வல்வையின் பெண் பிரபல்யங்களில் குறிப்பிடக் கூடியவர் எனக் கருதப்படும் எழுத்தாளர், வானொலி கலைஞர், இசையில் மற்றும் ஆங்கில ஆசிரியை எனப் பல முகங்களைக் கொண்ட கமலா பெரிய தம்பி நேற்று முன்தினம் கனடாவில் காலமானார்.
வல்வை சிதம்பரக் கல்லுரி, மட்டக்களப்பில்கல்வி கற்றவர். தன் 18 வயதில் இசை ஆசிரியை ஆனவர். சென்னை வானொலி வித்துவான் எஸ்.பாலசுரமணியம் அவர்களிடம் சங்கீதம் கற்று சென்னை அரசாங்க இசைப் பரீட்சை டிப்ளோமாப் பட்டம் பெற்றவர்.
இலங்கை வானொலியில் கச்சேரி வைத்ததுடன் 12 வானொலி நாடகங்களை எழுதி தானே நடித்தும் இருக்கின்றார். இல வயதிலிருந்தே தனது திறமையை வீரகேசரி, தினகரன், சுதந்திரன், போன்ற பத்திரிகைகளில் நிரூபித்துள்ளார்.
1988 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் கனடா சென்று பல கனேடிய தமிழ் பத்திரிகைகள்,வானொலிகளில் தனது ஆக்கங்களை பதிவு செய்திருக்கின்றார்.
இதுவரை இவரால் எழுதப்பட்ட 68 சிறுகதைகளில் 19 சிறு கதைகள் “மாங்கல்யம்” என்ற தொகுப்பு நூலாக வெளி வந்துள்ளது. நீதிக் கதைகளில் “ஆத்தி சூடி” என்னும் நூலும் வெளி வந்தது.
“நம் தாயார் தந்த தனம்” எனும் பேரு நூல் இவரது நான்கு பாக்க நாவல். வல்வை மக்களின் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை வெளியுலகிற்கு பறை சாற்றும் வகையில் இது புனையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இன்னுமொரு அரிய படைப்பு “தமிழ் கவிக் காவினிலே” என்பது, இது 21 கவி நாயக் கட்டுரைகளைக் கொண்டது.
“கானக் குயில்”, “செந்தமிழ் செல்வி”, “இரு கலை வல்லபி” என்ற பட்டங்களைப் பெற்றவர். 1997 இல் தமிழர் தகவல் பத்திரிகை இலக்கிய சேவை விருதினைப் பெற்றவர்.