வல்வை ஊரிக்காட்டில் சிதம்பரக் கல்லூரி மைதானத்தையொட்டி சந்திப் பக்கமாக, 80 களின் நடுப்பகுதி வரை, ஏராளமான பனைமரங்கள் மிகவும் அடர்த்தியாக நின்றிருந்தன. எண்ணிக்கையை கணக்கிட முடியாத மைனாக்களின் இருப்பிடமாக அமைந்திருந்தது இந்தப் பனைமரங்கள். இரை தேடி முடித்த பின்னர், சாயற் காலங்களில் மைனாக்கள் இந்த இடம் நோக்கி திரும்புவது வழமை. அந்த அந்தி சாயும் மாலை நேரங்களில் அதிகாலை வேளைகளிலும் மைனாக்கள் எழுப்பிய சத்தம் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அன்று அந்த ஊரிக்காட்டு பனங்கூடலில் நின்றதைப் போன்ற மைனாக் கூட்டத்தை நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை.
இன்று அங்கு மைனாக்களும் இல்லை, பனை மரங்களும் இல்லை. இருந்திருந்தால் வல்வையில் பெயர் சொல்லக் கூடிய ஒரு விடயமாக இருந்திருக்கும் அந்த இயற்கை வினோதம் இன்று.
இன்று ஆரம்பித்தால் குறைந்தது ஐம்பது வருடங்களாகும் மேற்கூறிய பனங்கூடலை உண்டு பண்ண. ஆனாலும் அதே போன்றதொரு மைனாக் கூட்டம் மீண்டும் திரும்புமா என்பது சந்தேகமே.
‘ஒரு இனத்தின் மதம், மொழி, கலை, பண்பாடு மற்றும் சுதந்திர வேட்கை போன்றவற்றை அழிக்க வேண்டும் என்றால் – குறித்த அந்த சமூகத்தை அவர்களின் பூர்வீக இருப்பிடத்திலிருந்து அகற்றி, சிதறு பண்ணி குடியேற்றுவது மிகச் சிறந்த முறைகளில் ஒன்று’ என்று எமது பத்திரிகை ஒன்றின் அரசியல் கண்ணோட்டம் ஒன்றில் பல வருடங்கள் முன்பு எழுதப்பட்டிருந்தது.
கம்யூனிஸ்ய அல்லது கம்யூனிஸ்ய கொள்கைகளை ஒத்த கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடுகளில் இந்த முறையை இன்றும் கடைப்பிடித்து வருகின்றார்கள். நான் சென்றுள்ள ஓரிரு நாடுகளில் இதைத் தெளிவாக அவதானித்துள்ளேன். காரணம் ஏன் என்று கூறத்தேவையில்லை.
இவ்வாறானதொரு முறையில்தான் இங்கும் யுத்தம் பலரை வெளியேற்றியது. பலர் வெளியேறினார்கள் – சமூகத்தின் சிதைவின் முதற்படி.
சிலர் கூறுவது போன்று ‘கொடிய யுத்ததால்’ என்று யுத்தத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
யுத்தம் பலரை இடம்பெயர செய்திருந்தது உண்மை என்றாலும் யுத்தம் தொடங்க முன்னர் இடம்பெயர்ந்து பிற குடியுரிமை பெற்றவர்களும் உண்டு.
அம்மாவிற்கு 10 சகோதரங்கள். சகலரும் ஊரில் பிறந்து இளமைக் காலம் வரை ஊரிலேயே வளர்ந்தவர்கள். ஆனால் இன்று ஊரில் வசிப்பவர் அம்மா ஒருவர் தான். அம்மாவின் ஒரு சகோதரி வன்னியில் வசிக்கின்றார்.
90 களில் இடம்பெயர்ந்து, அப்பா அம்மாச்சி (அம்மாவின் பெற்றோர்கள்) சென்னையில் ஒருவர் பின் ஒருவராக, சில வருடங்கள் முன்னர், காலம் ஆனார்கள். அப்பா இறந்த பொழுது கப்பலில் நின்றதால் என்னால் அவரின் இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியவில்லை. ஆனாலும் அம்மாச்சியின் இறுதிச் சடங்கிற்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்ததில் ஒரு திருப்தி.
பிள்ளைகள், மருமக்கள்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் என பெரிய விருட்ச்சத்தின் வேராக நின்ற இவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த இரத்த உறவுகள் வெறும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. மீதி எல்லாம் R.I.P தான்.
அப்பா பேரப் பிள்ளைகள் சிலருடன்
இதில் எவரையும் குறை கூற முடியாது என்று பொதுவாகக் கூற முடியாதாயினும், மேலே கூறிய சமூகத்தின் சிதவே இதற்கு முதற் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
எமது குடும்பத்தில் சுமார் 80 – 90 வீதமானோர் இன்று பிறநாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்கள். வீதம் சற்று வித்தியாசப்பட்டாலும் தமிழர் பிரதேச, குறிப்பாக யாழ் பிரதேச, ஏனைய சக குடும்பங்களிலும் இது ஒரு பொதுவான விடயமாகவே உள்ளது.
உறவினர் எவருடனும் கோபதாபமுமில்லை. சிறியதாய் ஒருவரின் 25 வயது மகனை அண்மையில் தான் முதன் முறையாகப் பார்த்தேன் - FB இல். சிலரை இன்னும் இப்படியும் பார்க்கவில்லை – சமூக சிதைவு இன்னொரு படி இது.
பிரதான விடயத்துக்கு வருகின்றேன்.
எனக்கு மஸ்ஸினிகள் ஜெர்மன், ஆப்கானிஸ்தான், இத்தாலி.............. எனப் பல நாட்டினர் தற்பொழுது இருக்கின்றார்கள் (இருக்கின்றார்களாம் என்று கூறுவது தான் பொருத்தம்). நண்பன் ஒருவன் தனக்கும் என்னைப் போல் குஜராத், ஸ்பெயின், ஐயர்லாந்து என பல மஸ்சின மஸ்சினாக்கள் உண்டு என்றான் முன்னர் ஒரு போது.
வெளிநாடுகளில் வசிக்கும் ஒன்று விட்ட – இரண்டு விட்ட சகோதரங்கள், கிட்டத்து – தூரத்து உறவினர்களின் பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பிள்ளைகள் என எனது வட்டத்தில் மட்டும் குறிப்பிடக் கூடியவர்கள் பிற இனங்களில் - மதங்களில் - மொழிகளில் - நாடுகளில் மணம் முடித்து -புதியதொரு சந்ததியையும் தற்பொழுது ஏற்படுத்தியுள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட சம்பந்தங்கள் பற்றி சம்பந்தப்பட்டவர்களில் சிலர் கவலை கொள்கின்றார்கள். சிலர் பெருமைபட்டுக் கொள்கின்றார்கள். பலர் யதார்த்தவாதிகள் போல் காலவோட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு விடயம் என்கின்றார்கள்.
இவ்வகை சம்பந்தகளுக்கு தமக்கு தகுந்தாற்போல் காரணங்களைக் கூறி தமக்கு ஏற்ற தொப்பிக்களைப் அணிந்து கொள்கின்றார்கள்.
இவ்வாறானதொரு தொப்பியை மாட்டாக்கூடாது என்பதில் திடமாக உள்ளேன். ஆனால் மாட்டுப்படாது என்று எப்படி அடித்து எதிர்வு கூற முடியும்?.
ஒரு தனிப்பட்ட குடும்பம் என்ற பார்வையில் நோக்குமிடத்து இவ்வகை சம்பந்தங்களில் எதுவும் பெரிதாக உடனடியாக இழக்கப்படுவதற்கில்லை.
ஆனாலும் ஒட்டு மொத்த எமது தமிழ் சமூகம் என்று நோக்குமிடத்து நாம் இழக்கப் பாடுபவர்களாகவே உள்ளோம். அதுவும் உயரிய நோக்கம் ஒன்றுக்காக 30 வருடங்களுக்கு மேலாக உயிர்களைக் கொடுத்து உழைத்த ஒரு சமூகம் அந்த நோக்கத்தையும் எட்டாமல் – இது போன்ற இழப்புக்களையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கின்றது. மேலும் சந்திக்கப் போகின்றது.
சில வருடங்கள் முன்புவரை மணமகள்களை இங்கிருந்து கூப்பிட்டார்கள். இன்று அது கிட்டத்தட்ட முற்றுப்பெற்றுக் கொண்டுவருகின்றது . Frequency Match ஆகாது என்கின்றார்கள்! ஒரு விதத்தில் இது ஒரு ஆறுதலான விடயம்தான், ஏனெனில் சமூகத்தின் தொடர்ச்சியான சிதைவையும் சமநிலை குழப்பத்தையும் ஓரளவு இது கட்டுப்படுத்தும்.
மணம் முடிப்பது அவரவர் தனிப்பட்ட விடயம். பிழை என்று கூற சட்டத்தில் இடமில்லை. எமது சமுதாயம் சிதைகின்றது என்பது பொதுவான ஒரு ஆதங்கம் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தச் சிதைவு காலம் நகர மேலும் விரிவடையும். இந்த விடயம் தங்கள் சொந்த இடங்களை விட்டு பிற இடங்களில் குடி பெயர்ந்துள்ள சகல சமூகத்துக்கும் பொதுவான ஒன்று என்றாலும், சீக்கியர்கள் அல்லது யூதர்கள் போன்றல்லாமல் - இலகுவாக மதம் மாறக் கூடிய தன்மை கொண்ட – சொந்த மொழிப்பற்று குறைந்த அல்லது மொழி பற்றிய திறன் குறைந்த (குழந்தைகளுக்கு வைத்துள்ள பெயர்கள்) எமது தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, இந்த சிதவை மேலும் வேகமாக இடம்பெற வழி சமைக்கும்.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு சந்ததியில் எமக்குள்ளான உறவுகள் முற்றாக அறுந்து விடும்.
ரீயூனியனிலும், மொரிசியசிலும் இதை நான் நேரடியாகக் கண்டிருக்கின்றேன்.
ஊரிக்காட்டு பனங்கூடலும் மைனாக் கூட்டமும் அவற்றின் சத்தமும் மீண்டும் இனிமேல் ஒருபோதும் வரப் போவதில்லை. முன்பு கேட்டவர்களின் காதுகளில் அவற்றின் சத்தம் மட்டும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: August 03, 2019 at 04:33
உண்மை உண்மை வலிநிறைந்த நிதர்சனமான பதிவு ஆதவன் அண்ணா .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.