வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் – ஒரு
ஆய்வுக் கட்டுரை - அ.ஆதவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2014
About writer: அ.ஆதவன்
பருத்தித்துறை (Point Pedro) – BA 827, BA 828 ஆகிய British Admiralty Charts எனப்படும் உத்தியோகபூர்வ வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யாழ் தீபகற்பத்தின் 3 இடங்களில் இதுவும் ஒன்றாகும். (குறித்த வரைபடங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன).
ஆரம்ப காலங்களில் பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக தொழிற்பட்டதாகவும் இதனால் பருத்தித்துறை எனப் பெயர் பெற்றதாகவும் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பருத்தித்துறையின் ஆங்கிலப் பெயரான “Point Pedro” ஆனது, இலங்கையின் கரையோரப் பிரதேசம் ஊடாகப் பயணித்த ஒல்லாந்து மாலுமியான ‘பெட்ரோ” வினால் பெயரிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ் தீபகற்பத்தில் இன்றும் ஆங்கிலத்தில் புழங்கிவரும் ஒரு சில இடங்களின் பெயர்களில் “Point Pedro”வும் ஒன்றாகும்
பருத்தித்துறை வடமராட்சியின் முதலாவது பிரதான நகராகவும், யாழ் மாவட்டத்தின் இரண்டாவது பிரதான நகராகவும் விளங்கும் ஒரு பிரதேசமாகும். மேலும் இது வடமராட்சி வலயத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டு மையமாகவும் விளங்குகின்றது. அத்துடன் முன்னணிப் பாடசாலைகள், பாரிய மைதானங்கள், நீதிமன்றம், சீரான சந்தைத் தொகுதி என மிக நீளும் மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் விடயங்களைக் கொண்டவை.
அத்துடன் யாழ் நகருக்கு அடுத்ததாக, இந்த பருத்தித்துறை நகரம் மிகவும் திட்டமிடப்பட்டு முன்னரே கட்டப்பட்டுள்ளது என்பதும் கண்கூடு. அதாவது பாதைகள் மிகவும் நேர்த்தியாகவும், ஒன்றுக்கொன்று சமாந்தரமாகவும், செங்குத்தாகவும் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளான ஹாட்லிக் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் பாடசாலை என்பவை பருத்திதுறையிலேயே அமைந்துள்ளன.
பல தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்பாணத்தின் முக்கிய இறங்கு துறைகளாக விளங்கியவை காங்கேசந்துறை, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, காரைநகர் மற்றும் கச்சாய் ஆகும். இதில் பருத்தித்துறை மற்றும் காங்கேசந்துறை என்பன மட்டுமே தற்பொழுது ஓரளவு பாவனையில் உள்ளவையாகும். இனிமேலும் தொடர்ந்து பாவனைக்கு வரக்கூடியவையுமாகும்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் பருத்தித்துறைக் கரையோரமும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் - கேந்திர முக்கியத்துவம்
பருத்தித்துறை துறைமுகம் இலங்கையின் வட முனையில், யாழ் தீபகற்பத்தின் வடகிழக்குத் திசையில் வங்காள விரிகுடாப் பகுதியில் (Bay of Bengal) அமைந்துள்ளது. அத்துடன் இது இந்தியாவின் தமிழகத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள கோடியாக்கரையிலிருந்து (Point Calimere) வெறும் 35 கடல் மைல்கள் தொலைவிலேயே அமைந்துள்ளது. இதனால் பருத்தித்துறை மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ததாகக் கருதப்படுகின்றது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறையானது 1985 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து 1996 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் இது 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு 2009 ஆம் ஆண்டு வரை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த வருடம் 2012 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 19 ஆம் திகதி அன்று பருத்தித்துறை துறைமுகம் மற்றும் இறங்குதுறைப் பகுதிகள் உத்தியோக பூர்வமாக மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அப்பொழுது சில கட்டுப்பாடுகள் நிலவி வந்தாலும், தற்பொழுது பொது மக்கள் முன்னர் போல செல்லக்கூடியவாறு உள்ளதை அவதானிக்கக்கூயதாகவுள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த துறைமுகம் பரபரப்பான ஒரு துறைமுகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பல இடங்களில் எம்மவரால், எதுவித ஆய்வுகள் மற்றும் ஆதாரங்கள் இன்றி தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
பருத்தித்துறை துறைமுகம் வங்காள விரிகுடாப் பகுதியில், புராதன இறங்குதுறையாக விளங்கிய வல்வெட்டிதுறைக்கு 5 கடல்மைல்கள் தொலைவில் கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. தற்பொழுது பருத்தித்துறை துறைமுகத்துக்கு அண்மையில் நேரடியாகவுள்ள துறைமுகங்கள் காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் சென்னை என்பனவாகும்.
பருத்தித்துறையின் தென்கிழக்குப்பகுதியில் பருத்தித்துறையிலிருந்து முல்லைத்தீவு வரையுள்ள கரையோர நிலப்பகுதியை அண்டியுள்ள கடல் பகுதி “Pedro Channel” எனப்படுகின்றது. இதன் ஆழம் சுமார் 11.4 மீற்றர்கள் ஆகும். ஆனால் இக்கடல் பகுதிக்கு (Pedro Channel) கிழக்காக கடலின் ஆழம் குறைவாகவுள்ளது. இது Point Pedro Shoal எனப்படுகின்றது. இதற்கு அப்பால் கிழக்காக உள்ள வங்காள விரிகுடாப்பகுதி மீண்டும் ஆழமாகி, ஆழம் 1000 தொடக்கம் 3000 மீற்றருக்கு மேல் செல்கின்றது.
பருத்தித்துறைக்கு வடக்காக (அதாவது பருத்தித்துறை கடற்பரப்பு என நாம் கூறுவது) உடனடியாக உள்ள கடற்பகுதி, குறிப்பிடக்கூடிய கூடிய சுமார் 11 மீட்டர் ஆழத்தைப் பெற்றுள்ளது. ஆனாலும் இதற்கும் மேலாகவுள்ள கடல் பகுதி (வடமராட்சிக்கும் தமிழகத்துக்கும் இடைப்பட்ட பகுதி) ஆழம் குறைந்ததாகவேயுள்ளது. இதனாலேயே சேது சமுத்திரத் திட்டம் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனாலும் பருத்தித்துறை கடற்பரப்பில் சிறிய கப்பல்கள் வந்து நங்கூரமிடக் கூடிய சாதகங்கள் தொடர்ந்து உள்ளன.
Admiralty Tide Table என்னும் உலகத்தில் உள்ள துறைமுகங்கள், மற்றும் துறைமுகங்களை அண்டிய நீர்நிலைகளின் அன்றாட கடல் மட்டங்களைக் (வற்று மற்றும் பெருக்கு) விபரிக்கும் உத்தியோகபூர்வப் புத்தகத்தில், இரண்டாவது நிலை துறைமுகப் பகுதியாக (Secondary Port) இலங்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில இடங்களில் பருத்தித்துறையும் ஒன்று என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஏனையவை Galle, Mirissa, Tangalle, Hambantota, Batticaloa road, Jaffna, Kayts, Jaffna lagoon, Delft Island என்பனவாகும்.
பருத்தித்துறை இறங்குதுறை
கீழே படங்களில் காட்டப்பட்டுள்ளவை பருத்தித்துறை இறங்குதுறையின் தற்போதைய தோற்றமாகும்.
இவ் இறங்குதுறை தற்போதும் பாவிக்கப்படக்கூடிய நிலையிலேயே யுள்ளது. அத்துடன் மேலும் இலகுவாக விரிவாக்கக்கூடிய ஏது நிலைகளைக்கொண்டுள்ளது. 1990 ஆம் ஆண்டிலிருந்து 1996 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்பாணத்துக்கான முழு விநியோகமும் இதனூடாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தமை இங்கு
கவனத்தில் கொள்ளத்தக்கது.
பருத்தித்துறை வெளிச்சவீடு – Point Pedro Light house
பருத்தித்துறை வெளிச்சவீடானது பருத்தித்துறை இறங்குதுறையிலிருந்து கிழக்காக சுமார் 350 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது யாழ் தீபகற்பத்தில் வழமையாகக் கட்டிடங்கள் கட்டப்படுவதை ஒத்த ஒரு கட்டுமானமானத்தைப் பெற்ற ஒரு கட்டடமாகும்.
ஒளியின் தன்மை – விட்டு விட்டு எரியும் வெள்ளை நிறம், 0.5 வினாடி
கோணம் – 090 பாகையிலிருந்து 330 பாகை வரையான 240 பாகை கோணம்
பருத்தித்துறை துறைமுகம், இறங்குதுறை மேலும் வளருமா?
இந்த துறைமுகம் பரபரப்பான ஒரு துறைமுகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எம்மவர்களால் பெரிதாக அலட்டிக் கொள்ளப்படுகின்றது. இதற்குரிய அனுகூலமான சில காரணிகள் இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. அதாவது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம், இயற்கையாக அமையப்பெற்ற கடற்பரப்பு, விரிவாக்கம் செய்யக் கூடிய இறங்குதுறை, நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள், சுங்கம் என பல்வேறு நிர்வாக வசதிகளைக் கொண்டுள்ளமை போன்றவை துறைமுகம் அமைய சாதகமானவையாகும்.
ஆனாலும் பருத்தித்துறை துறைமுகம் இப்போதைக்கு பெரியளவில் தொழிற்படக்கூடிய சாத்தியங்கள் மிகக்குறைவே. தலைநகரிலிருந்து சிறந்த தரைப் போக்குவரத்து, பளை வரை வந்துள்ள புகையிரதப் போக்குவரத்து, யாழ்பாணத்தின் ஏற்றுமதிப் பொருட்களின் அளவு போன்றவை சாதகமற்ற உடனடிக் காரணங்கள் ஆகும்.
பல வருடங்களின் பின்னர் பதவியேற்றுள்ள வடமாகாண சபையின் திட்டங்களிலும் இவை உடனடியாக அமைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் தற்போதைய வடமாகாணசபை அமைச்சில் பதவி வகிப்பவர்களில் கடலியல் மற்றும் துறைமுகம் சார்ந்த கல்விப் பின்புலம் மற்றும் அனுபவங்கள் எந்தளவிற்கு உள்ளன என்பதும் தெளிவாகவில்லை.
இலங்கையில் சகல துறைமுகங்களும் இலங்கை அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் கீழேயேயுள்ளன. இலங்கை அரசின் திட்டங்களிலும் பருத்தித்துறை துறை முக விரிவாக்கம் பற்றி எந்தத் திட்டமும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இவை போன்ற பல விடயங்களை நோக்குமிடத்து பருத்தித்துறை துறைமுகம் தற்பொழுது பாரிய விருத்தி எதனையும் கொள்ளாது என்றாலும், இன்றைய உலகின் பொருளாதாரம் துறைமுகங்களில் பெரிதும் தங்கியிருப்பதால் பல ஆண்டுகள் பின்னராவது பருத்தித்துறை துறைமுகம், சிறந்த முறையில் தொழிற்படும் என்பது உண்மையாக இருக்கக்கூடும்
பருத்தித்துறை துறைமுகம்
References
1. British Admiralty Chart 827, 828
2. Admiralty Sailing Direction West coast of Indian pilot 38
3. Admiralty Tide Table – Indian Ocean & South China Sea (NP203)