திரு. கோணலிங்கம் கருணானந்தராசா கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போட்டியிட்டு வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக 27.03.2018 அன்று பதவி ஏற்றார்.
1987 ஆம் ஆண்டு திலீபனின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வல்வை சனா சமூக சேவா நிலையத்தில் திரு.கோணலிங்கம் கருணானந்தராசா மற்றும் ஒருவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர். அவ்விதம் உண்ணாவிரதம் இருந்த இவர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள் நேரில் வந்து சந்திதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் எளிமையான வாழ்க்கையினை மேற்கொண்டிருந்த வல்வை நெடுநாள் சமூக சேவையாளரான திரு.கோணலிங்கம் கருணானந்தராசா அவர்கள், கடந்த உள்நாட்டு யுத்த காலங்களில் வல்வையை விட்டு அகலாமல், வல்வையிலேயே தங்கி நின்று சேவை புரிந்த குறிப்பிடக்கூடிய ஓரிரு அரசியல் வாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
76 வயதுடைய இவர். கடந்த வெள்ளிக்கிழமை கொரொனாவால் பீடிக்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி, இன்று (11/08/21) காலை 10 மணியளவில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கொவிட் விதிமுறைகளைப் பின்பற்றி இன்று யாழ் கோம்பயன் மின் மயானத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் வல்வை நகரசபைத் தலைவராக பதிவியேற்று, பின்னர் தமிழ் தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதனுடன் இணைந்து செயற்பட்டு வந்திருந்தார்.
தமிழ் தேசியக் கட்சியின் ஆரம்பிப்பாளர்களில் ஒருவரான முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுடன் இணைந்து பல அரசியற் போராட்டங்களில் இவர் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்தமை குறிபிடத்தக்கது.