சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து திடமாகவும் காத்திரமாகவும் தொடர்ந்து பயணிப்போம் -எமது தலையங்கம் 9
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013
(Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
"சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து திடமாகவும் காத்திரமாகவும் தொடர்ந்து பயணிப்போம்"
இன்றுடன் எமது இணையத்தளமான www.valvettithurai.org இனை ஆரம்பித்து ஒரு வருடத்தைப் பூர்த்தியாக்குகின்றோம். கூகுள் தேடலில் (Google Search) முதலிடம், ஏனைய பிரதான தேடல் இயந்திரங்களிலும் (Search Engine) முதலிடம், தேடல்களில் எமது பல இணையதள தொடுப்புக்கள் (Links) முன்னுள்ளன - இவை அல்ல எமது ஒரு வருடவெற்றி, மாறாக வல்வை சம்பந்தப்பட்ட ஒரு வருடச் செய்திகளை ஓரளவு பூரணப்படுத்தியுள்ளோம் என்று நம்புகின்றோம். மேலும் வல்வை சம்பந்தப்பட்ட பல விடயங்களை ஆவணப்படுத்தும் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
நாமே எமது இணையதளத்தைப் பற்றி அதிகம் எழுதுவதைத் தவிர்த்து, கடந்த 18 நாட்களாக சமூகத்தில் வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும். பலரையும் உரைக்க வைத்துள்ளோம்.
எமது நோக்கம் என்ன
நாம் வல்வெட்டித்துறையை பிரதிநிதிப்படுத்தும் ஒரு தனியமைப்பு அல்ல. மாறாக இன்றைய தவிர்க்க முடியாத இணையதள உலகில் இணையத்துக்குள் வல்வெட்டித்துறையையும் சகல முனைகளிலும் கொண்டு வருவதே எமது நோக்கம்.
இது மறைமுகமாக பல்வேறு கருத்துப் பரிமாறல்களுடன் வல்வைப் பிரதேசத்தின் மெதுவான, காத்திரமான ஒரு வளர்ச்சிக்கு வித்திடலாம் என்பது எமது சிறிய எதிர்பார்ப்பு. ஆனாலும் அவ்வாறனதொரு வளர்ச்சி வல்வைப் பிரதேசத்தில் ஏற்படும் பொழுது 'குருவி இருந்து பனம் பழம் விழுந்தால் போல்' என்ற பொன்மொழிக்கு ஏற்றால் போல் அவ்வளர்ச்சிகளுக்கு உரிமை கோரும் குருவிகளாக இருப்பதல்ல எமது நோக்கம்.
அன்றாட செய்திகளோடு நின்றுவிடாமல் வரலாறுகள் பல கொண்ட வல்வெட்டித்துறையை ஒரு மிக்க சிறந்த முறையில் ஆவணப்படுத்து பதில் மிகவும் முனைப்புடல் உள்ளோம்.
பரந்த நோக்கு
எமது பிரதான நோக்கம் வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட செய்திகளை வெளியிட்டு, வல்வெட்டித்துறையை இணையத்தில் ஆவணப்படுத்துவது என்றாலும், நாம் இத்துடன் இவ் வட்டத்துக்குள் நின்றுவிடவிரும்பவில்லை.
யாழ்பாணம் மற்றும் தமிழர் சார் செய்திகள்
இவற்றைவிட நாம் சார்ந்த யாழ்பாணத்தைப் பற்றிய மிக முக்கிய கருத்துசார் செய்திகளையும் முடிந்தவரை பிரசுரிப்போம். மேலும் நாம் நேசிக்கும் வன்னியையும் எம் சகோதரர்கள் வாழும் கிழக்கு, மலைநாடு, கொழும்பு போன்ற பகுதிகளையும் சிறு செய்திகள் புகைப்படங்கள், காணொளிகள் மூலம் எமது இணையத்துக்குள் கொண்டு வருவோம்.
ஹாட்லிக் கல்லூரி, துரையப்பா விளையாடரங்கு, திரு.பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த நிலக்கீழ் வீடு, கொழும்பு கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை - போன்றவைகளில் வல்வையர்களின் (புலம் பெயர்ந்தவர்கள் உட்பட) பிரசன்னம் இருக்கும் போது - இவை சம்பந்தப்பட்ட செய்திகளையும் பிரசுரிப்பது சாலச்சிறந்தது என்று நாம் கருதுகின்றோம்.
இவற்றைவிட எமது வாசகர்களுக்கு, குறிப்பாக மாணவ சமுதாயத்துக்கு பயன்தரக் கூடிய செய்திகளை, தரவுகளை வெளியிடுவதில் நாம் ஆர்வமாகவுள்ளோம்.
மேலும் சிறப்பாக கடலியலில் இன்றும் வல்வெட்டித்துறை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதால், கடலியல் சம்பந்தப்பட்ட விடயங்களிலும் நாம் அதீத கவனம் செலுத்துகின்றோம். அண்மையில் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த புயல் 'பயிலின்' பற்றிய செய்தியை துல்லியமாக இலங்கையின் இணைய உலகத்தில் முதலாவதாக நாமே வெளியிடும் அளவுக்கு எம்மை வளர்த்துள்ளோம்.
இலங்கையில் உள்ள ஊர் இணைய தளங்களிலே மிகவும் முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்குவதும் எமது நோக்கங்களில் ஒன்று.
தவிர்ப்போம், இணைய தள விதிகளைப் பின் பற்றுவோம்
செய்தியை Copy செய்து எமது தளத்தை நிரப்புவதிலோ அல்லது எவரின் Photo களில் திருத்தம் செய்து எமது தளத்தை நிரப்புவதிலோ நாம் நாட்டம் காட்டவில்லை. எமது இணையத்தில் செய்தியிலோ அல்லது எந்தவொரு விடையத்திலோ இலங்கையில் இருந்து செயற்படும் ஊரின் தளங்களின் தாக்கம் இருக்காமல் எமக்கென ஒரு பிரத்தியேகமான வடிவம் இருப்பதையே நாம் விரும்புகின்றோம்.
இதற்கமையவே விடயங்களை ஆங்கிலத்திலும் பிரசுரித்து வருகின்றோம். மிகமுக்கிய செய்திகள் மற்றும் விபரங்களை சிங்களத்திலும் வெளியிடவுள்ளோம்.
நாம் யார்!
எமது இணையதள உறுப்பினர்கள் பற்றி ஏற்கனவே எமது இணையதள (about us) பகுதியில் தெரிவித்துள்ள நாம், மேலதிகமாக எமது சுயசரிதைகளைக் கொடுப்பதை தேவையற்றது என்றே கருதுகின்றோம். ஆனாலும் எம்மில் சிலரே மக்கள் தொடர்பாடல்களை மேற்கொள்வதனால், இவ் இணையத்தளத்துக்காக உழைக்கும், பக்க பலமாக இருக்கும் பலரை வாசகர்கள் அறியாமல் இருப்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே.
ஆசிரிய குழாம், புகைப்படம் எடுப்பவர்கள், தகவல் சேகரிப்பவர்கள், தொடர்பாளார்கள், தட்டச்சாளர்கள், சரிபிழை பார்ப்பவர்கள், ஆலோசகர்கள், தகவல் தொழில்நுட்ப உதவியாளார்கள் என ஒரு நீண்ட பட்டியலை நாம் கொண்டுள்ளோம். தேவைக்குகேற்ப ஒரு சிறிய ஆலோசனைக் குழுவையும் நாம் கொண்டுள்ளோம்.
நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கின்றோம்
எமது இந்த ஒரு வருட வளர்ச்சிக்கு பலரின் பங்களிப்பு உண்டு. அதில் முதலாவதாக, இந்த தளத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மென்பொருள் ஆக்குனர் (Website Developer) அவர்களுக்கு எமது நன்றிகள். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கணணிப் படிப்பில் தேர்ச்சிபெற்ற இவர் தற்பொழுது, கொழும்பில் உள்ள பிரபல்யமான தனியார் நிறுவனமொன்றில் Senior Software Engineer ஆக உள்ளார். அத்துடன் பல தனிப்பட்ட இணையதளங்களையும் உருவாக்கியுள்ளார்.
போன்றவை இவர் உருவாக்கியுள்ள சில இணையத்தளங்களாகும்.
வர்த்தக நோக்கத்துக்கு அப்பால், தினமும் எமது இணையத்தளத்தினை மெருகேற்றுவதிலும், திருத்தங்களை மேற்கொள்வதிலும் இவர் காட்டும் ஆர்வம் நன்றி கூற வேண்டியவொன்றாகும் .
அடுத்ததாக வாசகராகிய உங்களுக்கு எமது நன்றிகள். அதிலும் குறிப்பாக குறை நிறைகளைத் தயங்காது தெரிவிப்பவர்கள்.
அடுத்ததாக எமது இணையதளக் குழுமத்தினரை விட, எமது தளத்தின் வளர்ச்சியில், வெளியிலிருந்து எமக்கு ஆலோசனைகளை வழங்கி வருபவர்களுக்கும் நாம் மிகுந்த நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
எமது குறை நிறைகளை ஏற்கனவே வாழ்த்துச் செய்திகள் மூலம் பலர் தெரிவித்துள்ளததால் மேற்கொண்டு தொடர்ந்து இம்முறை எழுதுவதற்கு பெரிதாக இதைவிட வேறு ஒன்றுமில்லை.
தங்கள் வேலைப்பளுகளுக்கு மத்தியிலும் வாழ்த்துச் செய்திகள் தந்திருந்த அனைவருக்கும் எமது நன்றிகள். மிகக் கவனமாக ஆராய்ந்து பக்க சார்பற்ற முறையில் வாழ்த்துச் செய்திகளைப் பெற்றுள்ளோம்.
ஆனாலும் ஓரிருவரின் வாழ்த்துச் செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. இவர்களுக்கும் நாம் மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருகின்றோம். ஏனெனில் இவர்களை திருப்தியளிக்கக்கூடிய வகையில் எமது தளம் அமையவில்லை என்ற செய்தியை எமக்குக் தெரிவித்திருப்பதற்காக - இது எமது நடு நிலைமையைக் காட்டலாம் அல்லது எமது பக்கச்சார்புள்ள தன்மையின் வெளிப்பாடாக இருக்கலாம். எதுவெனத் தீர்மானிக்க வேண்டியவர்கள் வாசகர்கள் ஆகிய நீங்களே.
உதவ முன்வந்தவர்கள்
எமது இணையதளத்தின் பாதையைப் பார்த்த பலர், எமக்கு அரிய பல ஆவணங்களைத் தந்துதவியுள்ளனர், ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றிய விரங்களின் தொகுப்பு, அன்னபூரணி பற்றிய விடயங்கள், அன்னபூரணியின் 2 ஆவது பயணத்தை விவரிக்கும் மிக அரிய ஆவணமான Tahiti Bound எனும் புத்தகம், வைத்திலிங்கப் பிள்ளை புலவர் பற்றிய சில விவரங்கள், வல்வையில் சில பழைய வரலாறுகள் எனும் நீளும் இந்தப் பட்டியலில் தொடர்ந்தும் பலவற்றை தந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். பெறப்படும் அனைத்தும் எமது இணையத்தில் நிதானமாக ஆவணப்படுத்தப்படும். இதைவிட பலர் எமக்கு வல்வை பற்றிய பல வாய்மொழி விடயங்களை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
பண உதவி
இதைவிட சிலர் எமக்கு பண உதவிசெய்ய முன்வந்திருந்தனர். அடக்கமாக நாம் இவ் உதவியை பெற மறுத்திருந்தாலும் இவ்வாறு உதவி செய்ய முன்வந்தவர்களுக்கும் எமது நன்றிகளைக் கூறக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
திடமாகவும் காத்திரமாகவும் தொடர்ந்து பயணிப்போம்
தொடர்ந்து செய்திகளை வழங்குவதில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், எமது இந்த இணையத்தளம் சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, தொடர்ந்து இன்னும் சகல வழிகளிலும் திறமையான ஒரு விரிவாக்கம் அடையும் என்று மிகவும் திடமாகக் கூறி, இலங்கைத் தீவில் வல்வெட்டித்துறை ஆனது பல துறைகளில் முன்னோடியாக இருந்து, இருக்கின்றதைப் போல், இணையதளத்திலும் வல்வெட்டித்துறையை, Valvettithurai.org என்னும் இணையவடிவில் இலங்கையில் முன்னிறுத்துவோம் எனக் கூறி நிறைவு செய்கின்றோம்.