கருத்துக்களும் (Comments) அழுத்தங்களும் - எமது தலையங்கம் 8
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2013
கருத்துக்களும் (Comments) அழுத்தங்களும்
வல்வெட்டித்துறை - பல வரலாறுகளைக்கொண்டது.
புராதனம், இந்துத்துவ மரபுகள், நீண்ட அரசியல் மற்றும் அரசியல் தலைவர்கள், கப்பல் கட்டுமானம், கடல் வாணிபம், கப்பல் தொழிலில் ஆதிக்கம், ஆன்மிகம், கலை இலக்கியம் மற்றும் நாடகத்துறை, விடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் மற்றும் அதன் தலைவர்கள், கல்விமான்கள், கின்னஸ் வீரர் ஆனந்தன், பல்வேறுபட்ட விழாக்கள், தற்காப்புக் கலைகள், தென் இந்தியாவுடனான தொடர்பு, இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகளூடானான தொடர்பு, எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அறிஞர்கள், ஏராளமான ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், உணவுப் பழக்கங்கள், புனைபெயர்கள்...... இப்படி மிக மிக நீளமானது விடையங்களைக் கொண்டது வல்வெட்டித்துறை. இவற்றுடன் தற்பொழுது புலம்பெயர் வல்வையர்களின் பல்வேறுபட்ட வளர்ச்சிகளும் அடக்கம். இவையொன்றும் மிகைப்படுத்தப்பட்டவொன்றல்ல.
இவ்வாறு வல்வையை அடையாளப்படுத்துவதற்காக ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன, நடைபெற்றுவருகின்றன. இதில் பலவேறு வாதங்களும் அடக்கம். வாதப் பிரதிவாதங்களுக்கு நாடாளுமன்றங்களும் விதிவிலக்கல்ல. விமர்சனங்களுக்கு நவநீதம்பிள்ளை அம்மையாரும் தப்புவதில்லை.
விடயத்துக்கு வருவோம்
எமது இணையதளத்தை நாம் தொடங்கியதிலிருந்து பலர் கருத்துகள் (Comments) பகுதியையும் சேர்க்கச் சொல்லிவந்திருந்தனர். இவ் இணையதளத்தில் வல்வையின்பால் அக்கறையுள்ள அனைவரினது பங்களிப்பையும் உறுதி செய்வதில் நாம் மிகவும் கவனமாகவுள்ளோம். ஆகவே நாம் சிறிது தயங்கியிருந்தாலும் பலரின் நல்வேண்டுதலின் பேரில் கருத்துகள் பகுதியை ஆரம்பித்திருந்தோம்.
கருத்துகள் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு வழிவகுத்து, பல்வேறு விடையங்களை பலரும் அறிய வழிவகுக்கும்.
கருத்துகள் எனவரும் பொழுது புகழ்ச்சி தரும் கருத்துகளை மாத்திரம் எதிர்பார்ப்பது தவறு. விமர்சனங்களை தாங்கிவரும் எதிர்பார்க்கப்படவேண்டியவொன்று.
தவிர்க்கப்படவேண்டும்
ஆனாலும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் CWN (Children Well Wishers Network) சிதம்பரக் கல்லூரியில் செய்ய உத்தேசித்துள்ள ஒரு பணி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் பல விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. பல இணையதளங்களில் இதைவிட பாரதூரமான கருத்துகள் வந்துகொண்டிருந்தாலும், எமது இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட செய்தியில் இடம்பெறுள்ள கருத்துகள் பற்றி பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது கருத்துகளில் (எல்லாவற்றிலும் அல்ல) பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைப்பிரயோகங்கள் பற்றி.
அதாவது கருத்துகளில் பாவிக்கப்படும் வார்த்தைகள் மிகவும் நாகரீகமானவையாக இருக்கவேண்டும். குறிப்பிட்ட செய்திக்கு அப்பாற்பட்ட விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும். தனிநபர் பிரச்சனைகள் மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்படக் கூடாது. இதுதான் ஆரோக்கியமகவிருக்கும். அத்துடன் எமது மற்றும் உங்கள் நோக்கமான 'பொதுவான வல்வெட்டித்துறையின்' முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
நாம் கருத்துகள் (Comment) எழுதுவதை நிறுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் எழுதப்படும் கருத்துகள் இன்னும் மெருகூட்டப்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம், நாகரீகமானவையாக இருக்கவேண்டும்.
நாம்
குறிப்பிட்ட செய்தி உட்பட சிலவேறு செய்திகள் மற்றும் சில கருத்துகள் பிரசுரிப்பின் பின்னர், எமக்கு பல்வேறு சாதுவான அழுத்தங்கள் பிரயோக்கிக்கப்படுத்த முயற்சிக்கப்படுகின்றன. செய்தியப் போடு....., செய்தியை எடு....., Comment ஐப் போடு.....Comment ஐ எடு.....
சம்பந்தப்பட்டவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் ஒன்றும் கிள்ளுக் கீரைகளும் அல்ல, அன்னக் காவடிகளும் அல்ல. நாம் சகல வழிகளிலும் ஒரு பலமான நிலையில் நின்றே இவ் இணையதளத்தையும், இதனுடன் சம்பந்தப்பட்ட சமுதாயப்பணியையும் முன்னெடுத்துள்ளோம். அறிவுரைகளை கண்டிப்பாக வரவேற்போம், மாறாக அழுத்தங்களையல்ல. எம்மை எவரும் தங்களுக்கு ஏற்றவகையில் மட்டும் செயற்படவைக்க முனைவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை. நாம் எல்லோருக்காகவுமே சமநிலையில் நின்று செயற்பட முயற்சிக்கின்றோம்.
இவ் இணையதளம் எவருக்கும் சார்பாகச் செயற்படாது, அதேநேரம் எவரையும் புறம் தள்ளவும் மாட்டாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். பொதுவான வல்வெட்டித்துறை என்ற கொள்கையில் எல்லோரும் பணிபுரிவோம்.
வருத்தம் தெரிவிக்கின்றோம்
ஆனாலும் எமது சில தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக கடந்த நெடியகாடு விளையட்டுக்கழக இறுதி நிகழ்வுகளில் விருந்தினர்களில் ஒருவராக வருகை தந்திருந்த வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்களின் பிரசன்னம் பற்றி பிரஸ்தாபிக்கப்படவில்லை என சில வாசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை வேண்டும் என்று நிகழ்பவையல்ல. பொதுவாக உத்தியோகபூர்வ அழைப்பிதழ்களின் அடிப்படையில் செய்திகள் எழுதப்படுவதானாலும், செய்திகள் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்டோரால் பதிவேற்றப்படுவதாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
இயன்றவரை எமது தவறுகள் திருத்தப்படும். தொடர்ந்தும் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை அனுப்புவீர்கள் என்று பெரிதும் நம்புகின்றோம்.