வல்வைக்கு பெருமை சேர்க்கும் பட்டப்போட்டி - எமது தலையங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015
பல விடயங்களில் முன்னோடியாகத் திகழும் வல்வையர்கள் நாம் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற பட்டப் போட்டியிலும் எமது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளோம்.
60 ற்கு மேற்பட்ட பட்டங்கள், ஒன்று இரண்டைத் தவிர அனைத்தும் முப்பரிமாணம் கொண்டவை. முப்பரிமாணத்திலும் பல வளைவுகளையும் வடிவுகளையும் வர்ணங்களையும் கொண்டமைந்திருந்தன வானில் பறந்த பட்டங்கள்.
அனைத்துப் பட்டங்களிலும் கலை நயம், நுட்பம் அதிகமே பயன்படுத்தப்பட்டிருந்தன. எமது முன்னோர்களின் வீரத்தை எடுத்தியம்ப அன்னபூரணி பாய் கப்பல் பட்டமும், எம்மால் இயலும் என்று காட்ட 'Yes' என்ற பட்டமும், வீதியில் ஓடும் வாகனத்தை வானில் ஓட்டிட 'Land Master' பட்டமும்............. இப்படியாக ஒவ்வொரு பட்டமும் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக காதலின் சின்னம் தாஜ் மஹால் வானில் பறந்தது பட்டப் போட்டிக்கு மேலும் ஒரு மகுடம்.
ஒரு போட்டியாளரின் பட்டத்தைப் போல மற்றவரின் பட்டம் இருக்கக் கூடாது என்பதில் அனைத்துப் போட்டியாளரும் மிகவும் கவனம் செலுத்தியுள்ளனர் போலும்.
பலரின் கலைத்திறன், நுட்பம், அறிவு, உழைப்பு...........என பல விடயங்களையும் தாங்கியிருந்தது இந்த பட்டப்போட்டி. அனைத்துப் போட்டியாளர்களும் இந்தப் போட்டியின் கதாநாயகர்கள் என்றால் மிகையாகாது.
வல்வெட்டித்துறைக்கு பெருமை சேர்த்த இந்த நிகழ்வு இதன் ஏற்பாட்டாளர்கள் - வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையத்தினரையே சாரும். கடற்கரையை அழகு படுத்தியதிலிருந்து, தகுந்த விருந்தினர்களை அழைத்து, நிகழ்வை உரிய நேரத்தில் தொடக்கி விழாவை சிறப்பாக நடாத்திமுடித்திருந்தனர்.
மேலும் எதுவித சர்ச்சைக்கும் இடமளிக்காத தீர்ப்பைக் கூறும் வண்ணம் சிறந்த நடுவர்களையும் நிகழ்வில் சேர்த்திருந்ததும் பாராட்டத்தக்கது.
இதற்கும் மேலாக நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் சிறந்த தமிழ் நயம் மிக்க அறிவிப்பாளரின் அறிவிப்பும் பட்டங்களுடன் சேர்ந்தே வானில் பறந்துகொண்டிருந்தது.
தினக்குரல் பத்திரிக்கையின் ஊடக அனுசரணையும், Hutch இனுடைய விளம்பர அனுசரணையும் நிகழ்வை மேலும் ஒரு படி கொண்டுசென்றுள்ளது.
முழு நிகழ்வும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதும், இதனை பலர் நேரடியாகப் பார்த்திருந்ததும் மேலும் சிறப்பு.
பட்டப் போட்டி பற்றி 'மேக்க லஸ்ஸனாய்....', It is a brilliant job..., மிகச்சிறப்பு..... என 3 மொழிகளிலும் எமது Face book முகநூலில் கருத்துப்பகிர்வும் பட்டங்களை பல இனத்தவரும் ரசித்ததற்கு அடையாளம்.
கடந்த வருடத்தை விட பார்வையாளர் கூட்டம் இந்த முறை அதிகம் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இவ்வாறனதொரு Copy அடிக்கப்படாத, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழாத ஒரு நிகழ்விற்கு இதுதானா பார்வையாளர் கூட்டம் என்றால் - நிச்சயம் இதுவல்ல.
போட்டி ஏற்பாட்டாளர்கள் இதனை கவனத்தில் எடுத்து அடுத்த வருடம் இன்னும் பல ஆயிரம் பார்வையாளர்களை இந்த பட்டப்போட்டியைக் காண வழிசமைக்க வேண்டும்.
மேலும் விருந்தினர் உரையில் விருந்தினர் குறிப்பிட்டதுபோல் விழா ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்விற்கு நல்லதொரு தலையங்கத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் தீட்டுவது மிகவும் அவசியமானதொன்று. ஏனெனில் இன்றைய இலத்திரனியல் ஊடக உலகில் உலகின் பல பாகங்களிலும் உள்ள பலரிடம் ஒரு நிகழ்வை கொண்டு செல்வதற்கு இவை அவசியமானவை.
ஆனாலும் வியப்பான ஒரு விடயம் என்னவெனில், இவ்வாறனதொரு நிகரற்ற ஒரு நிகழ்விற்கு, நிகழ்வு முடிந்த உடன் யாழின் பிரதான ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் அவ்வளவானதாகத் தெரியவில்லை.
வல்வை சார் இணையதளங்களாலும், Face book போன்ற சமூக வலைத்தளங்களாலும் நிகழ்வு அன்றே பலரை எட்டியது என்பது வேறு விடயம்.
4 புகைப்படக்காரர்கள் (ஒருவர் விநாயகர் முகூர்த்தங்கள் சேர்க்கும் நிகழ்வை படம் பிடித்திருந்தார்), 3 Editors, நேரடி ஒளி பரப்பை ஒழுங்குபடுத்த ஒருவர் என எங்களிலும் எண்மர் சுமார் நள்ளிரவு வரை பட்டப் போட்டி நிகழ்வின் செய்தியை பிரசுரிக்கும் அளவிற்கு இந்த நிகழ்வு மிகவும் கனமாகவே இருந்தது.
எமக்கு தகுந்த அனுசரணை வழங்கிய விழாவின் ஏற்பாட்டாளர்களான வல்வை விக்னேஸ்வரா சன சமூக நிலையத்தினருக்கு இத்தருணத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
அடுத்த வருடம் இதைவிடவும் சிறந்த ஒரு பட்டப் போட்டி நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.