வல்வையின் சிதம்பர கல்லூரியடியில் வசிக்கும் ஒரு மாணவி கடந்த வருடம் க.பொ.த (உ/த) கணித வகுப்பினை கற்று வந்திருந்தார். இதற்காக தனியார் வகுப்பிற்காக வதிரிக்குச் சென்று வர வேண்டியிருந்தது. பாடசாலை கற்றலுக்கு மேலாக, இவ்வாறு தனியார் வகுப்பிற்கு 8 மாதம் சென்று வந்த இவரை, மாணவியின் பெற்றோர் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தனியார் வகுப்பிற்கு செல்வதை நிறுத்தி, குறித்த மாணவியை ‘வர்த்தகவியல்’ கற்க பணித்திருந்தனர். புங்குடுதீவில் மாணவி வித்தியா சம்பவம் இடம்பெற்ற பின்னர் இது இடம்பெற்றிருந்தது.
இது ஆகக் குறைந்த - ஆணித்தரமாக உதாரணம் சொல்லக் கூடிய சம்பவம் ஒன்று.
இவ்வாறு பல மாணவ மாணவிகள் க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான வகுப்புக்களை கற்க முடியாமல் பல வருடங்களாக - நீண்ட காலமாக - ஒரு மிகப் பெரிய தடைக் கல்லாக இருந்து வருவது - வல்வை பிரதேசத்தில் ஒரு ‘க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான தனியார் வகுப்புக்கள்’ இல்லாமையே ஆகும் என்றால் அது மிகையாகாது.
பாடசாலைகளில் க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான வகுப்புக்கள் இருக்கின்றனவே என்ற ஒரு வாதம் ஒரு சிலரால் முன்வைக்கப்படக்கூடும். இன்றல்ல, கடந்த 30, 40 வருடங்களாக, இங்கு மாத்திரம் அன்றி இலங்கையின் சகல பகுதிகளிலும் க.பொ.த (உ/த) ற்கு, பாடசாலை கற்பித்தலை விட, தனியார் வகுப்புக்கள் மிகவும் இன்றியமையாத ஒன்று என்பது கண்கூடு.
இவற்றைக் கருத்திற் கொண்டு வல்வையின் கல்வியின் பால், அதீத அக்கறை கொண்டுள்ள, அதுவும் க.பொ.த (உ/த) கணித மற்றும் விஞ்ஞான வகுப்புக்களில் அக்கறை கொண்டுள்ள, சில நலன் விரும்பிகள் முயற்சி – ஜனவரி 4 ஆம் திகதி VEDA கல்வி நிலையத்தில் ஆரம்பமாகும் க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான மற்றும் ICT வகுப்புக்கள் ஆகும்.
மொத்தத்தில் தாமதமான ஒன்று இது என்றாலும், மிகவும் சந்தோஷப்படும் வகையில், எதிர்பார்ப்புக்கு முன்னரே நலன்விரும்பிகளால் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்விபால் அக்கறை கொண்டுள்ள சில, பல நலன் விரும்பிகளால் இங்கும் புலம் பெயர் தேசத்தில் இருந்தும் பல கல்விசார் முயற்சிகள் – நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தாலும் – சகல முயற்சிகள் மற்றும் நிகழ்வுகளின் ‘மகுடம்’ என இந்த க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான மற்றும் ICT வகுப்புக்கள் ஆரம்பத்தைத்தான் குறிப்பிட வேண்டும்.
இந்த முயற்சியின் பின்னால் நிற்பவர்கள் – நிற்கப் போகின்றவர்கள் கண்டிப்பாக மெச்சப்பட வேண்டியவர்கள்.
இப்பத்தியின் நோக்கம் எமது பங்கிற்கு நாமும் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பது அல்ல. மாறாக வல்வையில் க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான மற்றும் ICT வகுப்புக்களுக்கும் - மாணவர்களுக்கும் உள்ள இடைவெளியையும் குறிப்பிடுவதேயாகும்.
தூரத் தள்ளும் இரண்டு விடயங்கள்
முதலாவதாக, காரணம் தெரியாத காரணமாக வல்வையில், பொதுவாக மிகப் பெரும்பாலான மாணவர்கள், இதுவரை வர்த்தகவியல் மற்றும் கலையியலை பிரிவுகளை மாத்திரம் தெரிவுசெய்து வந்துள்ளார்கள்.
தற்பொழுது க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றிய – வல்வையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் அதிக பெறுபேறுகளை இதுவரை எடுத்துவந்த மாணவன் ஒருவரை – சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் A/L இல் என்ன படிக்கவுள்ளாய்? என கேட்டு முடிப்பதற்க்குள் – விடை ‘Commerce’ என்று வந்திருந்தது. வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது இந்த விடை.
இரண்டாவதாக கணித, விஞ்ஞான வகுப்புக்களை கற்க விரும்பிய ஒரு சில மாணவர்களும் க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கான ‘தனியார் வகுப்புக்கள்’ எமது பிரதேசத்தில் இல்லாத காரணத்தால் இதுவரை வர்த்தகவியல் மற்றும் கலையியலை பிரிவுகளை தெரிவு செய்திருந்தார்கள்.
80, 90 களிலும் வல்வையிலிருந்து மாணவர்கள் (மாணவிகள் உட்பட) க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான பிரிவுகளுக்காக தூர இடங்களிற்குச் சென்று வந்துள்ள போதிலும், இதற்குப் பின்னரான காலங்களில் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள், தூர இடங்களிற்குச் தனியார் கல்வி நிலையங்களிற்கு சென்று வரக் கூடிய நிலமை இருக்கவில்லை என்பதும் உண்மைதான்.
இவ்வாறாக வல்வையில் கிட்டத்தட்ட அழிந்து விட்டது க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான பிரிவு கல்வி.
இதற்காக இதர துறைகளான வர்த்தகவியல் மற்றும் கலையியல் துறைகளை குறைத்து மதிப்பிட்டு கூறமுனையவில்லை. சமூகத்தில் எந்த விடயம் என்றாலும் ஒரு சமச்சீர் பெறப்படவேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சமூகம் ஒரு ஆரோக்கியமானதாக இருக்கும். வர்த்தகவியல் மற்றும் கலையியல் துறைகளில் மாணவர்கள் பெருக்கத்தால் அந்தத் துறைகளில் வேலை வாய்ப்புப் பிரச்சனை அதிகமாகி வருகின்றது.
இதர பிரிவுகளை விட கணித துறையை தெரிவு செய்வதனால், பல்கலைக் கழக அனுமதி கிடைக்காது போனால் கூட பின்னர் பல துறைகளில் மேற்படிப்புக்களை தொடர வாய்ப்புண்டு.
ஆகவே வல்வையில் க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான துறைகளின் முக்கியத்துவம் பற்றி அதிலும் குறிப்பாக கணிதத் துறையின் முக்கியத்துவம் பற்றி, மிக அதிகளவான விழிப்பூட்டல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இனிவரும் வருடங்களில் மிக அதிகளவு மாணவர்கள் க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான மற்றும் ICT துறைகளில் உள்வாங்கப்படவேண்டும்.
தற்பொழுது க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான பிரிவுகளை தேர்ந்தெடுத்துள்ள மாணவர்களும் சில மாதங்களில் – கஷ்டம் என்று – இதர துறைககளிற்கு மாறாமல் இருப்பதை உறுதிவேண்டும்.
வல்வையின் – சமூகத்தின் – மாணவர்களின் – எதிர்காலத்தின் தேவை கருதி நலன் விரும்பிகள் எடுத்துள்ள இந்த முயற்சி – 2015 ஆம் ஆண்டில் வல்வையில் எடுக்கப்பட்ட சிறந்த ஒரு முயற்சி என்றால் அது மிகையாகாது.
மீண்டும் ஒரு தடவை இவர்களைப் பாராட்டுவதுடன் – இது போன்ற ஆரோக்கியமான முயற்சிகள்தான் தற்பொழுது வல்வையில் எடுக்கப்படவேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.