சந்நிதி வேலன் திருத்தலத்தில் தைப்பூசத் திருநாள் - ஒரு சிறப்புப் பார்வை - வ .ஆ . அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2013
About writer: தொகுப்பும் ஆக்கமும் - வ .ஆ . அதிரூபசிங்கம்
இந்திய சோதிடக்கலையில் சிறப்பித்துக் கூறப்படும் 27 நட்சத்திரமண்டலங்களுள் 8வதாக அமைந்துள்ள நட்சத்திரம் பூசம். தைத்திங்களில் பூச நட்சத்திரம் வரும் தினம் புண்ணிய நாளாக இந்துக்களால் போற்றப்படுகின்றமை கருத்தில் கொள்ளக்கூடியதாகும். தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி (வியாழன் ) பூச நட்சத்திரத்தின் தேவதையாக போற்றப்படுவதுமன்றி அறிவின் தேவதையாகவும் வழிபடப்படுகின்றது.
பூச நட்சத்திரத்தை வணக்கத்துக்குரியதாகப் போற்றி வழிபாடுசெய்வோருக்குப் பிரகஸ்பதியின் நல்லருள் கிடைக்கின்றது. இத்தன்மையில், தைபூச வழிபாடு அறிவிற்குவித்திடுவதாக அமைகின்றது. மங்களகாரியங்கள் பலவும் தைப்பூசதினத்தில் ஆரம்பித்து மேற்கொள்ளப்படுகின்றன . சிறுவர்களுக்கு ஏடு தொடக்கல் , குழந்தைகளுக்கு காது குத்தல் , அன்னப்பால் பருக்குதல், மற்றும் பிறந்த மயிர் மழித்தல் போன்றவை இவ்வகையிலே குறிப்பிடத்தக்கன . வேலனை மனங்கொண்டு , அவன் திருத்தலத்தில் இவையாவும் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றமை நோக்கற்பாலதே . இவை மாத்திரமன்றி பல நேர்த்திக்கடன் நிகழ்வுகள் செல்வச் சந்நிதி வேலன் திருத்தலத்திலே தைப்பூச நந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன . சென்ற 27.01.2013 ஞாயிற்றுக்கிழமை வேலன் திருத்தலத்திலே இவ்வகையிலே பெருமளவு நேர்த்திக்கடன் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அன்றைய தைப்பூச நாளில் வேலன் திருமுன்னிலையிலே மேற்கொள்ளப்பட்ட மங்கள நிகழ்வுகளில் திருமண நிகழ்வுகள் மனந்கொள்ளத்தக்கனவாய்இருந்தன . பெருமளவு திருமணங்கள் அன்றைய தினம் நடந்தேறின . காலைப்பூசை நேரத்திலே திருமணங்கள் நடைபெறத் தொடங்கின . காலை தொடக்கம் மாலை வரையும் ஒன்றன்பின் ஒன்றாகவும் சுப நேரங்களை மனங்கொண்டு திருமணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. வேலன் திருத்தல உள்வீதி வெளிவீதிகளில் மேளவாத்தியக்கரார் , புகைப்படக் கலைஞர்கள் பலரும் தமது திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர் . வள்ளியம்மை வாசலிலே ஒரே சமயத்திலே பல திருமணங்கள் நட ந்தேறின. மங்கள நாண் தரித்த பின் , வாழ்த்தி -ஆசிகூரும் நேரத்திலே வேலன் திருத்தலத்திலே அமைய பெற்றிருந்த பாரிய பூங்கா மண்டபத்திலே இடநெருக்கடியின் மத்தியிலே , மணமக்களை பெரியோர் வாழ்த்துக்களைப் பெற்று கொள்வதற்காக ஒன்றாக இணைந்து ஆங்காங்கே அமர்ந்து கொண்டு ஆசி பெற்றனர். பாரிய மண்டபம் என்றதன்மையில் யாவும் மனம்போல நிறைவெய்தின .
தைப்பூச தினத்திலே புண்ணிய நதிகளிலே தீர்த்தம் ஆடுதல், புண்ணிய காரியங்களுக்கான பலன் கிடைக்கும் என்ற இந்துக்களின் நம்பிக்கைக்கு அமைய புண்ணிய நதியாக திகழும் தொண்டமான் ஆற்றிலே அதிகாலையிலிருந்து பெருமளவு பக்தர்கள் தீர்த்தம் ஆடத்தொடங்கினார் . பச்சிளம் பாலகர்களையும் தமது கரங்களிலே தாங்கிக் கொண்டு சென்று கடும் குளிரிலும் அவர்களையும் ஆற்றிலே தீர்த்தம் ஆடச்செய்தனர். புண்ணிய நதியாம் ஆற்றிலே தீர்த்தம் ஆடுவதுடன் அமையாது வேலன் திருத்தல விருட்சமாக மிளிரும், வள்ளியம்மை வாசலுக்கு முன்பாக அமைந்துள்ள நாகதம்பிரான் மண்டபத்துடன் அமைந்துள்ள தெய்வாம்சம் பொருந்திய பூவரசுமரம் திருத்தல விருட்சமாக போற்றப்பட்டு வழிபடப்படுகின்றது . பக்தர்கள் இதனை சுற்றி வந்து வழிபாடு மேற்கொள்வதையும், இதன் அருகே கருப்பூரம் கொளுத்தி வழிபடுவதையும், விருட்சத்திலே பட்டுச் சேலை கட்டித் திருப்தி அடைவதையும் அவதானிக்க முடிந்தது. நேர்த்திக்கடன் நிகழ்வுகள் வழமைபோல் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட பொழுதும் அன்றைய தினம் மிகப்பெருமளவு பக்தர்கள் இப்புனித நிகழ்வுகளிலே கலந்து கொண்டனர். காவடி , பாற்செம்பு , அடி அழித்தல் , அங்கப்பிரதக்கணம் என்பவற்றிற்கும் மேலாக அடிபிரதக்கணம் என்ற நேர்த்தியும் மேற்கொள்ளப்பட்டன. இந்நேர்த்தியை மேற்கொண்ட பெண்கள் வேலனைத் தியானித்துக் கொண்டும் அவன் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டும் இரு கரங்களையும் கூப்பிய நிலையிலே சிரசிலே வைத்துக் கொண்டும் அடி மேல் அடி வைத்துக் கொண்டும் வேலன் திருத்தல வீதியைச் சுற்றி வந்தமை பக்தியின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது .
எம்பெருமானுக்குரிய தைப்பூச உற்சவத்திற்கான பூசை நிகழ்வுகள் ஆரம்பமாகின . மதிய நேரப்பூசையே உற்சவத்திற்கான பூசையாக அமைந்தது. அபிடேகத்திற்கான நிகழ்வுகள் ஆரம்பமாகின . வேலன் திருமுன்னிலையிலெ உரிய மண்டபத்திலே பூரண கும்பங்கள் ஓர் ஒழுங்கிலே வைக்கப்பட்டு பிரதம பூசகரால் அர்ச்சிக்கப்பட்டன. அர்ச்சிக்கப்பட்ட தீர்த்ததுடன் கூடியமைந்த கும்பங்கள் ஏனைய பூசகர்களால் எடுத்துச் செல்லப்பட்டு வீதி உலாவந்தன . உள்வீதி உலா வந்தமைந்ததும் , வலம் வந்த கும்பங்கள் யாவும் தீர்த்தத்துடன் வேலன் திருமுன் எடுத்து செல்லப்பட்டு , வேலனுக்கு அபிடேகம் செய்யப்பட்டது. வேலன் திருமேனியும் குளிர்ந்தது. பக்தர்களின் உள்ளங்களும் மிகக் குளிர்ச்சி அடைந்தன . அபிடேகம் செய்யப் பெற்றதும் பூசை ஒழுங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டன. இந் நிகழ்வுகளுள் "சண்முகார்ச்சனை " என்ற சிறப்பு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது . ஆறு வகை வில்வங்களான கடம்பு, கற்பூரவில்வம், நெல்லி , விளாத்தி , நொச்சி , பொன் நொச்சி என்றமைந்த தன்மையிலான ஆறு வகை வில்வங்களாலும் , பல் வகை மலர்களாலும் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப் பெற்றது. ஆறு பூசகர்கள் சீர் ஒழுங்கிலே நின்று கொண்டு , வில்வார்ச்சனையை மேற்கொண்டார்கள். வில்வார்ச்சனை நிறைவேய்தியதும் ஆறு பூசகர்களும் தமது கரங்களிலே பஞ்சாரத்தி தீபங்களைத் தாங்கிக் கற்பூர ச் சுடர் ஏற்றிப் பெருமானை ஆராதனை செய்தார்கள் . பக்தர்களின் "அரோகரா " ஓலி ஆலயத்தையே ஒரு முறை அதிரவைத்தது.
வேலனுக்குரிய பூசைகள் யாவும் மெளன பூசையாகவே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் . பூசை நிகழ்வுகள் யாவும் நிறைவெய்தியதும் சந்நிதி வேலன் அலங்கார ரூபனாக அமர்ந்த நிலையிலே - அமைந்த நிலையிலே வீதி உலா வந்தருளினார். வீதி உலாவுக்காக வேலன் வெளி வீதியிலே கால்பதித்த நேரத்திலே ஆலய வாசலிலே அமைந்துள்ள "கண்டாமணி" ஓங்கி ஓலித்து, பெருமானை வழி அனுப்பியது. பெருமான் வீதி உலா நிறைவெய்தி தமது அமைவிடம் வந்து சேர்ந்ததும் , அவரை வரவேற்பதற்காக "கண்டாமணி" மீண்டும் ஒரு முறை ஓங்கி ஓலித்து. பெருமானுடன் வீதிஉலா சென்றுவந்த பிரதம பூசகர் திருத்தலத்தின் உள்ளே நுழைந்ததும் தமது பாதங்களை சுத்தம் செய்த பின் ஆலயத்தின் உள்மண்டபத்தினுள் செல்லுவார். வேலன் திருத்தலத்திற்கான நடைமுறைப்படி வேலன் இருப்பிடத்திலே அமர்ந்து கொண்டதும் வேலன் திருத்தொண்டிற்காக காத்திருக்கும் பராயம் அடையாத சிறுமிகள் வேலனுக்கு ஆராத்தி எடுத்து வழிபடுவார்கள் . பெருமான் வீதி உலா வந்த நேரத்திலே , வீதிகளிலே கரந்துரையும் தீய சக்திகளின் கண்ணேறு , நாவேறு தோஷங்கள் பெருமானை பாதிக்காமல் இருப்பதற்காகவே ஆராத்தி நிகழ்வு மேற்கொள்ளப்படுவது வேலன் திருத்தலத்தின் நடைமுறை.
வேலன் வீதி உலா வந்த நேரத்திலே ஆலய சூழலில் பக்தர்களோடு பக்தர்களாக நின்று வேலனை வழிபாடு செய்த , இனத்தால், மதத்தால், மொழியால், நிறத்தால், நாட்டால், கலாசராத்தால் வேறுபட்ட சில பக்தர்களையும் காணமுடிந்தது. இவற்றால் வேறுபட்ட நிலையிலும் - மாறுபட்ட தன்மையிலும், பக்தியினால் , பக்தி உணர்வினால் ஒன்றுபட்ட தன்மையிலே மன மகிழ்வுடன் வேலணை வழிபாடு செய்தமையை அவதானிக்க முடிந்தது. இவர்களுடன் எம்மவர்கள் மனமகிழ்வுடன் சைகைகள் பேசி மகிழ்ந்தார்கள் . இவர்கள் வாய்கள் யாவும் "தைப்புசம் " "முருகன்" என உச்சரித்தமையையும் ஓரளவுக் கேட்கவும் முடிந்தது, விளங்கிக்கொள்ளவும் முடிந்தது.