யாழ் தீபகற்பத்தின் வடமராட்சிப் பிரதேசத்தின் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது சந்நிதியான் ஆச்சிரமம்.
அன்னதானப்பணி, ஆத்மீகப்பணி, சமூகப்பணி என மெச்சத்தக்க வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவ் ஆச்சிரமத்தின் சிறப்பான பணிகளால் பலர் பயனடைகின்றனர்.
குறிப்பாக ஆச்சிரமத்தின் அன்னதானத்தின் மூலம் சந்நிதி ஆலய வளாகத்தில் தங்கியிருக்கும் 50க்கு மேற்பட்ட எளியவர்களுக்கு தினமும் அவர்களது மூன்று நேர உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களை ஆதரித்து கொண்டிருப்பதும், பக்தர்கள் ஆலயத்துக்கு அதிகம் வரும் நாளான வெள்ளிக்கிழமைகளில் சுமார் 1000 ற்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதைவிட ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பொழுது ஏராளமான அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றமையும் மேலும் குறிப்பிடத்தக்கது.
ஆச்சிரமத்தின் ஆத்மீகப்பணி:-
அன்னதானப்பணியை விட ஆச்சிரமத்தாலும் மற்றும் அதன் பேரவையாலும் வெள்ளி நிகழ்வுகள், ஆன்மீக சஞ்சிகை வெளியீடுகள், செல்வச்சந்நிதி ஆலய உற்சவகால விஷேட நிகழ்வு, கந்தசஷ்டிகால நிகழ்வு, திருவாசகவிழா, அருணகிரிநாதர் விழா போன்ற நிகழ்வுகள் போன்றன வருடந்தோறும் சிறப்பாக நடாத்தப்படுவது பலரின் ஆன்மீக ஈடேற்றத்துக்கு வழி வகுப்பது குறிப்பிடத்தக்கது.
சமய மற்றும் கலை நிகழ்வுகள் நடை பெறும் மண்டபம்
ஆச்சிரமத்தின் சமூகப்பணி:-
சந்நிதியான் ஆச்சிரமம் இவ்வாறு அன்னதானப்பணிகளுடனும், ஆத்மீகப்பணிகளுடனும் மட்டும் நின்றுவிடாது காலத்தின் தேவையறிந்து சமூகத்தில் நலிவுற்றுள்ள பல்வகைப்பட்ட மக்களுக்காக பல்வகைப்பட்ட சமூக சேவைகளை ஆற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.
இச் சேவைகளின் மூலம் சமுதாயத்தில் இனம் காணப்படாத ஏழை மக்கள், விதவைப்பெண்கள், கல்வியைத் தொடர்வதில் கஷ்டங்களை எதிர்நோக்கும் மாணவர்கள், முன்பள்ளிகள், அதில் கல்வி பயிலும் சிறார்கள், பாடசாலைகள், தொண்டர் ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள், சைவத் தொண்டர்கள் என பலதரப்பட்டோர் பயன் அடைகின்றனர்.
உதவித்தொகை, சத்துணவு, கற்றல் உபகரணங்கள், உடைகள் பரிசில்கள், மாதாந்த கொடுப்பனவுகள், விருதுகள் வழங்குதல், உணவுப்பொதிகளை வழங்குதல், பொது வைத்தியசேவைகள், தேவைப்பட்ட குடும்பங்களுக்கு தொழிற்புனரமைப்பு, வீடு புனரமைப்பு போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்குதல், தையல் இயந்திரங்களை வழங்குதல், துவிச்சக்கரவண்டிகளை வழங்குதல் ............ என மிக நீள்கின்றது பட்டியல் ஆச்சிரமத்தின் சமூகப்
பட்டியல்.
தொண்டர்கள்
இதைவிட சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2005ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி 1000 உணவுப்பொதிகளை வழங்க ஆரம்பித்த உணவு வழங்கும் செயற்பாடு, பலமாதங்கள் வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பெரிய ஆர்பரப்புக்களின்றி ஒரு சமுதாயத்தின் தேவையுள்ள மக்களுக்குரிய தேவையான தேவைகளைப் இயன்றளவு முடிந்தவரை சந்நிதியான் ஆச்சிரமம் மேற்கொண்டு வருகிறது என்றால் மிகையாகாது.
சந்நிதியான் ஆச்சிரமம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி வளாகத்தில் ஆலயத்திலிருந்து முன்பாகச் செல்லும் வீதியில் சுமார் 200 தூரத்தில் அமைந்துள்ளது.
Photos and Data directly taken by Valvettithurai.org at the site concerned.