ஒரு சிறிய விடயம் ஆகட்டும், அல்லது ஒரு பெரிய விடயம் ஆகட்டும், விடயத்தை கருவிலிருந்து உருவாக்கி, அதற்கு தோற்றம் கொடுத்து, அதனை எத்துணை இடர்கள்வரினும் அதனை எதிர்கொண்டு விடயங்களை கொண்டுசெல்பவர்கள் நம் வல்வையர்கள் என்றால் அது மிகையாகாது.
கடந்த சில வாரங்களில் வல்வையர்களினால் அல்லது வல்வையர்களின் பங்களிப்புடன் நடைபெற்றுமுடிந்த சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பு (Chithambara Well Wishers Network - CWN) லண்டன் மற்றும் வல்வெட்டிதுறையில் நடாத்தியிருந்த கணிதப்போட்டி (Maths challenge), யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் நடாத்தப்பட்ட பட்டப்போட்டி, நேற்று முன்தினம் (06/07/2014) லண்டன் ‘Richardson Evans Playing Field” இல் நடைபெற்ற வல்வையர்களின்
கோடைவிழா என்பவை சோரம்போகாத வல்வையர்களின் முயற்சிகளை மீண்டும் காட்டியுள்ளன.
மேற்குறித்த விடயங்கள் ஏனையவர்களின் கவனத்தை ஈர்ந்ததோ இல்லையோ என்பது ஒரு புறமிருக்க, யாழ் துரையப்பா விளையாட்டரங்கு, லண்டன் – வல்வை கல்வி நிலையங்கள், லண்டன் ‘Richardson Evans Playing Field” ஆகிய இடங்களில் மீண்டும் தமது முயற்சிகளையும் திறமைகளையும் நிரூபித்துள்ளார்கள் வல்வையர்கள்.
வல்வையின் சிதம்பரக் கல்லூரியின் நாமம் வருடத்தில் ஒரு நாளாவது உலகின் பல பாகங்களில் உச்சரிக்கப்படவேண்டும் என்ற உன்னத நோக்கோடு, சிதம்பரக் கல்லூரியிலிருந்து இறுதியாக பொறியியல் பீடத்திற்கு தெரிவான ஒரு பழைய மாணவனின் சிந்தனையில் உருவான “”Chithambara Well Wishers Network – Maths Challenge”” இன்று, வல்வையிலிருந்து பேராதனை பல்கலைகழகத்திற்கு சென்ற, வல்வையின் கல்வி பால் அன்றிலிருந்து இன்றுவரை அக்கறை கொண்டுள்ள
இன்னுமொருவர், வல்வையின் கல்விபால் அதீத அக்கறை கொண்டுள்ள சிலர், நலன்விரும்பிகள் பலர் என ஒரு கூட்டு முயற்சியுடன் நடைபோடத் தொடங்கியுள்ளது.
லண்டனில் ஒரு சில நிலையங்கள் என்ற கோட்டினைதத் தாண்டி, 16 நிலையங்கள், வல்வையில் 2 கல்வி நிலையங்கள் பங்கேற்க, அடுத்த வருடத்திற்கு தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று 2 வடமராட்சிப் பாடசாலைகள், பரீட்சை நடந்த ஒரு சில தினங்களில் கேட்குமளவிற்கு உயர்ந்துள்ளது CWN - Maths Challenge.
அடுத்த வருடம் CWN - Maths Challenge மேலும் பேசப்படும் என்பது திண்ணம்.
கல்வியைத்தாண்டி கலையிலும்
அண்மையில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் நடாத்தப்பட்ட பட்டப்போட்டியில், போட்டி நடப்பதற்கு சில மாதங்கள் முன்னரே பத்திரிக்கைகள் வாயிலாக அறிவித்தல்கள் விடப்பட்டு, ஆளுநர் செயலகத்தினாலேயே போட்டி மற்றும் பங்குபெறுபவர்களிற்குரிய செலவுகள் வழங்கப்படும் என அறிவித்து, விழாவை பல வருடங்களின் பின்னர் ஒரு சிறந்த விழாவாக காட்ட வடமாகாண ஆளுநர் செயலகம் பல முயற்சிகள் எடுத்து பலரை இப்போட்டியில் பங்கு பெற வைக்க முற்பட்ட போதிலும், போட்டியில் பங்கெடுத்திருந்த படங்களில் ஒன்று இரண்டைத் தவிர ஏனையவை வல்வையிலிருந்து சென்றவை என்பது சிறப்புடன் நோக்கத்தக்கதாகும்.
சமச் சீரற்ற வடிவங்கள், அவைகளில் மூலைகளிற்குள் ஒளிந்திருந்த புவியீர்ப்பு மையங்கள், குறைந்த காற்றில் பறக்கக் கூடியதாகவிருந்த தன்மை, வித்தியாமான வடிவங்கள் என வல்வையர்களின் நூதன உழைப்பு யாழ் நகரின் வானில் பறந்திருந்தது.
வல்வைக்கு அப்பால் இலங்கையின் எந்தவொரு சிறிய இடத்திலும் இந்தவொரு திறமை இருப்பதாகத் தெரியவில்லை. அன்று பட்டம் கட்டும் கலையில் வியப்பில் ஆழ்த்தியிருந்த நடணி பாயிலிருந்து, இன்று முதியவர் நவரத்னசாமி முதல் இக்கலையில் கொடிகட்டிப் பறக்கும் இளஞர்களிற்கு ஒரு சலாம்.
அடுத்ததாக நேற்று முன்தினம் லண்டனின் ‘Richardson Evans Playing Field” இல் நடைபெற்ற வல்வையர்களின் கோடைவிழா.
இது கடந்த சில வருடங்களாக நடந்து வரும் ஒன்று என்றாலும், லண்டன் மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் உள்ள வல்வையர்களை ஒன்றிணைத்து, சமூக வலைப்பின்னல், விளையாட்டு, கலை, பாரம்பரிய உணவுப்பழக்கம் என பல விடயங்களை விழாவினுள் உள்ளடக்கி, தொடர்ச்சியாக இந்த வருடமும் நடத்திக் காட்டியிருப்பது ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.
புலம்பெயர்ந்து அந்த அந்த நாட்டுச் சூழலுக்கு ஏற்ப மொழி, கலை, கலாச்சாரம், பாரம்பரிய உணவுப் பழக்கங்கள் போன்றவற்றை மெல்லத் தொலைத்து வரும் எம்மவர்கள் மத்தியில் இவைபோன்ற நிகழ்வுகள் ஓரளவிற்குத்தானும் எம்மவர்களை எம்மவர்களாக காட்டத் துணைபோகும் என்பதில் ஐயமில்லை.
CWN – Maths Challenge, கோடை கால நிகழ்வு போன்ற நிகழ்வுகளில் பிரித்தானியாவின் வல்வை நலன்புரிச் சங்கத்தின் தலமை நன்றி கூறப்பட வேண்டியதொன்றாகும்.
பிரித்தானியாவின் வல்வை நலன்புரிச் சங்கம் போல், எம்மவர்கள் வாழும் ஏனைய நாடுகளில் உள்ளவர்களும் இது போன்ற காட்டமான முயற்சிகளை முன்னெடுத்து, வல்வையை மேலும் கல்வி, விளையாட்டுக்கு அப்பால் சென்று கலை, தகவல் தொழில் நுட்பம், ஆங்கிலப் புலமை, அறிவியல் போன்றவற்றில் வளப்பதற்கு முன்வரவேண்டும்.
புலம் பெயர் யூதர்கள் இஸ்ரேலை எப்படி கட்டியமைத்தார்கள் என்று அதிகப் பிரசங்கித்தானமான சொல்லாவிட்டாலும், புலம் வல்வையர்களால் மேலும் ஒரு வளமான வல்வை சாத்தியம் என்பது நிச்சயம் சாத்தியம்.