யாழின் இன்றைய மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்திருப்பது நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்படுதல், இப்பிரச்சினை இன்றுடன் மட்டும் நின்று விடப்போவதில்லை, ஏனெனில் கலக்கப்பட்டுள்ள கழிவு எண்ணெய்யை அவ்வளவு எளிதில் நிலத்தடி நீரிலிருந்து அகற்றிவிட முடியாது. இத்தனைக்கும் இப் பிரச்சினைக்கான மூல காரணம், வடக்கின் மின் உற்பத்தி நிலையமான சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளிவரும் கழிவு எண்ணெய், கடந்த பல ஆண்டுகளாக நேரடியாக நிலத்திற்குள் கொட்டப்படுவதாகும்.
ஒருகாலத்தில் குடாநாட்டுக்கு தேசிய மின்சாரம் கிடைக்கப்பெறாத நிலையில்தான், இத்தகைய பார எரிபொருள் எண்ணெய்யை (Heavy Fuel Oil) பயன்படுத்தும் மின் பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
இப் பார எரிபொருள் எண்ணெய்யை (Heavy Fuel Oil) பயன்படுத்துவதால் நிறுவனங்களுக்கு சிக்கனமாக இருக்கும், ஆனால் அதிகளவான கழிவு எண்ணெய் வெளியேற்றப்படும். இவற்றை வெளியேற்ற Waste Oil Separater போன்ற தகுந்த தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும். ஆனால் கடந்த 25 வருடங்களாக சேவையில் இருந்த நிறுவனங்கள், இக் கழிவு எண்ணெய்யை நேரடியாக நிலத்தினுள் கொட்டி வந்தமையே இத்தகைய நீர் மாசுபாட்டு நிலை தோன்ற காரணமாயிற்று.
வடக்குக்கான தேசிய மின் வழங்கல் சேவை
கடந்த 25 வருடங்களாக யாழ் குடாநாடு தேசிய மின் வழங்கல் சேவை (National Grid System) தொடர்பற்றிருந்த நிலையில், மின்பிறப்பாக்கிகள் மூலம் குடாநாடு மின்சக்தியை பெற்று வந்தது. இதற்காக குடாநாட்டு மக்கள் பெரும் பணக் கொடுப்பனவுகளை செய்யவேண்டியிருந்தது. அத்துடன் யாழ் குடா நாட்டின் மின்பிறப்பாக்கிகளின் கழிவு எண்ணெய் கசிவு மூலம். நிலத்தடி நீரூம் மாசுபடுத்தப்பட்டு வந்தது
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் யாழ் குடாநாடு தேசிய மின்னிணைப்பை பெற்றிருந்தது. எனவே சர்ச்சைக்குள்ளாகியுள்ள சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தை மூடினாலும் பெரியளவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் லக்ஸபான போன்ற பிரதான மின்வழங்கும் நிலையங்களில் ஏற்படும் உற்பத்தி பற்றாக்குறை காரணமாக பின் நாட்களில் குடா நாட்டுக்கு மின் தடைகள் ஏற்படலாம்.
மின்சார உற்பத்தி பற்றாக்குறையும் மாற்று வலு மின் உற்பத்தியை நோக்கி நகர வேண்டிய தேவையும்.......
ஏனெனில் வடக்குக்கு லக்ஸபான நீர் மின்நிலையம் மூலமே பெருமளவு மின்சாரம் கிடைக்கப் பெறுகிறது. லக்ஸபான நீர்த்தேக்கத்தில் நீரின் மட்டம் குறையும் போது மின் உற்பத்தியும் குறைவடையும். கடந்த காலங்களில் யாழ் குடாவிற்கு 8MW மின்சாரமே தேசிய மின்வழங்கல் மூலம் வழங்கப்பட்டு வந்தது . இது இன்றைய சூழ்நிலையில் 2500MW க்கும் அதிகமாயுள்ளது. எனவேதான் மின் பற்றாக்குறை ஏற்படும் என்பது எதிர் பார்க்கப்படும் நிலையாக உள்ளது.
எனவேதான் இந் நிலை வடக்கு மக்கள் மாற்று வலு மின் உற்பத்தியை நோக்கி நகர வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது.
காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி
இயற்க்கைக்கு ஒத்திசைவான மாற்றுவலுத் தெரிவுகளில் உலகில் அதிகளவான மின் அலகுகளை உற்பத்தி செய்யக்கூடிய மாற்று வலுவாக காற்றாலைகள் திகழ்கின்றன. இவை பல நாடுகளில் அரசாங்கங்களே அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இலங்கையைப் பொறுத்த வகையில் காற்றாலைகள் மூலமும் மாற்று வலு மின்னினைப் பெற்றுக்கொள்ளலாம். வடக்கைப் பொறுத்தவரை அரசால் இவற்றுக்காக பளையில் ஒரு சில காற்றலைகள் அமைக்கப்பட்டு, அவை செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .
ஆனால் காற்றாலைகளை அமைக்கப் பொருத்தமான இடங்கள் என்பது வடக்கில் ஒரு சிலவே, அத்தோடு அதிக பொருட்செலவானது, இத்தகைய காற்றாலைகளில் அரசாங்கம் போன்ற பெரிய ஸ்தாபனங்களே முதலீடு செய்யக்கூடியதாயுள்ளது. சிறியளவிலான காற்றாடிகள் சூரியக் கலங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பதோடு, அவை சிறியளவிலான மின் தேவையையே நிவர்த்தி செய்யக்கூடியதான வகையில் சந்தையில் கிடைக்கின்றன.
சூரிய சக்தி மின் பிறப்பாக்கிகள்
வடக்கைப் பொறுத்தவரை மாற்று வலுத் தெரிவுகளில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது சூரிய சக்தியிலிருந்து மின்னினைப் பெறுவதேயாகும்.
ஆனால் சூரியசக்தி மூலம் மின்னை பிறப்பிக்கும் சோலார் கலங்களை (Solar panel) இலகுவில் எமது வீடுகளிலேயே பொருத்திக் கொள்ளலாம், இதற்கான தொழில் நுட்பங்களும் இலகுவில் எமக்கு கிடைக்கும்.
கடந்தகாலப் போர்ச் சூழலில், மின்தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகள் வந்த போதெல்லாம் இந்த சூரியக் கலங்களையே மக்கள் பயன் படுத்தி வந்தனர். அக்காலங்களில் தொலைத்தொடர்பு நிலையங்களிலும் ஒருசில வீடுகளிலுமே இவை பயன்படுத்தப்பட்டு வந்தன. அதற்கு முக்கிய கரணம் அதன் விலை அதிகமாக இருந்தமை. ஆனால் இன்று அவ்வாறில்லை.
அமெரிக்காவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் விருது பெற்ற விஞ்ஞானியுமான பேராசிரியர் Dr.சிவா சிவானந்தன் அவர்கள் தனது யாழ் வருகையின் போது, சூரிய சக்தியை பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பில் இலங்கையின் பல்வேறு பேராசிரியர்களுடன் கலந்துரையாடியதோடு, சூரிய சக்தி தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு தனது நிறுவனம் முழு ஆதரவு தருமெனவும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
அவர் குறிப்பிட்டது போல சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கப் பொருத்தமான பிராந்தியமாக வடக்கு காணப்படுகிறது, இங்கு வருடத்தின் அதிகளவு நாட்களில் வெய்யில் தான் அதிகம். அத்தோடு பரந்தளவிலான பயன்படுத்தப்படாதுள்ள நிலங்களும் அதிகம். ஆனால் நாட்டின் அரசாங்கம், வடக்கில்மாற்று மின்வலு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தும் நிலைப்பாட்டில் இல்லை, மக்களாகிய நாமும் அரசை எதிர்பார்த்தபடி உள்ளோமே தவிர சுயமாக முயற்சித்துப்பார்ப்போம் என்ற எண்ணத்தில் இல்லை .
சூரிய சக்தி மின் பிறப்பாக்கிகளின் தொழிற்பாடு
சரி இனிமேல் விடயத்திற்கு நேரடியாகவே வருவோம், அதிக சிக்கனமானதும் சூழலுக்கு ஒத்திசைவானதுமான இந்த சூரிய சக்தி மின்பிறப்பாக்கிகள் மூலம் எவ்வாறு வீட்டுக்குத் தேவைக்குத் தேவையான மின்னினனைப் பெறலாம் எனப் பார்ப்போம்.
சூரியனின் ஒளி மற்றும் வெப்பமானது, இந்த சூரியக் கலங்களின் (Solar Panel) போட்டோ செல்களின் (Photocell) மூலம் மின்னாக மாற்றப்பட்டு பிரத்தியக மின் சேமிப்புக்கலங்களில் (Baterary) சேமிக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நேரோட்ட மின்னானது (Positive current) விசேட இன்வேர்ட்டர் (AC Inverter) ஊடாக வீட்டுக்கு தேவையான ஆடலோட்ட மின்னாக (Alternative Curent) மாற்றப் படுகிறது. இவ் AC மின்சாரமானது விசேடமான தன்னியக்க சென்சர் ( Auto Voltage Changeover Sensor ) மூலம் இலங்கை மின்சார சபையின் மின் இணைப்பு கம்பிகளுடன் நேரடியாக இணைக்கப்படும்.
இவ் Auto Voltage Changeover Sensor ஆனது சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தியாகும் போது இலங்கை மின்சார சபையின் மின்னினைப்பை இடை நிறுத்தி வைக்கும், சூரிய சக்தி மின்னுற்பத்தியாகாத வேளைகளில் தன்னியக்கமாகவே தேசிய மின்னினைப்புடன் தொடர்பினை ஏற்படுத்தும்.
எனவே பகல் முழுவதும் சூரிய சக்தியின் மூலம் மின் கட்டணத்தை குறைத்து, அல்லது முற்றாகவே நீக்கிக் கொள்ளலாம். இரவு வேளைகளில் சேமிக்கப்பட்ட மின்சக்தியினூடாக மேலதிக மின்சாரத்தையும் பெறலாம். அவ்வாறு சேமிக்கப்பட்ட மின்சாரம் குறைவாக உள்ள போது Auto Voltage Changeover தானாகவே
மின்சேவையை மாற்றித் தேசிய சேவையுடன் இணைக்கும், இதன் மூலம் இரவில் பயன்படுத்தும் மின் அலகுக்கான கட்டணம் குறைவாவே இருக்கும்.
இவ் சூரிய சக்தி மின் பிறப்பாக்கி மூலம் பகல் தேவைகளுக்கான மின்சார கட்டணம் முற்றாக இல்லாததுடன், மேலதிக மின்னுற்பத்தியானது மின்கலங்களின் மூலம் சேமிக்கப்படுவதால் இரவிலும் மின்சார கட்டணம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
அத்தோடு இச் சூரிய சக்தி மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தியாகும் மேலதிக மின்சாரமானது, தேசிய மின்வழங்கலுக்கு (National Grid System) அனுப்பப்படும். இதன் மூலம் நாட்டின் மின்சார உற்பத்திக்கும் வீட்டிலிருந்தவாறே நாமும் பங்களிப்பு செய்யலாம். இத்தகைய மேலதிக மின்சாரமானது மின்மானி மூலம் கணிக்கப்பட்டு எதிர்வரும் மாதத்தில் மின்கட்டணத்தில் கழிக்கப்படும், இதனால் மின்கட்டனமானது மேலும் பலமடங்காக குறையும். இதுவும் ஒரு மிகமுக்கியமான பலனாகும்.
சூரிய சக்தி மின் பிறப்பாக்கிகளை பொருத்துதல்
இத்தகைய சூரிய சக்தி மின் பிறப்பாக்கிகளை எமது வீடுகளிலும் பொருத்திக் கொள்வது எப்படி? இவ் மின் பிறப்பாக்கிகளை எங்கே, எவ்வாறு, பெற்றுக் கொள்ளலாம்? இதற்கான விசேட இணைப்புக்கள் அவசியமா? என்று ஆராய்ந்து பார்க்கையில் இவை அனைத்துமே இலகுவானவை.. ஒன்றைத்தவிர.......
இத்தகைய சூரிய சக்தி மின் பிறப்பாக்கிகளை எமது சராசரி மின்சார தேவையினைப் பொறுத்து 1KW தொடக்கம் தெரிவு செய்யலாம், அத்தோடு மின் உற்பத்திக்கேற்றவாறு மின்னை சேமிக்க மின்கலமும் AC ஆட்டோமற்றிக் இன்வேர்ட்டர் (DC to AC Automatic Changeover Sensor) என்பனவும் அவசியம்.
இச் சூரிய சக்தி மின் பிறப்பாக்கிகளை பொருத்திய பின்; இலங்கை மின்சார சபையிடம் அனுமதி பெற்று மின்மாணியையும், பிரதான மின் இணைப்பையும், மற்றும் சூரிய சக்தி மின் பிறப்பாக்கியின் மின்னினைப்பையும், விசேட இன்வேர்ட்டர் ஊடாக இணைத்தல் வேண்டும்.
இச் சூரிய சக்தி மின் பிறப்பாக்கிகள் சந்தையில் இலகுவில் கிடைக்கக் கூடியவாறு உள்ளன, இருந்தும் சாதாரணமாக 1KW மின்பிறப்பாக்கியை வாங்கி அதனைப் பொருத்த சுமார் 4 தொடக்கம் 5 இலட்சங்கள் முடியும். இருப்பினும் இவற்றுக்கான முதலீடு என்பது முகவும் பயனுள்ளதாகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இங்கு நீண்ட கால செலவினமான மின்சார கட்டணமானது ஒரே தடவையில் முதலீடு செய்யப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படும் மின்சார கட்டணமானது பலமடங்கு குறைக்கப்படுகிறது. இதன்மூலம் சேமிக்கும் மின்கட்டணத்துடன் ஒப்பிடும் போது ஆரம்ப முதலீட்டுச் செலவுகள் மிகவும் சிறியதாகவே அமையும். அத்தோடு இவற்றுக்கான பராமரிப்புச் செலவினங்களும் மிகவும் குறைவனதொன்றகவே இருக்கும்.
வடக்கைப் பொறுத்தவரை மாற்று வலுத் தெரிவுகளில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது சூரிய சக்தியிலிருந்து மின்னினைப் பெறுவதேயாகும். வடக்கில் வருடத்தின் அதிகளவு நாட்களில் வெய்யில் தான் அதிகம், எனவேதான் சூரிய சக்தி மின்பிறப்பாக்கிகளை வருடம் முழுதும் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. அத்தோடு காற்றாலைகளை அமைப்பதுடன் ஒப்பிடுகையில் சூரிய சக்தி மின்பிறப்பாக்கிகள் பலமடங்கு மலிவானவை பராமரிப்பு செலவும் குறைவானது. மேலும் சிறியளவிலான காற்றாடிகள் சூரியக் கலங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பதோடு, அவை சிறியளவிலான மின் தேவையையே நிவர்த்தி செய்யக்கூடியதான வகையில் சந்தையில் கிடைக்கின்றன. எனவேதான் வடக்கைப் பொறுத்தவரை சூரிய சக்தியிலிருந்து மின்னை பெறுவது சிறந்த வழிமுறையாகவுள்ளது.