About writer: Dr. ஆ .திருநாவுக்கரசு, பதிவு வைத்திய அதிகாரி, புன்னாலைக்கட்டுவன்
நான் இந்திய அமைதிப்படையினர் ( IPKF ) இருந்த காலத்தில் வல்வெட்டிதுறை மாவட்ட வைத்தியசாலையில் பதில் கடமை புரிந்தேன். அப்போது பலநெருக்கடிகளுக்கு மத்தியில் மிக குறைந்த ஆளணியினருடன் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. ஆதார வைத்தியசாலை பருத்தித்துறையிலிருந்து பிரான்ஸ் வைத்திய குழுவினார்களை அழைத்து அவர்கள் மூலம் அங்கு வைத்தியம் செய்ய அனுப்பினேன். எனக்கு உணவு இல்லை. உணவு வழங்கும் வர்த்தகத் திணைக்களம் அறைகளை உடைத்ததால் அங்குள்ள அரிசியில் கஞ்சி காய்ச்சி குடித்தோம்.
அப்பொழுது இருந்த இந்திராணி வைத்தியசாலை அல்ல. தற்போது காணும் நவீன அமைப்புக்கொண்ட சகல வைத்திய சேவைகளும், அடங்கிய மருத்துவமனை. கட்டிடம், சகல பரிசோதனைகளும் செய்யகூடிய ஆய்வு கூடம். உபகரணங்கள், தளபாடங்கள், ஆளணிகள் எல்லாமாக அந்த நேரத்தில் மக்கள் செய்த புண்ணியத்தால் வந்த வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாள் அவர்களின் முயற்சியும், ஊக்கமும் முன்பு வசதிகள் அற்ற நிலையிலும், எல்லா விதத்திலும் தட்டுப்பாடு உள்ள நேரத்திலும் அப்போது அங்கு மிகவும் அர்ப்பணிப்புடன் இரவு பகல் கடமையாற்றிய பெண் மாவட்ட வைத்திய அதிகாரி தனது உயிருக்கு ஆபத்து என்பதினால் வேறு தமிழ் மாவட்டத்திற்கு சென்று விட்டார். அவ்வெற்றிடத்திற்கு Dr .மயிலேறும் பெருமாள் அவர்கள் விரும்பி வந்தார்கள்.
சுகாதாரம் என்பது உடல், உள, ஆன்மீக சமூக மேம்பாடு என்பது உலக சுகாதார சங்கத்தின் குறிக்கோள். (WHO ) வைத்தியர்கள் நோய்க்கு மட்டுமே வைத்தியம் செய்கிறார்கள். அனால் Dr மயிலேறும் பெருமாள் உடலுக்கு மட்டும் அல்ல, உளவளத்துணையும் மக்கள் ஆதரவுடன் சபைகள் அமைத்து தலைவனாக இருந்து ஆன்மீக வளர்ச்சிக்கும் , சமூக மேம்பாட்டுக்கும், அளப்பரிய சேவை ஆற்றுகிறார். கல்வி, விளையாட்டு புதிய ஆக்கங்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களுக்கு சபை மூலம் பரிசுகளும் வழங்கி முன்னேற்றத்திற்கு வழி வகுத்து வருகிறார்.
இவ்வண்ணம் வேறு வைத்தியர்கள் செய்ய முன்வருவதில்லை வைத்தியமே செய்கிறார்கள். தமிழ் மக்களுக்கு அதிகளவு சேவை ஆற்றினால், உதவிகள் பெற்றுக் கொடுத்தால் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் காலம். இதனால் பலர் கண்காணிப்பில் இவர் கடமை ஆற்றினார். எங்கு எல்லாம் மக்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் உயர்வு கிடைக்கும் என்று அறிந்து அங்கிருந்து உதவிகள் பெற்று மனதிருப்தியுடன் நிறைவேற்றினார்.
இவருக்கு திணைக்கள அதிகாரிகளும் மிகவும் மரியாதையும், கெளரவமும், அளிக்கிறார்கள். காரணம் பேச்சு வன்மையும், நேர்மையுடனும், உறுதியுடனும், தைரியத்துடனும் நிர்வகிக்கும் தன்மையினால், வேறு வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்களை, நிலையத்திற்கு பிரச்சினை தருபவர்களை, கட்டுக்கடங்காதவர்கள் வல்வெட்டித்துறைக்கு மாற்றப்படுவார்கள். இவரின் நிர்வாகத்தில் அவர்கள் சீர்திருத்திவிடுவார்கள். நல்ல நிர்வாகி .
இவ்வருடம் முற்பகுதியில் நோய் காரணமாக யாழில் இருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டேன். பின் கண்டி பொது வைத்தியசாலைக்கு சென்றேன். அங்கு நடந்த நிகழ்வே இக் கட்டுரை எழுதக் காரணம்!. என்னை பரிசோதித்த வைத்திய நிபுணர் என்னை யாழ்ப்பாணத்தவர் என்றதும், வல்வெட்டித்துறையைப்பற்றி தெரியமா? என்று கேட்டார். ஆம் என்ற உடன் அங்கு இருந்த அனைத்து வைத்தியர்களை, வைத்திய மாணவர்களை அழைத்து நான் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு சென்றேன். இக்கட்டான காலத்தில் அங்கு கடமையாற்றிய வைத்திய அதிகாரி பெயர் மறந்துவிட்டேன் என்றார். நான் Dr மயிலேறும்பெருமாள் என்றதும், ஓம் ,ஓம் அவர்தான். அவரின் சேவை உங்கள் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு . வைத்தியசாலையில் "வூறு " (சிங்களம் ) காட்டுக் கட்டிலில் படுத்து இரவு பகல் கடமையாற்றுகிறார்.
இருக்கும் வசதிகளை கொண்டு அளப்பரிய சேவை செய்து வருகிறார். நான் உங்களை எல்லோரையும் அங்கு அழைத்துச் சென்று எப்படி வைத்தியசாலை வைத்திருக்க வேண்டும், நிர்வகிக்க வேண்டும், சேவையாற்ற வேண்டும் என்று காட்ட விரும்புகிறேன் இருக்கும் வளங்களைக் கொண்டு செய்கிறார். அது இல்லை இது இல்லை என்று கூறாமல் கடமை புரிகிறார். ஆனால் எல்லா உபகரணங்களையும், பொருட்களையும், கட்டிடங்களையும் மக்கள் மூலம் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் அரசாங்கத்தில் பெற்று வருகிறார். அவரைப்போல் நீங்கள் எக்கிராமத்திலும் சேவையாற்ற வேண்டும் உங்கள் வசதிகளைப் பார்க்காமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
இது தெய்வீகச் செயல் என்று கூறினார். நான் உங்களை அழைத்து சென்று காட்ட விரும்புகிறேன் என்றார். உண்மையிலே இதைக் கேட்ட நான் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தேன். சிங்கள வைத்திய நிபுணர், ஒரு யாழ் வைத்தியசாலையை உதாரணமாக காட்டி தனது கீழ் சேவையாற்றும் வைத்தியர்களுக்கு அறிவுரை வழங்கினார். Dr மயிலேறும் பெருமாள் நீண்ட கால சேவையாற்ற வேண்டும். வல்வெட்டித்துறை மேன்மேலும் உயர்வு அடைய வேண்டும். அவர் வாழ்வில் எல்லாச் செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.