வைத்தியண்ணா வல்வையின் மகத்தான ஆளுமையின் வடிவம் - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2014
About writer: கி.செல்லத்துரை
வைத்தியண்ணா வல்வையின் மகத்தான ஆளுமையின் வடிவம்..
வல்வை என்ற ஊருக்கு எது அழகு..?
விளையாட்டு, வீரம், ஒற்றுமை, ஓர்மம், அதன் வரலாறு என்று பதில்களை அடுக்கிச் செல்ல முடியும்..
இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு சிறிது அமைதியாக சிந்தித்தால் வல்வை என்பது அந்த ஊரை அடையாளப்படுத்தி வாழும் பல முக்கிய பாத்திரங்களின் தொகுப்புத்தான் என்பதை உணர முடியும்.
அப்படி காலத்துக்குக் காலம் வல்வையை அடையாளப்படுத்திய முக்கிய பாத்திரங்களில் ஒரு மறக்க முடியாத பாத்திரம்தான் வைத்தியண்ணா.
ஒவ்வொரு ஐம்பது ஆண்டு காலத்திலும், வல்வையின் வாழ்வியல் தடமானது மாற்றமடைந்து சென்றுள்ளது, அந்தக் காலங்களை அற்புதமாகப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள் காலத்திற்குக் காலம் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.. இதுதான் வல்வையின் பெருமை.
காலமும் கருத்தும் மாற்றமடைவதற்கமைய இந்தப் பாத்திரங்களின் வடிவங்களும் அவ்வப்போது மாற்றமடைந்துள்ளன, ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் வல்வை என்ற அருவமான உணர்வு இந்தப் பாத்திரங்களை எல்லாம் மாலையாக்கி வைத்திருப்பதுதான் வல்வை மாதாவின் அழகு.
அந்தவகையில் வைத்தியண்ணா என்ற பாத்திரமும் வல்வை என்ற ஊருக்கு ஓர் அடையாளமாக இருந்திருக்கிறது, கண்ணுக்கு மையழகு என்பது போல வல்வைக்கு அழகு வைத்தியண்ணா என்று சொல்லுமளவுக்கு குச்சம், கொத்தியால், காட்டுவளவு, முதிரைக்கட்டை தொடங்கி ரேவடிவரை அவருடைய சக்தி வியாபித்திருந்தது.
வல்வையில் ஒரு சாதனையாளரரைப் பேச ஆரம்பிக்கும்போது பந்தடி, நாடகம், படிப்பு, தர்மசிந்தனை, கடலோடி என்றுதான் ஆரம்பிப்பார்கள்...
இவை எதற்குள்ளுமே அடங்காத ஒரு வல்வையரை எங்காவது, எப்போதாவது பேசினார்களா என்றால்.. வைத்தியண்ணாவை அறியாதவர்கள் இல்லையென்றே சொல்வார்கள்.
ஆனால் இவைகளுக்குள் அடங்காமலே சாதனை படைக்க முடியும், வல்வை மக்கள் மனதில் தன்னை நிறுத்திக்கொள்ள முடியும் என்று வாழ்ந்து காட்டியவரே வைத்தியண்ணா..
வல்வையர் புகழென்று பேசும் அடையாளங்கள் எதுவும் அவரிடம் இல்லை ஆனால் அவர் இல்லாமல் வல்வையில் எதுவும் இல்லை.. இதுதான் வைத்தியண்ணா..
இந்த முரண்பட்ட நரம்பை நாடி பிடித்துப் பார்த்தால்தான் வைத்தியண்ணா என்ற ஆளுமையின் இதயத்துடிப்பை சரிவர எழுத முடியும்.
தான் வாழும் சூழலில் ஒரு குடும்பத்திற்கு பிரச்சனையென்றால்.. அந்த இடத்தில் வைத்தியண்ணாவைக் காணலாம்..
ஒவ்வொரு ஒழுங்கையை எடுத்துக்கொண்டால் அங்கு வாழும் சாதாரண மக்களுக்கு விளங்கக்கூடிய மொழியில், அவர்களால் இயலக்கூடிய வழியில் வழிகாட்டுவதில் அவருக்கு இணையான ஒரு கல்வியாளனை கண்டுபிடிக்க அப்பகுதியில் இயலாது.
ஒவ்வொரு குடும்பமும் நலமாக வாழ்கிறதா என்ற அக்கறை அவரிடம் இருந்தது.. தமக்கு ஏதாவது துயர் வந்தால் கண்டிப்பாக முதலாவதாக வைத்தியண்ணாவையே பார்த்து வழி கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏழைகளிடம் இருந்தது.
மற்றவரைப் புரியவும், தனக்குப் புரிந்ததை மற்றவருக்குப் புரிய வைக்கவும் அவரிடமிருந்த வல்லமை அன்று எவரிடமும் இருக்கவில்லை.
ஒரு தடவை வல்வை வடக்கு கிராமோதய சபை தேர்தலில் அவரும் நானும் எதிரெதிராக போட்டியிட்டோம்..
அப்போது எனது நண்பர் ஒருவர் ரேவடியில் வசித்து வந்தார், அவரை படுத்த பாயில் இருந்து எழுப்பி எனக்காக வாக்களிக்கும்படி அழைத்துச் சென்றிருந்தேன்..
வாக்களிப்பின்போது நான் அழைத்துவந்த நண்பர் வைத்தியண்ணாவுக்காக கையை உயர்த்தினார்.. அவருக்கு தூக்கம் கலையவில்லையோ என்று கருதி.. எனக்கு உயர்த்த வேண்டும் மாறித் தூக்கிவிட்டாயே என்றேன்..
நண்பர் வைத்தியண்ணா போட்டியிட்டால் எனது கை இன்னொருவருக்கு உயராது என்றார்..
படுக்கையில் இருந்து எழுப்பி வந்து வைத்தியண்ணாவுக்கு வாக்களிக்க வைத்திருக்கிறேனே நண்பரை படுக்கையிலேயே வைத்திருந்திருக்கலாமே என்று கருதினேன்.
இதுபோல இன்னொரு அரசாங்க ஊழியரும் எனக்காக வாக்களிக்க வீறாப்பாக வந்திருந்தார், வைத்தியண்ணாவின் கடைக்கண்ணை பார்த்ததும்தான் தாமதம் அவர் கடகடவென நடுங்கி அவருக்கே கையை உயர்த்தினார்..
என்னால் உருவாக்கப்பட்ட வல்வை பாரத் கலாமன்றத்தின் வாக்குச்சீட்டை தூக்கி வந்த நபரும் என்முன்னாலேயே வைத்தியண்ணாவுக்காக கரத்தை உயர்த்தினார்.
ஏன்..?
ஆழமாகச் சிந்தித்தேன்.. வைத்தியண்ணா என்ற பாத்திரத்தின் ஆளுமை அப்படி.. ஒரு படித்தவனாலோ அல்லது பணக்காரனாலோ எட்டித்தொட முடியாத உயரம் அது.
எனக்கும் வைத்தியண்ணாவுக்கும் சமமான வாக்குகள் விழுந்த காரணத்தால் அன்றைய தேர்தல் குழம்பிவிட்டது..
மறுபடியும் நடந்தபோது வைத்தியண்ணாவுடன் போட்டியிட நான் விரும்பவில்லை, ஆனால் இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் வைத்தியண்ணா..
என்னை வீழ்த்தி அவரோ அவரை வீழ்த்தி நானோ பதவியில் இருக்கக்கூடாது என்ற இனம்புரியாத புரிதல் நம்மிடையே இருக்கிறதா..?
அந்தநாளை நாம் இருவரும் புரிந்துகொள்ள சுமார் 20 ஆண்டுகள் கடக்க வேண்டியிருந்தது..
மறுபடியும் அவரை கனடா மொன்றியலில் சந்தித்தேன்..
ஊரில் நான் இல்லாத இடைக்காலத்தில் எனது எனது குடும்பத்தினர்க்கு ஆதரவாக உதவியவர் வைத்தியண்ணாவே என்பதை அறிந்தேன்.
அதற்குப் பின் நான் சந்தித்த எல்லாவிதமான போராட்டங்களையும் ஆதரித்து எனக்கு உறுதுணையான குரல் தந்தவர் வைத்தியண்ணாதான்.
ஆடுகளத்தில்தான் நாம் எதிர் எதிர் மைதானத்திற்கு வெளியே நாம் வல்வையர், நமக்குள் பகை இல்லை.
உலக வல்வை ஒன்றியத்தை அமைக்க வேண்டும் என்றபோது தயங்காதே என்று உற்சாகம் தந்தவரும் அவர்தான்.
என்னுடைய ஒவ்வொரு வெற்றியையும் தன்னுடைய வெற்றியாக எண்ணி மகிழ்ந்த அண்ணனாக அவர் மாறியிருந்தார்.
பெரிய வயிற்றுடன் கனடாவில் மேலும் பெருத்திருப்பார் என்று அவரைப்பார்க்க கனடா போன எனக்கு தூக்கிவாரிப் போட்டது, வயிறே இல்லாத மெலிந்த சிறந்த தோற்றமுடைய அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
எப்பட��� மெலிவது.. உடனே தனது வீட்டிலேயே எனக்கு தேகப்பயிற்சிகளை சொல்லித்தந்தார்.
அவருடைய மனைவி பத்மா எனது அயலவர், அன்று பால் அப்பம், பயத்த முத்து அப்பம், முட்டையப்பம் என்று எல்லாவற்றையும் சுட்டுத்தந்தார்.
உன்னுடைய உள்ளத்தில் உண்மை உள்ளது அது எனக்குத் தெரியும் என்றுகூறி சிரித்தார்.
அந்தச் சிரிப்பில் நான் வல்வையைக் கண்டேன்.
இவ்வளவுதூரம் அவரைப்பற்றி எழுதவும் அதுதான் காரணம்.
பகை நட்பு எதுவும் இல்லாமல் வல்வை மக்கள் வாழ வேண்டும், வெல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வாழ்ந்த மனிதர் வைத்தியண்ணா..
வல்வைக்கு பெரியோன் யார்..?
படித்தவனா.. பணக்காரனா.. சாதனையாளனா..வீரனா.. யாருமே இல்லை.. வல்வை வாழ வேண்டும், ஒவ்வொரு வல்வைக் குடிமகனும் கண்ணில் நீர் சிந்தாது மகிழ்வோடு வாழ்ந்தால் அந்தப் பெருமையே என் பெருமை என்று வாழ்வோனே வல்வைக்கு பெரியோன்.. இப்படிக் கருதி வாழும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் வைத்தியண்ணா ஒரு சாதனை வீரனே என்பதை எளிதில் புரியலாம்.
இன்றுள்ள ஒவ்வொரு வல்வை இளையோரும் அவர் வாழ்வை ஒரு பாடப்புத்தகமாகப் பேண வேண்டும்.
வைத்தியண்ணா இல்லை என்ற செய்தி வந்ததும், குச்சம், காட்டுவளவு கடற்கரைகளில் மோதும் அலைகள் ஒரு கணம் நின்றுதான் பின் அடித்திருக்க வேண்டும்..
இனி வல்வையில் மோதும் ஒவ்வொரு அலையும் வைத்தியண்ணா என்ற பெயரைச் சொல்லியே மணலோடு கரையும்.
குச்சம் கடற்கரையில் ஒரு சிலை அமைக்க வேண்டுமானால் அது வைத்தியண்ணாவுக்காகத்தான் இருக்க வேண்டும்..