உலகுடையார் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான 'ராகன்' மற்றும் பறவைமீன்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2013
About writer: Web team of valvettithurai.org
இப்பட்டங்களை உருவாக்குவதில் முதன்மையான இரு சகோதரர்கள் - எமது 'வாரம் ஒரு படம்' பகுதியில் பதிவாகியிருந்த பல விதப் புறாக்களுக்கு சொந்தக்காரர்களாவர். பல்வேறு விளையாட்டுகளிலும் சிறந்த இவர்கள், பல்வேறு தொழில் தெரிந்த கடின உழைப்பாளிகள்.
கடந்த பொங்கல் அன்று, வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பட்டம் கட்டும் கலைஞர்களின் கலைத்திறன்களை பிரதிபலிக்கும், பலவித வண்ணப் பட்டங்கள் வானில் பறக்கவிடப் பட்டிருந்தன. இதில் வல்வை உலகுடையார் இளைஞர்களின் கற்பனைத்திறனையும் கலை வண்ணத்தையும் பிரதிபலிக்கும் வினோதமான பட்டங்களான, டிராகன் மற்றும் பறக்கும் மீன் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. இவற்றிற்கு முறையே 3 மற்றும் 5 ஆம் பரிசுகள் வழங்கப்பட்டன.
மிக நுட்பமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட ராகன் (Dracone) பட்டமானது, பார்ப்பதற்கு உண்மையான ராகன் சிற்பம் போல் இருந்தது. ராகனின் இறக்கையானது அசையக் கூடியதாக அமைக்கப்பட்டிருந்தும், பட்டம் வானில் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தமை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திருந்தது.
கிட்டத்தட்ட எல்லாவிதமான புறாக்களையும் இவர்கள் வீட்டில் வளர்க்கப்படுவதைக் காணலாம் - இது எமது வாரம் ஒரு படம் பகுதியில் கடந்த 12 -12 -2012 அன்று வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டங்களை உருவாக்குவதில் முதன்மையான இரு சகோதரர்கள். எமது 'வாரம் ஒரு படம்' பகுதியில் பதிவாகியிருந்த பல விதப் புறாக்கள் இவர்களாலேயே வளர்க்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு விளையாட்டுகளிலும் சிறந்த இவர்கள், பல்வேறு தொழில் தெரிந்த கடின உழைப்பாளிகள். இவர்கள் வல்வையில் பலராலும் அறியப்பட்டுள்ள, குத்துச் சண்டையில் சிறந்த வீரரான திரு.உலகராஜாவின் மருமக்கள் ஆவர்.
பார்ப்பதற்கு பறக்கும் மீன் ஒத்த உருவத்தை போன்ற இப்பட்டமானது காற்றை உள்ளீர்த்து மேலெழுப்பும் உத்தியுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்பட்டமும் எவ்வித இடர்பாடுகள் இன்றி, வானில் இலகுவாக பறக்கவிடப்பட்டிருந்தது. இப்பட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் கடலிலிருந்து மேலெழும்பி விழுவது போன்ற அசைவுகளுடன் வானில் பறந்து கொண்டிருந்தமையாகும்
மேற்படி இளைஞர்களின், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நத்தார் மின்னொளிப்பட்டங்கள், வல்வையின் இரவு வானை அலங்கரித்திருந்தது தொடர்பான செய்தி எமது இணையதளத்தில் 25.12.2012 அன்று வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பட்டங்களை உருவாகிய ஏனைய இளைஞர்கள் - பட்டத் தயாரிப்பில்
விளையாட்டுப் பயிற்சியில் இரு சகோதரர்கள் - குழுவில் முன் நிற்பவர்கள்
தொகுப்பு - Web team of valvettithurai.org / Colombo