கடந்த மாதம் அமரராகிய தமிழர் பாரம்பரிய அடையாளமான கூத்தில் சிறப்பிடம் பெற்றமைக்காக 2007 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதைப் பெற்ற வல்வையின் இன்னொமொரு மைந்தன் சித்திரவேலாயுதம் அவர்களின் ஞாபகார்த்தமாக லண்டனில் ஒரு நூல் வெளியீடு இடம்பெற்றது.
இந்த நினைவுப் பகிர்வில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையின் செயலாளர் தி.ஜெயராஜ் அவர்கள் எமது வேண்டுகோளிற்கிணங்க எழுதி எமக்களித்திருந்த, கலாபூஷணம் சித்திரவேலாயுதம் பற்றிய சில அரிய தகவல்களுடன் அடங்கிய ஆக்கம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
தர்மகர்த்தா சபையின் செயலாளர் தி.ஜெயராஜ் அவர்கள் எழுதியுள்ள இந்த ஆக்கம் இவரின் கன்னி முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது....
திரை கடலோடியும் திரவியம் தேடு எனும் முதுமொழிக்கேற்ப அந்தக் காலத்திலேயே கடல் மார்க்கமாக உலகின் பலபாகங்களுக்கும் சென்று (அமெரிக்கா உட்பட) செல்வம் காட்டிய பெருமை இந்த வல்வெட்டித்துறை மண்ணிற்குண்டு.
அதற்காக, எத்தனையோ சாதனையாளார்களும், தியாகிகளும், கலைஞர்களும் தியாகங்களை செய்து இந்த வல்வெட்டித்துறை மண்ணை அணிகலன்களாக இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அணிகலங்களின் வரிசையில் திரு. அப்பாத்துரை சித்திரைவேலாயுதம் 1940.04.03 அன்று திரு. திருமதி அப்பாத்துரை இராசம்மா அவர்களின் புதல்வனாக தோன்றினார். இவர் ஆரம்பக்கல்வியை யா/ சிவகுரு வித்தியாசாலையில் பயின்றார். தொடர்ந்து திருமலையிலும் கல்வி பயின்றார். 1969 இல் திருமலையில் இரத்தினசாமி மாதவிப்பிள்ளை அவர்களின் மகளான ஞானம்பிகையை திருமணம் செய்தார். இவர்களுக்கு வீரசுதாகர் என்னும் மகனை பிள்ளையாக பெற்று, அவருக்கு திருமணம் முடித்து பேரப்பிள்ளைகள் கண்டார்.
பாடல்கள் கிராமியப்பாடலாக இருந்தாலும், பக்திப்பாடலாக இருந்தாலும், சினிமா பாடலாக இருந்தாலும் இள வயதிலேயே தமக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். மறையும் வரை அதை இழக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கரகப்பாடல் என்றால் அந்த இடத்தில் திரு. சித்திரைவேலாயுதம் அவர்கள் இல்லாமல் இருக்காது என்றே அந்தக்காலத்தில் கூற முடியும்.
1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத்தமிழாராட்சி மாநாடு நடாத்தப்பட்ட பொழுது, வல்வெட்டித்துறையிலிருந்தும் பல நிகழ்வுகள் கொண்டு சென்று நடாத்தப்பட்டன. அதில் எமது ஆதிசக்தி கலாமன்றத்தினரால் கரகாட்டம் நிகழ்த்தப்பட்டது. அதில் திரு. சித்திரைவேலாயுதம் தலைமையில் பலர் இணைந்து சிறப்பாக செய்தனர்.
கிராமியப்பாடல் பாடுவதில் வல்லவரான திரு. சித்திரைவேல் அவர்கள் 1975 ஆம் ஆண்டு வல்வை ஆதிசக்தி கலாமன்றத்தின் தயாரிப்பான புராண நாடகம் ‘ஆரியமால திருமணம்’ என்னும் ‘காத்தவராயன் சிந்துநடைக் கூத்தினை’ எமது கலைஞர்களை வைத்து தாம் அண்ணாவியாராகவும் முக்கிய பாத்திரங்களையும் ஏற்று நடித்து வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்.
யாழ் மாவட்டத்தில் பல இடங்களிலும், வவுனியா, திருகோணாமலை ஆகிய வெளி மாவட்டங்களில் பலமுறை மேடையேற்றி எமது வல்வைமண்ணிற்கும் ஆதிசக்தி கலாமன்றத்திற்கும் பெருமை சேர்த்தவர் என்பதில் நாம் பெருமையடைகிறோம்.
வல்வை முத்து மாரி அம்மன் பதின்மூன்றாவது திருவிழாவின் போது முதன் முறையாகப் புலி வேசம் போட்டு புலி விளையாட்டை ஆரம்பித்து வைத்தவர் சித்திரை வேலாயுதம் அவர்களின் தந்தையார் அப்பாத்துரை அவர்கள் ஆவார்.
அதேபோன்று திரு சத்தியமூர்த்தி அவர்கள் அம்மன் தீர்த்தம் ஆடி வரும் போது அம்மனுக்காக இயற்றிய ‘வாசல் பாட்டினை’ முதன் முறையாக திரு சித்திரை வேலாயுதம் அவர்களையே பாடும் படி பணித்திருந்தார்.
தொடர்ந்து பல காலம் இத்தொண்டாற்றியவர் நாட்டின் சூழ்நிலை காரணமாக எமது ஊரை விட்டுத் திருமணம் செய்த இடமாகிய திருகோணமலை சல்லிக் கிராமத்தில் வாழ்ந்தார். அங்கும் அவர் தனது பணிகளையும் தொண்டுகளையும் தொடர்ந்த வண்ணமே இருந்தார்.
தி.ஜெயராஜ்
இங்கு வல்வை முத்து மாரி அம்மன் என்றால் ‘அங்கு சல்லி அம்மன் (வெள்ளை மலை) இருக்கின்றா’ என்று கூறுவார்.
இவருக்கு 2007ஆம் ஆண்டு இலங்கை கலாசார அமைச்சினால் ‘கலாபூசணம்’ விருது வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரதேச செயலகம் ‘கலைப்பரிதி’ எனும் விருதையும் இரசிகர்களால் ‘கிராமிய இசைத்திலகம்’ எனும் பட்டமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் கடந்த மூன்று மாதங்களாக நோய் வாய்ப்பட்டு இருந்தார். கடந்த 08.11.2015 அன்று ஆதிசக்தி கால மன்றத்தின் கலைத்தயின் மகனை காலத்தாய் அரவணைத்துக் கொண்டாள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி