல் தடாகம், இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி 8 கோடி ரூபாய்கள். அண்மையில் தீருவிலில் பொதுப் பூங்கா அபிவிருத்திக்கு சுமார் 8 1/2 கோடியை நாடியமை.
ஏனையவை மிகச் சிறிய வீதத்தில் நிதியைக் கொண்டுவருபவை.
பிரதேசத்தை வளர்ப்பதற்கு நிதி வரவை மேலும் அதிகரிக்க வேண்டும். அதாவது பணப்புழக்கம் அதிகமாக இடம்பெற வேண்டும்.
வேகமாகவும் அதிகமாகவும் பயன்தரக்கூடிய விடயங்களில் ஒன்று - வெளி இடங்களில் (யாழ் நகரில், தலை நகரில், இலங்கையின் இதர பாகங்களில், திருச்சி மற்றும் சென்னையில்) நடாத்தப்படும் குடும்ப நிகழ்வுகளை இங்கு நடாத்துவது.
பிறந்தநாள், பூப்புனித நீராட்டுவிழா, திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகள் என்றும் குறைவதில்லை. மாறாக இவை அதிகரித்துக்கொண்டுதான் செல்லும். ஆகவே இவற்றில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்.
இதர இடங்களில் குறிப்பாக தலைநகர், திருச்சி போன்ற இடங்களில் ஒரு திருமண நிகழ்விற்கு லட்சக்கணக்கில் பணம் செலவிடப்படுகின்றது.
அம்மன் கோயில் கல்யாண மண்டபம் கட்டப்பட்ட பின்னர் திருமணங்கள் மற்றும் இதர நிகழ்வுகள் பலவும் இங்கு நடைபெற்றுள்ளன. மண்டபத்துக்குவரும் நிதியை மட்டும் கணக்கில் எடுப்பது தவறு. வெளியில் இருந்து இங்கு நிகழ்வுகளுக்கு வருபவர்கள், நிகழ்விற்குச் செலவழிக்கும் பணத்தைவிட, பெரிய ஒரு தொகை பணத்தை ஊரில் நிற்க்கும் பொழுது செலவு செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஆனாலும் இங்கு விழாவை நடாத்தக்கூடிய வகையில் மண்டபம், சேவை, தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் போன்றவை மேலும் சிறப்பிக்கக்படவேண்டும். ஏனெனில் தலைநகரில் பிரதானமாக வசிக்கும் நான், ஊரில் வீடு மற்றும் ஏனைய வசதிகள் கொண்டவன் – ஆனால் லண்டனில் உள்ள ஒருவருக்கு என்னைப்போல் இங்கு வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு.
வரவை மேலும் அதிகரிக்க
•திருமணம் தவிர்ந்த இதர குடும்ப நிகழ்வுகளை நடாத்தக்கூடிய மண்டபம் ஒன்றை அமைக்க யாராவது முன்வரவேண்டும். (அது தான் மச்ச மண்டபம்)
•வெளியிலிருந்து வந்து இங்கு வர்த்தகம் செய்யும் வரி கட்டாத வியாபாரிகள் இங்கு வருவது தடுக்கப்படவேண்டும்.
•மொத்த யாவாரிகளுக்கு விற்கப்படும் மீன்களின் விற்பனை விலைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
•முடிந்தவரை பொருட்களை எமது பகுதிகளிலேயே கொள்வனவு செய்யவேண்டும். இதை யாழில் உள்ள சகல ஊரவர்களும் கடைப் பிடிக்கவேண்டும். அப்பொழுதுதான் விற்பனைச் சந்தை தலைநகரிலிருந்து பெரியளவில் இங்கு மாற்றம் பெறும்.
இது போன்று ஏராளமான விடயங்கள் உள்ளன. இவற்றில் கவனம் செலுத்தப்பட்டால் எமது பிரதேசத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நான் ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என நினைத்து எனது திருமணத்தையும், எனது பிள்ளைகள் இருவரது பிறந்தநாள் விழாவையும் ஊரில்தான் நடாத்தினேன். கொழும்பில் இதுவரை நடாத்தவில்லை.
ஊர்ப்பற்றின் காரணமாக நான் தெரிவித்த கருத்துக்கள் தான் இவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும், சில வேலைகில் விருப்பம் இருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலை இடம்கொடுக்காது என்பதையும் மறுப்பதற்கில்லை.
பருத்தித்துறை நகரசபை, நெல்லியடி பிரதேசசபை போன்று வருமானம் கூடியது அல்ல வல்வை நகரசபை.
'வெறுங்கை முழம் அளக்காது' என்பார்கள். ஊரில் பணப்புழக்கம் அதிகரிக்க ஊரை நேசிப்பவர்கள் முன்வர வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: July 28, 2018 at 20:25
GDP என்றால் என்னவென்று அறிந்துகொண்டேன் ஆதவண்ணா தூரநோக்கம்கொண்ட தெளிவான பதிவு .உலகம் எங்கும் பரந்துவாழும் வல்வையைர்கள் ஒன்றுசேர்ந்தாலே போதும் வல்வெட்டித்துறையை செழிப்பான ஊராக மாற்றலாம்
வல்வெட்டித்துறையின் பெயரால் மற்ற ஊரவருக்கும் உதவிசெய்யலாம் அதற்க்கு தூரநோக்கமும் தெளிவும் நேர்மையும் உண்மையுமான உங்களைபோன்றவர்கள் முயற்ச்சிக்கவேண்டும் .
I.Thurailingam (UK)
Posted Date: July 28, 2018 at 14:40
கப்டன் ஆதவன்,
உங்களின் கட்டுரைகளும் இணையத் தளமும் வல்வையர்களின் உண்மையான முன்னேற்றம் எதில் தங்கியுள்ளது என்பதை வாழைப்பழத்தில் ஊசி போடுவது போல நாசுக்காக எடுத்துக் கூறிவருகின்றீர்கள். இதுபோன்ற கட்டுரைகள் மேலும் பல தொடர்ந்து காலக்கிரமமாக வரவேண்டும் வல்வை மக்களின் முன்னேற்றத்தில் தீவிரம் வரவேண்டும் என்பது எனது அவா.
உங்கள் இணையத்தளத்தில் ‘வல்வையின் உண்மையான முன்னேற்றத்திற்கு’ என்ற வாசகர்களும் இணைந்து கொள்ளக் கூடிய ஒரு பகுதியை ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.
நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் வல்வையில் உள்ள ஒருவருக்கும் ஒரு சதக்காசும் கொடுக்காத உத்தமன் தான். காரணம் ஒன்று, நான் பணம் படைத்தவன் அல்ல. காரணம் இரண்டு, பணத்தைவிட அறிவு முக்கியம், என்னிடம் இருக்கும் அறிவைப் பெற்று பணம் சம்பாதிப்பவர்கள் தொடர்ந்து பணம் பெறும் வசதி பெறலாம். காரணம் ழூன்று, கப்பல் நிறுவனர் திரு மணிவாசகர் அவரக்ள் சில வருடங்கள் முன்னர் “விமான ஓட்டிகளுக்கும் பொறியியல் நிபுணர்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது, எனவே இங்கு ஊரில் உள்ளவர்கள் படிக்க விரும்பினால் என்னால் பணஉதவி செய்ய முடியும்.” என்று கூறியும் இதுவரை ஒருவரும் முன்வந்ததாக தெரியவில்லை. அதாவது நேரடியாகக் கூறினால் ‘பணத்தின் அருமை தெரியவிலலை’ அல்லது ‘வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக் உடைப்பதில் எவருக்கும் லாபம் இல்லை’ எனலாம்.
இந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து (பணம் அல்லாத) உயர்கல்வி, கைத்தொழில், வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டவற்றிற்கு என்னாலாய எந்த உதவியையும் செய்யக் காத்திருக்கின்றேன் என்பதை அறிவிக்கின்றேன். தொலைபேசி: 07960206215.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.