அப்பாத்துரை சித்திரவேலாயுதம் அவர்களின் நினைவலைகளில்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2015
About writer: வல்வை சிகாமணி (குண்டையா)
வீரம் சொரிந்த மறவர்களும், வீரத்தின் முத்துக்களும் பிறந்து வாழ்ந்த எம் மண்ணில் மேலும் பெருமை சேர்க்க ஆள்த்தான கலைஞர்களும், அறிவு மிக்க தலைவர்களும், ஆழ்கடல் வென்றெடுத்த வீரம்மிக்க கடலோடிகளும், பல்கலைக்கழகம் செல்லாது பட்டம் பெற்று பெருமை சேர்க்கும் அண்ணாவிமார்களும், வந்த வழியில் எமது ஊரின் பெருமையை கட்டியம் கூறுவதைப்போல் அண்ணாவியார் அப்பாத்துரை சித்திரவேலாயுதம் அவர்களின் பசுமையான நிகழ்வுகள் எமது நெஞ்சில் மறக்கமுடியாத நினைவுகளாக இருக்கின்றன.
அன்னாரின் அற்புதமான கலைப்படைப்பும், ஆழமான குரல் வளமும், அழகான உடுக்கின் அசைவும், சொல்ல முடியாதவை. அந்த நாட்களில் அவருடைய படைப்பாக ஆரியமாலா திருமணம் என்ற பெயரில் காத்தவராயன் கூத்தையும் அதே இடத்தைச் சேர்ந்த அண்ணாவியர் இளையதம்பி அவர்களின் காத்தவராயன் என்ற பெயரில் தன்னுடைய படைப்பாகவும் நடத்துவார்கள். இவர்கள் இருவராலும் நடத்தப்படுகின்ற காத்தவராயன் கூத்தானது மிகவும் போட்டியாகவும், தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி மிகவும் திறம்படச் செய்வார்கள்.
சித்திரவேலாயுதம் அவர்களால் நடத்தப்படுகின்ற கூத்தனது மாலை 06.00 மணிக்கு ஆரம்பமாகி காலையில் சூரியன் உதயமாகின்ற வரை ஒவ்வொரு சட்டங்களாக வடிவமைத்து, பாத்திரங்களுக்கு ஏற்றவாறு ஆட்களைத் தெரிவு செய்வதில் மிகவும் திறமை படைத்தவர்.
அவருடன் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர்களாக சிவப்பிரகாசம் அண்ணா, தேவராசா, மணி, ராசா, பரஞ்சோதி மற்றும் பல கலைஞர்களின் நடிப்புத் திறமையால் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக அமைந்தது.
இவரின் திறமையால் நடத்தப்படும் காத்தவராயன் கூத்தில் சித்திரவேலாயுதம் அவர்கள் பற்பல பாத்திரங்களில் நடித்தாலும், பிற்பகுதியில் வருகின்ற காத்தவராயனாக நடிக்கின்ற நடிப்பும், மிடுக்கான நடையும், கம்பீரமான குரலும், பேசுகின்ற வசனமும் சொல்லில் அடங்காதவைகள்.
மேலும் அவரின் கரகப் பாட்டும், உடுக்கில் இருந்து எழுகின்ற நாதமும் அம்மன் கோயிலில் பாடலை பாடத்தொடங்கினால் ஆதிவைரவர் கோயிலில் இருப்பவர்களுக்கு அந்த ஓசை கேட்கும். அவ்வளவிற்கு அவரின் குரலில் இருந்து எழுகின்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
இப்படி திறமை மிக்க கலைஞர்களின் மறைவு பாரிய இழப்பாகும். இனிமேல் இப்படி ஒரு கலைஞர் வருவார்கள் என்பது இந்தக் காலகட்டத்தில் ஒரு கேள்விக் குறியாகத்தான இருக்கும். இத்தனை திறமை மிக்க ஆசான்களை வாழும்போதே வாழ்த்தி கௌரவிக்கவில்லை என்ற ஆதங்கம் என்னைப்போல் சிறு கலைஞர்களுக்கும் அவர் சம்பந்தப்பட்ட மக்கள் செய்யவில்லை என்ற கவலையும் என் மனதில் இருக்கின்றது. இனிமேல் ஆவது திறமை மிக்கவர்களை வாழும் போதே வாழ்த்தி கௌரவிப்போம் என்ற சிந்தனையோடு ...
அன்னாரி மறைவுக்கு ஆழ்ந்த கவலையும், கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தி நிறைவு செய்கின்றேன் .