வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2016
கடந்த வருடம் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக நகரமான ஷங்காயில், வெறும் நிலங்களில் எந்தவொரு தேவைகளுக்கும் கட்டடங்கள் அமைப்பதற்கான அனுமதியை மேலும் இறுக்கி சட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது சம்பந்தப்பட்ட திணைக்களம். இதன் நோக்கம் – நீர் சேமிப்பு, நீர் வழங்கல், கட்டடங்கள் மற்றும் அதில் வசிக்கும் மக்களால் உருவாகும் அன்றாட கழிவுகளைக் குறைத்தல், காற்றின் தூய்மையை தக்கவைத்தல், நிலத்தடி நீரின் தூய்மையை தக்கவைத்தல், எதிர்கால அவசியத் தேவைகள் என முடிவிற்கான காரணங்களாக பட்டியல் இடப்பட்டிருந்தது. இது போன்ற நகரங்களில் பொது இடங்களை தக்கவைக்கும் முயற்சிகளை அநேகமான வளர்ச்சியடைந்த நாடுகள் கடைபிடித்தே வருகின்றன.
ஷங்காய்க்கும் வல்வைக்கும் ஒப்பீடு எதுவும் இல்லாதுவிடினும், எமது வல்வை நகரப்பகுதியிலும் பொது இடங்களின் பற்றாக்குறை பல பாதக விளைவுகளை ஏற்படுத்திவருகின்றது, மேலும் ஏற்படுத்தப்போகின்றது என்பதை பெரிதாக எவரும் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை.
அரச நிறுவனங்களான
இலங்கை வங்கி (வல்வெட்டித்துறை) வல்வெட்டியில் இயங்கி வருகின்றது.
வல்வெட்டித்துறை போலீஸ் நிலையமானது – வல்வெட்டித்துறை சந்தியில் - பொதுமக்களின் வியாபார ஸ்தலங்கள் மற்றும் வீடுகளில் பாதிபாதியாக இயங்கிவருகின்றது.
இலங்கை மக்கள் வங்கி (வல்வெட்டித்துறை) - சந்தியில் தனியார் வீட்டில் இயங்கிவருகின்றது.
வல்வெட்டித்துறை தபாலகம் - சந்தியில் தனியார் வீட்டில் இயங்கிவருகின்றது.
நகரப் பகுதியை நிர்வகிக்கும் 5 கிராமசேவையாளர்கள் அலுவலகங்களில் 4 தனியார் வீடுகளில் இயங்கிவருகின்றது. (கடந்த ஜூன் மாதம் வல்வெட்டித்துறை வடக்கு கிராம சேவையாளர் அலுவலகம் சொந்த அலுவலகத்தில் செயற்படத்தொடங்கியுள்ளது – அதுவும் மீனாட்சி அம்மன் கடற்கரையில்).
இதேபோன்று பொருளாதார உத்தியோகத்தர் அலுவலகங்கள் தனியார் வீடுகளிலேயே (ஒன்றைத் தவிர) இயங்கி வருகின்றது.
அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை நகரப் பாடசாலைகள் போல் எதுவித சிறுநிலம் கூட இன்றி உள்ளது. நகரப் பகுதியில் அமைந்துள்ள சிதம்பரக் கல்லூரியைத் தவிர ஏனைய பாடசாலைகளுக்கு சொந்த மைதானங்கள் இல்லை. (வல்வை மகளிருக்கு அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது, மருந்து கட்டும் பழனியப்பாவை மெச்சவேண்டும் – குப்பைகளைப் போட்டு காணியை விசாலப்படுத்தியதற்காக – என்னவொரு உழைப்பு).
சிதம்பரக் கல்லூரி மைதானமும் முன்னர் – 90கள் வரை – இடப்பக்கம் பந்தை அடித்தால் மைனாக்கள் கீச்சிடும் பனந்தோப்புக்குள்ளும், வலப்பக்கம் பந்தை அடித்தால் ஆர்மி காம்ப் பக்க காணிகளுக்குள்ளும், கடற்கரைப் பக்கம் அடித்தால் வாடிக்குள்ளும் விழும் வகையில் இருந்தது. ஆனால் இன்று பந்தை அடித்தால் வீட்டுச் சுவர்களுடன் முட்டிமோதித் தெறிக்கும் வகையில் சுருங்கிவிட்டது.
இவற்றை விட தனியார் மருந்தகங்கள், தனியார் வகுப்புக்கள் என்பனவும் வீடுகளிலேயே இயங்கி வருகின்றது. தனக்கென தனிக் காணியொன்றை வாங்க வெடா நிர்வாகம் தலையாலே மண்கிண்டி எடுத்த முயற்சியும் இதுவரை பயனளிக்கவில்லை.
பொதுநிலங்கள் இல்லாததால் சில பல அலுவலகங்கள் இயல்பாகவே வராமல் நின்று போயிருக்கக்கூடும். வல்வையில் வர இருந்த இலங்கை வர்த்தக வங்கிக் காரியாலயம், சமுர்த்தி அலுவலகம் என்பன குறைந்தது சிறந்த உதாரணகள்.
அண்மையில் வல்வை நரசபையால் வெளியிடப்பட்டிருந்த பொது நூலகம் அமைப்பதற்கான கேள்வி அறிவித்தல் (பிரதான வீதியில் நகரப் பகுதியில் 4 பரப்புக் காணி) – நாம் இழக்கப் போகும் இன்னொமொரு வாய்ப்புக்கான மிகச் சிறந்த உதாரணமாக அமையப்போகின்றது?
வல்வையில் சொந்தக் கட்டத்தில் இயங்குவது என்றால் வல்வை நகரசபை, ஊரணி வைத்தியசாலை, சந்தை போன்ற ஒன்றோ இரண்டுதான். வல்வை போலீஸ் நிலையம் முன்னர் வல்வை கல்வி மன்றம் இயங்கி வந்த பகுதிக்குச் செல்லவுள்ளது.
வல்வெட்டித்துறை நகரப்பகுதி என்பது (பருத்தித்துறை நகரப்பகுதி போல், மற்றும் இன்று சாவகச்சேரி நகரப்பகுதி) ஒரு சிறந்த திட்டமிடலில் அமைக்கப்பட்டிருக்வில்லை. இதன் பிரதான காரணம் நகரசபை உருவாக்கத்தின் பின்னர் தவிசாளர் பதவியில் இருந்த பிரமுகர்களே ஆவார்கள். அன்றைய வர்த்தகர்களை வீதிகளைப் பிடித்து வீடுகள் கட்டுவதற்கு இடம்கொடுத்ததற்கும் இவர்களும் பொறுப்பு என்பதும் மறுப்பதற்கில்லை.
இட்டு முட்டான ஒழுங்கைகள் – இவற்றுக்குள் கொத்து ரொட்டிக்கடைகள் வேறு – (வாகனங்களில் சென்றால் கொத்து ரொட்டிக் கடைக்கு முன்னால் சைக்கிள்களை வாகனக்காரர்களே சில நேரங்களில் இறங்கி ஒதுக்கி வைக்கவேண்டும்).
தெணியம்பையிலிருந்து ஒரு பார ஊர்தியை கஷ்டப்பட்டு திருப்பி, பெட்ரோல் ஸ்டேஷன் நோக்கி வரும்பொழுது பார ஊதி நிலை தடுமாறி கட்டுபாடு இழந்து வலப்பக்கம் போனால் இலங்கை வங்கிக்குள் செல்லும். அதைத் தவிர்க்க இடப்பக்கம் திருப்பினால் பெட்ரோல் ஸ்டேஷனுடன் மோதி படங்களில் வருவது போலாகிவிடும். இதையும் தவிர்க்க மீண்டும் வலப்பக்கம் திருப்பினால் போலீஸ் அதுவும் க்ரைம் Branch அலுவலகத்திற்குள் (வல்வைக்கு நீண்ட காலமாக வராதவர்கள் நம்பமாட்டீர்கள் – இதைத் தவிர்க்கவோ என்னோவோதான் இந்தக் காரியாலத்திற்கு முன்னால் ஒரு தடுப்புச்சுவர் ரோட்டுப் பக்கமாக கட்டப்பட்டுள்ளது), இதைத் தவிர்க்க இடப்பக்கம் திருப்பினால் போலீஸ் தலமைக் காரியாலயம் – இதுதான் வல்வை பகுதியின் பிரதான வீதியின் பிரதான பகுதி. குச்சம் ஏற்றத்தில் சைக்கிளில் இருந்து விழுந்தால் – வீட்டுக்குள் தான் – இது வல்வையின் பிரதான வீதியின் இன்னொரு பிரதான பிரதான பகுதி
வல்வை நகரப் பகுதியில் பெட்ரோல் ஸ்டேஷன் உள்ளதைப் போன்று (உலகில் என்று கூறமுடியாவிட்டாலும்) இலங்கையில் வேறு எங்காவது இவ்வாறு குடியிருப்புக்கள் மத்தியில் அமைந்த பெட்ரோல் ஸ்டேஷனை வேறு எங்கும் பார்க்கமுடியாது.
பெட்ரோல் ஸ்டேஷன் வந்த பின்னர், சுற்றவரவுள்ள 10m, 20m, 30m, 40m தொலைவில் உள்ள மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டதா? அல்லது மாடிக்கட்டடங்கள் வந்த பின்னர் பெட்ரோல் ஸ்டேஷன் வந்ததா?. எது என்றாலும் இரண்டில் ஒன்று தவறு என்பதில் ஐயமில்லை. இதற்கும் பொறுப்பானவர்கள் அந்நாள் நகரபிதாக்களே. பின்னாளிலும் தொடர்ந்து, நகர பிதாக்களால் இது உணரப்படாதது ஒன்றும் வியப்பான விடயம் அல்ல.
மிக நெருக்கமான வீடுகள் உருவானதும் சுமார் 40 வருடங்கள் முன்புதான். ஒருவர் வீட்டு வாசலில் இன்னொருவர் வீட்டு ‘கக்குஸ்’, இன்னொருவர் வீட்டு கிணற்றுக்குப் பக்கத்தில் அடுத்தவர் வீட்டு கக்குஸ் குழி என எங்களுக்குள் அப்படி ஒரு ஐக்கியம். பல வீடுகளில் வீட்டு கழிவுத் தண்ணீர் எங்கு ஓடுகின்றது என்று வீட்டுக் காரருக்கும் தெரியாது, ஓடுகின்ற தண்ணீருக்கும் தெரியாது. கழிவு நீர் வடிகால்கள் என்பது இல்லை.
கடந்த 2 வாரங்கள் முன்பு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வெளியிட்டிருந்த – அதிகம் லைக் வாங்காத - ஒரு ஆய்வு அறிக்கையில், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் குடிநீர் வேகமாக மாசடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆசியாவில் குடிநீர் மலசல கழிவுகளின் நேரடித்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது பகுதிகளில் வீட்டு குடிநீரில் மலசலத் தொற்று உள்ளதா / நீர் குடிக்கக் கூடிய வகையில் உள்ளதா என நாம் ஒருவரும் பரிசோதித்துப் பார்ப்பதில்லை, அப்படி வடமராட்சியில் பரிசோதித்தால் முதலாவது இடத்தைப் பிடிக்காவிட்டாலும் குறைந்தது மூன்றாவது இடத்திக்குள் வந்திவிடும் வல்வை நகரப்பகுதி. இதுவும் ஒரு பெருமைதான்.
2005 அளவில் ஆலடி ஒழுங்கையில் மின் மாற்றி உள்ள இடத்தில் நவீன மின் மாற்றி ஒன்று கொண்டு வர உத்தேசிக்கப்பட்டதாகவும், ஆனால் 20 அடி கொள்கலனில் வைக்கப்பட்டிருந்த குறித்த உபகரணத்தை வல்வெட்டிதுறை – பருத்தித்துறை பிரதான வீதியில் இருந்த ஆலடி ஒழுங்கை வழியாகவோ அல்லது பிற்பக்கமாக ஏதாவது ஒரு வழி மூலமாகவோ கொண்டுவர ஆராயப்பட்ட போதும் முயற்சி கைகூடவில்லை. இது ஒரு ஊர்ஜிதப்படுத்தபடாத செய்திதான். 20 அடி கொள்கலனுக்கே இப்படி என்றால் 40 அடி கொள்கலன்கள்?
வல்வையைச் சேர்ந்த, சில வருடங்கள் முன்பு தலைநகர் கொழும்பில் அபார்ட்மெண்டுகள் கட்டுவதில் தனக்கென ஒரு இடம்பிடித்த – Civil Engineer Cum Building constructor ஒருவருடன் ஒருமுறை கதைக்க நேர்ந்தபொழுது – வல்வெட்டிதுறையில் கட்டடங்கள் ஒரு நகரத்திற்கு உரிய முறையில் திட்டமிடப்பட்டு கட்டப்படவில்லை – முழுவதையும் இடித்து திருப்பிக் கட்ட வேண்டும் என்றார்.
இவரின் பிற்பாதி கூற்றுடன் உடன்பட முடியாவிட்டாலும், முற்பகுதி கூற்றை மறுப்பதற்கில்லை.
புலம் பெயர் நாடு ஒன்றில் இருந்து சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் வரும் ஒருவர் கூறுவது இதைதான் – ரோடு சுருங்கி விட்டது, வீதி சுருங்கி விட்டது. எப்படி?
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வல்வெட்டித்துறை நகரத் திட்டமிடல் மற்றும் அதனுடன் கூடிய குறிப்பிடக் கூடிய முயற்சி என்றால் 90 களில் அன்றைய பிரேமதாசா அரசாங்க காலத்தில் விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களால் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட திட்டங்களே ஆகும். தூபி ரோட் என்று பொதுவாக அழைக்கப்படும் சிவபுர வீதியில் இருந்து மருதடி வரையான வீதி உருவாக்கம் இவற்றில் பிரதானது ஆகும். (இதில் சிவபுரவீதி 67 இல் அப்போதைய நகரசபைத் தவிசாளர் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டிருந்தது)
இவற்றை விட நகரசபை, மத்தியசந்தை, மீன் நவீன சந்தை, நூலகம் என்பன பின்னர் சிவாஜிலிங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட போதும் இவற்றுக்கான Blue Print புலிகளாலேயே ஏற்படுத்தப்பட்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.
மேலும் ஒரு வாடி – ஆலடி பகுதியில் கலை அரங்கம், நெற்கொழு பகுதியில் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்த ‘நகுலேஷ் பொது விளையாட்டரங்கு’ என்னும் பெயரில் ஒரு பாரிய பொது விளையாட்டரங்கு போன்றனவும் புலிகளின் நிகழ்ச்சிநிரலில் இருந்தவை என மேலும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இன்று வல்வெட்டித்துறை பொதுப்பூங்கா என்னும் பெயரில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு சொந்தமாகவுள்ள – வல்வையின் நகரப் பகுதியில் அமைந்துள்ள – ‘பாரிய’ எனக் குறிப்பிடக் கூடிய பரந்த தீருவில் திறந்த வெளிப்பரப்பும் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
அண்மைக் காலங்களில் புதிதான பொது உருவாக்கங்கள் என்றால் பல இடர்களுக்கு மத்தியில் உருவான ரேவடி மற்றும் உதயசூரியன் கடற்கரை மைதானங்கள் மற்றும் மகளிர் மைதானம் ஆகியனவற்றை கூறலாம். (இவைகளுக்குக் கூட எதிர்காலத்தில் வாகனங்கள் நிறுத்தக் கூடிய நிலம் இல்லை). இவற்றைவிட கட்டுமானங்கள் என்றால் வல்வை உள்ளக விளையாட்டரங்கு, ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம் மற்றும் தற்பொழுது கட்டப்பட்டுவரும் கணபதி பாலர் பாடசாலை ஆகியவற்றை கூறலாம்.
நரசபையின் கீழ் அமைக்கப்பட்டுவருவது என்றால் கடற்கரை வீதியைக் கூறலாம். இதுவும் அதிக பிராணவாயு கொண்டு ஆமை வேகத்திலேயே இடம்பெற்றுவருகின்றது. நிதி ஒரு புறம் பிரச்சனை என்றால் குறித்த வீதியை எந்தப் பக்கத்தால் கொண்டு செல்வது என்பதிலும் சில இடங்களில் சிக்கல். இதற்கும் காரணம் முன்னைய தூரநோக்கற்ற நகரத்திட்டமிடல் மற்றும் நிர்மானங்களேயாகும்.
கடற்கரை மைதானகளைத் தவிர வல்வை நகரப் பகுதியில் பொது இடங்களாக விளங்குபவை கோவில் வீதிகள் (நாத்திகம் பேசி கோயில்களை வளரவிடாது செய்து இருந்தால் இவையும் இல்லாது போயிருக்கும்) மற்றும் விளையாட்டு மைதானங்களே ஆகும்.
ஆகவே இவற்றைக் கருதி வல்வையில் பொது இடங்கள் – பொது நிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும். அது நகரசபை வழியாகவோ அல்லது பொது அமைப்புக்கள் வழியாகவோ இருக்கலாம். இதற்கு அனுகூலமாக தற்பொழுது உள்ளவை புலம்பெயர் நாடுகளில் உள்ள எம்மவர்களின் குறிப்பிடக்கூடிய காணிகள்.
பாடசாலைகளைச் சுற்றியுள்ள காணிகள் பாடசாலைகளுக்கும், மைதானங்களைச் சுற்றியுள்ள காணிகள் மைதானங்களின் விரிவாக்கத்திற்கும், ஏனையவை இதர பல இப்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஒதுக்கப்பட முயற்சி எடுக்கவேண்டும்.
புலம்பெயர் நம்மவர்கள் (இனிமேல் இங்கே வாழ நினைக்காதவர்கள்) இலவசமாகவோ அல்லது ஒரு கால், அரை விலையிலோ தமது காணிகளை நகரசபைக்கோ அல்லது பொது அமைபுக்களுக்கோ கொடுக்க முன்வரவேண்டும். இங்குள்ளவர்களும் நிலங்களின் விரிவாக்கத்திற்கு முயற்சிக்கவேண்டும்.
வல்வையின் அபிவிருத்தியானது அரசு, நகரசபை மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் தங்கியுள்ளது. அரசு, நகரசபை ஏதாவது கட்டுமானங்களைச் செய்ய வேண்டும் என்றால் கேள்வியாகவுள்ளது இதுதான் – காணி.
வல்வையில் நகரசபைக்கு – வல்வை நகர்ப் பகுதியில் சொந்தம் வெறும் நிலங்கள் என்றால் தீருவில் பூங்கா, கடற்கரைப் பகுதிகள் போன்ற மிகச் சொற்பமே.
ஒரு பிரதேச மக்களின் வளர்ச்சி அப்பிரதேசத்தின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது – சிறந்த உதாரணம் ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்லாமல் இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா என வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும், அம்பாறைக்குச் செல்லாமல் எமது மக்கள் கொழும்பில் வசிப்பதும் ஆகும்.
ஆகவே வல்வை நகரும் இதற்கு விதி விலக்கல்ல. வல்வை நகர் சிறந்த முறையில் நிர்மாணிக்கப்படவேண்டும், நிர்வாக்கிக்கப்படவேண்டும். வல்வையின் நிர்மானங்கள் சார்ந்த Master Plan (நகரசபையின் அனுமதியுடன்) தயாரிக்கப்படவேண்டும். கட்டுமானங்கள் நகருக்கு வருவாயை இட்டுத்தருவதாயும் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி வரும் உள்ளாராட்சித் தேர்தலில் இவற்றை விளங்கிய ஒருவரை நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
பொது நிலங்களை அகலப்படுத்துதல், நகரின் திட்டமிடல் இன்று பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாவிட்டால் இதன் விளைவுகள் பல வருடங்கள் பின்பே தெரியவரும்.
பொறுப்புத் துறப்பு
1) முன்னாள் நகரசபைத் தலைவர்களை எந்தவிதத்திலும் வசைபாடும் நோக்கில் கட்டுரை எழுதப்படவில்லை. இவர்கள் நகரின் வளர்ச்சிக்கு அப்போது பல வழிகளில் உழைத்திருந்தாலும் தூரநோக்கு பெரிதாக இருந்திருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதே நோக்கமாகும்.
2) 90 களில் நகரின் திட்டவரைபில் விடுதலைப் புலிகளின் பங்கு, நாம் முன்னர் வெளியிட்டுருந்த – திரு,சிவாஜிலிங்கம் அவர்கள் நகரசபை உறுப்பினராக இருந்த போது வழங்கிய -தகவல்களை அடிபடையாகக் கொண்டவையாகும்.