“நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகை நீலகண்டன் சேர்"
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2015
About writer: உடுவை.எஸ்.தில்லைநடராசா
ஆறாம் வகுப்பு என்ற நினைவு.! ?..ஆம் ! ..அந்த நினைவு சரி தான் !
1958 ம் ஆண்டில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் ஆறாம் வகுப்பின் ஆரம்பத்தில் எங்கள் வகுப்புக்கு தமிழ்ப்பாடம் கற்பிக்கும் ஆசிரியராகவும் சாரண ஆசிரியராகவும் திருமிகு.நீலகண்டன் ஆசிரியரை அறிந்து கொள்கின்றோம். ஆசிரியரைப் பற்றி சிறு வயது மாணவர்கள் எங்களுக்குள் பரிமாறிய அபிப்பிராயங்கள் பல இன்னும் என் நினைவில் பசுமையாக .......
எங்கள் கல்லூரியில் அக்காலத்தில் கல்வி கற்பித்த ஏனைய ஆசிரியர் களோடு ஒப்பிடும்போது உயரத்தில் சற்று குறைவானவராகவும் மெலிந்த தோற்றம் கொண்டவராகவும் எமது பார்வையில் தெரிந்தவர் ---ஆசிரியர் நீலகண்டன். அவரது அரைக் கை சேட்டும்-சேட்டுக்கு மேலால் வேட்டி கட்டும் பாணியும் ஒருவகையான துள்ளல் நடையும் சுறுசுறுப்பான செயற்பாடுகளும் ஆசிரியர் நீலகண்டனை ஏனைய ஆசிரியர்கள் பலரிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது. பெரும்பாலும் தூய வெள்ளை நிறத்தில் அல்லது மிகமெல்லிய பச்சை நிறத்தில சேட்., நீளக்கை சேட் அணியும் நாட்களில் முழங்கை வரை உருட்டி விட்டிருப்பார். பொன்னிறமான அவர்நெற்றிக்கு திருநீறு சுந்தரப் பொலிவைக் கொடுத்தது. சிலநேரங்களில் நெற்றியில் பொட்டுடனும் காதில் பூவுடனும் பார்த்ததாக நினைவு.
நடை உடை தோற்றத்தால் சில ஆசிரியர்களைப் பார்த்த மாத்திரத்தில் பயப்படத் தொடங்கிய என் போன்றவர்களுக்கு நீலகண்டன் ஆசிரியரைப் பார்த்ததும் அவரை சமாளித்துப் போடுவம் என்ற எண்ணமும் இருந்தது. சொல்லி வைத்தது போல கரணவாய் என்னும் கிராமத்திலிருந்து ஆசிரியரின் பெயரைக் கொண்ட மாணவன் ஒருவனும் புதிதாக எங்கள் வகுப்பில் சேர்ந்து கொண்டான். முதல் நாள் வகுப்பறையில் மாணவர்கள் நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் பெயரைச்சொல்லி மாணவர்களாகிய எங்களை ஆசிரியர் நீலகண்டனுக்கு அறிமுகம் செய்யத் தொடங்கினோம்., மாணவன் நீலகண்டனும் எழுந்து “வணக்கம் சேர். எனது பெயர் நீலகண்டன் ‘ என்றதும் , ஆசிரியர் சிரித்துக்கொண்டே “நல்லது நான் இரு” என்றார். நீலகண்டன் ஆசிரியரோடு சேர்ந்து நாங்களும் சிரித்தோம்.
எங்கள் வகுப்பிலுள்ள மற்ற மாணவர்களின் பெயர்களைச் சொல்லி ‘இரு’-‘எழும்பு’ ‘புத்தகத்தை வாசி’ ‘பதில் சொல்லு’ என்று கட்டளை பிறப்பிக்கும் போது, மாணவன் நீலகண்டனின் பெயரைச் சொல்லாமல் ‘நான் எழும்பு ‘ நான்சொல்லு ‘ என்று ஆசிரியர் நீலகண்டன் சொல்லும்போது வகுப்பறையில் சிரிப்பொலி அலைமோதும்.
சிரிப்பொலி அலைமோதிய தெல்லாம் சில நாட்களுக்குத்தான்., “நீலகண்டன் ஆசிரியரை சமாளித்துப் போடுவம்” என எங்கள் மனதில் இருந்த எண்ணம் படிப்படியாக மாறத் தொடங்கியது. வகுப்பறையில் நுழையும்போது எங்களது ‘வணக்கம் சேர்’ வரவேற்புக்கு –புன் சிரிப்புடன் பதில் வணக்கம் சொன்னாலும், எங்களால் அலட்சியம் செய்ய முடியாத வகையில் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் கூடிய வகையில் கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகள் தொடர்ந்தன.
மாணவர்களாகிய நாங்கள் வழி மாறிப் போகும்போது வாங்கிக் கட்டிய நிகழ்வொழுங்குகளும் நடந்தேறியது. அப்படியான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் நீலகண்டன் ,”அடியைப்போல அண்ணன் தம்பி .......” என ஆரம்பிக்கும் வார்த்தைகளைச் சொல்லி முடிக்காமல் இழுக்கும்போது, “...உதவான்” என்று நாங்களே சொல்லி முடித்ததும், ஆசிரியர், சிரித்துக்கொண்டே –‘அப்ப வா ..’ என அழைத்து பிரம்பால் சாத்திய நினைவுகளும் இன்னும் மனத்திரையில்., அடி வாங்கியது அப்போது மெல்லிய வலி போலத்தெரிந்தாலும்-அவை எம்மை நெறிப்படுத்திய நல்ல வழிகளாக இப்போது உணர முடிகிறது.
முறையான கல்வியும் நல்லொழுக்கமும் மாணவர்களால் பின்பற்றப்பட வேண்டுமென்பது அவரது எதிர்பார்ப்பு. ஏதாவது ஒன்று குறையும் போது தண்டனைக்கு ஆளாவோம். தண்டனை மூன்று வகைப்படும். பிரம்பால் வழங்கப் படும் “பிரப்பம்பழ தண்டனை” ஆகக் குறைந்த தண்டனை. “கிட்ட வா ” என்று உரத்த குரலில் கூப்பிடும்போது, கூப்பிடும் தொனியும், அவர் கரத்தில் நடனமிடும் பிரம்பும் மனதில் ஒருவகை பயத்தை ஏற்படுத்தினாலும் அடிகள் உறைத்ததாக யாரும் முறைப்பட்டதாக உணரமுடியவில்லை. காலப்போக்கில் திருக்குறள் படித்த போது –“கடிதோச்சி மெல்ல எறிக ...” என்ற குறளை ஆசிரியர் நீலகண்டன் பின்பற்றியதை விளங்கிக்கொள்ள முடிந்தது. அதாவது அவரின் ஏச்சும் பேச்சும் நோக வைக்கும்., பிரம்பால் தரும் அடி நோக வைக்காது.
அடுத்த வகையான தண்டனையை “நுள்ளு ஸ்பெஷல்” என்போம். அவரது பெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் மாணவரது முழங்கைக்கு மேலுள்ள சதை அகப்படும்போது “ஆ ...” என்ற மாணவரது சத்தமும், நிலத்திலிருந்து சில அங்குல உயரத்துக்கு மேலும்மேலும் எழும் குதிக்காலும் மீண்டும் தவறிழைக்கும் சந்தர்பத்தை தவிர்த்துக்கொள்ளும்.
மூன்றாவது தண்டனை அதிக பட்ச தண்டனை. அதை அனுபவித்தவர்கள் குறைவுதான். உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றை சேர்க்கச் சொல்லி, மூன்று பென்சில்களை விரல்களுக்கிடையில் வைக்கச்சொல்லி, அப்படியே கைகளை மேசையில் அடிக்கச்சொல்வார். யாரவது ஒரு மாணவன் அப்படிச் செய்வதை பார்த்து, மற்ற மாணவர் தாமாகவே தங்கள் உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றை சேர்த்து , மூன்று பென்சில்களை விரல்களுக்கிடையில் வைத்து கைகளை மேசையில் ஓங்கி அடித்தால் தண்டனையின் அளவை புரிந்து கொள்வர்.
அனேகமாக ஒருமுறை ஆசிரியர் நீலகண்டனால் தண்டிக்கப் பெற்றோர் மறுமுறை தண்டிக்கப் பட்ட நிகழ்வு குறைவு என்று சொல்வதை விட இல்லை என்பது பொருந்தும். அதனால் எங்களை நாங்கள் உணர்ந்து கொள்ள தவறு விடும் சந்தர்ப்பங்கள் இல்லாமலே போய்விட்டது.
அவருக்கே உரித்தான பாணியை தெரிந்து கொள்ள எனக்கு இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது.
1960 என நினைவு. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த உற்சவகாலத்தில் சாரணர்களை ஆசிரியர் நீலகண்டன் அழைத்துச் சென்று ஆலயத்துக்கு அருகாமையில் கூடாரம் அமைத்து தங்க ஒழுங்குகள் செய்தார். கோவிலிலும் சுற்றுப்புறங்களிலும் ஆலய நிர்வாகத்துக்கும் பொலிசாருக்கும் உதவியாக கடமையாற்றினோம். கடமை தவிர்ந்த நேரங்களில் சமையல், தையல், முதலுதவி என்று பல விடயங்களைப் பயின்று கொள்ள ஒழுங்குகள் செய்யப்பட்டது.
இரவு வேளையில் உணவையடுத்து காம் பயர் Camp-fire என்ற நிகழ்வு. வெளியில் நிலவொளியில் நாங்கள் ஆடுவோம்., பாடுவோம்., நாடகம் நடிப்போம்.,கதை சொல்வோம்.,கருத்துப் பரிமாறிக்கொள்ளவோம். ஒருநாள் இரவு வெளியே சென்ற ஆசிரியர் நீலகண்டன் வெகுநேரமாகியும் வரவில்லை. மாணவ நண்பர்கள் என்னை உற்சாகப்படுத்தி சூடேற்ற நான் சில ஆசிரியர்களை போல மிமிகிரி செய்ய ஆரம்பித்தேன். அந்த ஆசிரியர் பட்டியலில் சாரண ஆசிரியர் நீலகண்டனும் உள் வாங்கப்பட்டார். அவரது தோற்றத்தை வைத்தே எனது கேலி நடிப்பு அரங்கேறியது.
எல்லோரும் நன்கு ரசித்துக்கொண்டே சிரிக்கையில் ஒருவன் மாத்திரம் கண்களாலும் கைகளாலும் என்னைத் திரும்பிப் பார்க்கும்படி சைகை செய்ய மெதுவாகத்தான் திரும்பினேன். அங்கே ... ஆசிரியர் நீலகண்டன். அன்று எனக்குக் கிடைத்த தண்டனை சற்று வித்தியாசமானது.
“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று சொல்லி விட்டு, விளங்குதோ எனவும் கேட்டார். நான் இல்லை என்பதன் அடையாளமாக தலையை ஆட்டினேன். திருக்குறளில் ‘வினைத்திட்பம் ‘ அதிகாரத்தில் “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” குறளைப் படி .,விளங்கும் என்றார்.
அதன் பின்னர் தான் கல்லூரியில் சகல ஆசிரியர்களையும் இவர் “சேர்” என்றும் “மாஸ்டர்” என்றும் பண்பாக அழைத்தன் பக்குவத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்படிப் பல உதாரணங்கள். மாணவர்களை வாசிக்கவும் எழுதவும் உற்சாகப்படுத்தி விடுவார்.
எனது ஊர், எனது கல்லூரி, கல்லூரியில் நடந்த பெற்றோர் தினவிழா ஆசிரியர் நீலகண்ட னின் கட்டளைக் கிணங்க கட்டுரைக் கொப்பியில் எழுதினாலும் அவை எனது மாணவப்பருவத்தில் பத்திரிகைகளில் பிரசுரமாகும் தரத்தையும் பெற்றத்துக்கு ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிப்பது என் கடன்.
இன்னொரு சம்பவம் :- அந்த நாட்களில் இந்தியாவிலிருந்து வரும் வார இதழான ‘குமுதம்’ சஞ்சிகையை கையில் தூக்கினால் மனதை மயக்கும் நறுமணம் கமழும். குனேகா சென்ட் என அழைக்கப்படும் வாசனைத்திரவியம் குமுதம் இதழ் அட்டையில் பூசப் படுவதால் அந்த வாசனை என்பதை அறிந்து யாழ்ப்பாணத்தில் ‘தமிழ்ப்பண்ணை’ புத்தகசாலையில் அதனை வாங்கி சிறிய பஞ்சில் குனேகா வாசனைத்திரவியத்தை தடவி காதில் வைத்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்றேன்.
மாணவர்கள் உட்பட என்னை வித்தியாசமாகப் பார்த்த ஆசிரியர் நீலகண்டன் காரணத்தைக் கேட்க, நான் சென்ட் என்றேன். அவர் சென்ட் என்ன spelling என்று கேட்க, நான் sent என்றேன். அவர் உடனே “நீ சொன்னது past tense of Send.. சரியான spelling SECENT என்றார்.
1999 ல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எனது நூல் வெளியீட்டில் கவி வாழ்த்து பாடி என்னை ஆசிர்வதித்தையும் நினைத்துப்பார்க்கின்றேன்.
இப்படி ஒவ்வொரு சந்தர்பத்திலும் ஒவ்வொன்று சொல்லித்தந்ததை இன்றும் நினைத்துப்பார்க்க ஒருபுறம் அவரது மாணவனாகவே இருந்தது பெருமை. எனினும் அவரது இழப்பு எம்மவருக்கு பேரிழப்பு என்றே உணர வைக்கின்றது.
உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரை உலகமெங்கும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர், அவரது முழுப் படைப்புகளும் நூலாகி உலகமெங்கும் உலவ வழிகாட்டிய பெருமையும் அமரர் நீலகண்டனுக்கு உரியது.
தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை மிக்க ஆசிரியர் நூற்றுக்கு மேற்பட்ட பிரபந்தங்களை யாத்துள்ளதாகவும், கடைசியாக காலமாவதற்கு சில தினங்கள் முன்பாக கந்தவன மணிமாலை என்னும் பிரபந்தத்தை யாத்ததாக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் செல்லத்துரை சுதர்சன் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பானைக்கு ஒரு சோறு என்பது போல அவர் உருவாக்கிய நூற்றுக் கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்ற நன்றியுடன், அவரின் ஆத்மா சாந்தியடையவும், அவரது பிள்ளைகள் நல் வாழ்வுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.