வல்வையில் 1720ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புனித செபஸ்தியார் தேவாலயத்தின் (ST.SEBASTIAN'S CHURCH) - இன்றைய நிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2013
About writer: கு .பிறேம்குமார் (கே.பி)
வல்வையில் 1720ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புனித செபஸ்தியார் தேவாலயம் (ST.SEBASTIAN`S CHURCH).
இது எமது வல்வையின் வரலாற்றுப் புனிதம்! இது எமது வல்வையின் புராதனச் சின்னம்!!
இந்தப் பாரம்பரியம் மிக்க தேவாலயத்தின் இன்றைய நிலை என்ன?
அன்பான வல்வை மக்களே !
கிட்டத்தட்ட முன்னூறு (300) ஆண்டு கால வரலாற்றை தொடப்போகும் எம்மூர் தேவாலயத்தின் இன்றைய நிலை என்னவென்று சமீபத்தில் வல்வையின் இணையங்களில் வெளியான புகைப்படங்களில் காண நேர்ந்தது. ஏன்? நீங்களும் கூட இதைப் பார்த்திருப்பீர்கள்! வல்வையின் இந்தப் புராதனச்சின்னம், தனது கம்பீரமான அழகை இழந்து, உருக்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் பெரும் சோகம்!!
வல்வையில் வாழும் ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகத்தினருக்கு மட்டும் தான், இந்தத் தேவாலயம் என்றில்லை. இது ஒட்டு மொத்த வல்வை மக்களுக்குமானது.
ஆனால் இதுவரை காலமும், நாம் தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தவறியிருக்கிறோம் என்பது தான் உண்மை!!! காலம் காலமாக நாம், எங்கள் இந்துக் கோவில்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றையே பராமரித்தும் வந்துள்ளோம். அதே அக்கறையை நாம் இந்தத் தேவாலயத்தின் மீதும் செலுத்தியிருந்திருக்கவேண்டும். அப்படிச் செலுத்தியிருந்தால் இன்றைய சோக நிலை தவிர்க்கப்பட்டிருக்கும்.
உலகம் முழுக்க பரந்து வாழும் வல்வை மக்களாகிய நாம் நினைத்தால் இந்தப் புனிதத் தேவாலயத்தைச் சீர்படுத்தி, அதன் அழகை மெருகூட்டிப் பாதுகாக்கலாம். பொதுவாக பழைய கட்டிடங்கள், ஒரு சில கால இடைவெளிகளில் சீர் செய்து பாதுகாத்தால் தான், அதன் தனித்தன்மையோடும் வலிமையோடும் மேலும் அதிக ஆண்டுகள் நிலைத்து நிற்கும். ஆனால் இந்தத் தேவாலயத்துக்கு அப்படிப்பட்ட வேலைகள் நடந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டது.
தவிரவும், நடந்து முடிந்த யுத்தம் காரணமாகவும் பெரும் சேதம் ஏற்பட்டு, உருக்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது தேவாலயம். கதவு, யன்னல், தளபாடம், தேவாலயமணி உட்பட அனைத்தும் சீரழிந்து கிடக்கின்றன.
இதன் புனரமைப்பு வேலைகள் சம்பந்தமாக திரு.குலநாயகம் மற்றும் திரு.அகமணிதேவர் ஆகியோருடன் கடந்த 13/01/2013 இல் தொலைபேசியில் பேசியிருந்தேன். அவர்கள் அதனை மிகவும் விருப்பத்தோடு வரவேற்றார்கள். தமக்கு கிடைத்த சிறிய சிறிய உதவிகளுடாக தேவாலய உட்புற வேலைகள் சிலவற்றை முடித்து விட்டதாகவும், இன்னும் வெளி வேலைகளுடன் கதவு,யன்னல், தளபாடம் மற்றும் பெயிண்டிங் என மிகுதி வேலைகளுக்கு நிதி இல்லாமையால் தொடரமுடியாமல் இருப்பதாகவும் கூறினார்கள்.
இந்தத் திருப்பணிக்கு, வல்வையர் நாம் எல்லோரும் இணைந்து செயற்பட்டால் போதியளவு நிதியை தந்து உதவலாம். எம்மூரில் உள்ள இந்துக்கோவில்களுக்கு நாம் விரும்பி எவ்வளவு வேலைகளைச் செய்கிறோமோ,அதே போல இதுவும் எங்கள் கோவில் தானே என நினைத்து செயற்பட்டால் இந்தப் புராதனச் சின்னத்தைக் காப்பாற்றி அழகு பார்க்கலாம். கிறிஸ்தவ நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு, இங்குள்ள தேவாலயங்களின் அழகும்,அவற்றின் தனித்தன்மையும் நன்றாகப்புரியும். ஒவ்வொரு வருடமும் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வார காலம் முன்பே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்துவிடும்.
ஆனால் எங்கள் ஊரில் உள்ள இந்தப் புனித தேவாலயத்தின் நிலையைப்பாருங்கள்! நாமும் ஏன் வெகு சிறப்பாக கிறிஸ்தமஸ் விழாவை கொண்டாடக் கூடாது? அங்குள்ள ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகத்தினருடன் சேர்ந்து ஒட்டு மொத்த வல்வை மக்களுக்குமான கிறிஸ்மஸ் விழாவாகக் கொண்டாடி மகிழ வேண்டும். புனித செபஸ்தியாரின் அருள் வல்வெட்டித்துறைக்கு கிடைக்கவேண்டும்!
கூடிய விரைவில் தேவாலயத்தைப் புனரமைத்துக் கொண்டு,
இனி வரும் காலங்களில் வல்வையில் கிறிஸ்தமஸ் விழாவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க நாம் முன்வரவேண்டும்.
நாம் மனம் வைத்தால் எதுவும் சாத்தியமே!
முதற்கட்டமாக, லண்டனில் உள்ள வல்வை நலன்புரிசங்கத்தினர், இந்தத் தேவாலய திருப்பணி வேலைகளுக்கு வல்வையில் உள்ள வல்வை ஒன்றியம் மூலமாக தமக்கு தெரியப்படுத்தினால், தாம் அதைப் பரிசீலித்து ஆவன செய்வோம் என சங்கத்தலைவர் திரு.உதயணன் அவர்கள் என்னிடம் கூறியுள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். அவர்களுக்கும் சங்க நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி! அவர்களின் பணிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்!!
இதே போல ஏனைய நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச்சங்கத்தினரும் , மற்றும் வல்வையின் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வமுள்ளவர்களும், தொழிலதிபர்களும் மற்றும் ஏனைய வல்வையரும் சேர்ந்து இந்தப்பணியும் எங்கள் ஊரின் முக்கிய பணி என முன்வந்து உதவுவார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன்.
நன்றி,
அன்புடன்
கு .பிறேம்குமார் (கே.பி)
கிறிஸ்தவ தேவாலய புனருத்தாரண விபரம் குறித்து புனித செபஸ்தியார் தேவாலய நிர்வாகத்தினரின் அறிக்கை எமது இணைய தள முகவரியில் இணைக்கப்பட்டுள்ளது.