வல்வையின் சேவையாளர்கள் – 2013, ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2013 (சனிக்கிழமை)
புதிதாக அறிமுகமாகும் ஒருவருக்கு, மாகாணம், மாவட்டம், நகரசபை, கிராமசபை என்றெல்லாம் தெரிவிக்காமல் ஒரே சொல்லில் விளங்க வைக்கக் கூடிய ஊர் ஒன்று என்றால் அது வல்வெட்டித்துறையாகத்தான் இருக்கும்.
இது இவ்வாறாக இயற்கையாக அமையப்பெறவில்லை, மாறாக பலரின் அளப்பெரிய சேவைகளினால் உருவானது. இவ்வாறாக ஊருக்கு உழைத்த உத்தமர்கள் கெளரவிக்கப்படவேண்டும். இந்த வகையில் எம்மால் முதலாவதாகக் கெளரவிக்கப்படுபவர் ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள் எனப்படும் பழனி அப்பா.
நாம் (வல்வெட்டித்துறை.org) சில நாட்கள் முன்பு தற்பொழுது கொழும்பில் வசித்து வரும் பழனி அப்பாவை நேரடியாகச் சந்தித்திருந்தோம்.
அழகான தீவு, அதில் அழகான குடா, அதன் வட முனையில் அழகான எங்கள் ஊர் என்றெல்லாம் விவரிக்காமல் விடயத்துக்கு வருவோம்.
பழனி அப்பாவின் சேவை சில, பல மாடிகளைக் கட்டியது அல்ல, மாறாக இவர் கட்டியது புண்பட்டவர்களுக்கு ‘மருந்து’.
பழனி அப்பாவின் சிறு வாழ்க்கைக்குறிப்பு
செல்லப்பா ஆழ்வார்பிள்ளைக்கும் மாரிமுத்துவிற்கும் 21 ஆம் திகதி மார்கழி மாதம் 1926 ஆம் ஆண்டு மகனாக வல்வையில் பழைய வைத்தியாசாலையில் பிறந்திருந்தார் பழனி அப்பா. தனது ஆரம்பக் கல்வியை வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும், பின்னர் பருத்தித்துறை சித்தி விநாயகர் பாடசாலையிலும் மேற்கொண்டிருந்தார்.
தனது 22 ஆவது வயதில் தனது முதல் பணியை அச்சுவேலி வைத்தியசாலையில் 105/- ரூபா சம்பளத்துடன் Attendant on relief duty ஆக ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அச்சுவேலி, கோப்பாய், வல்வெட்டித்துறை, மருதங்கேணி, மற்றும் ஊர்காவற்துறை ஆகிய வைத்தியசாலையில் பணியாற்றியிருந்தார்.
1950 ஆம் ஆண்டு திருமதி அம்பிகா இரத்தினத்தை மணம் புரிந்திருந்த பழனி அப்பா, 1971 ஆம் ஆண்டு மாரடைப்புக் காரணமாக அரச உத்தியோகத்திலிருந்து 99.99 ரூபா ஒய்வுப் பணத்துடன் ஒய்வு பெற்றார்.
அரசசேவையில்
அரச சேவையிலிருக்கும் போதே மருந்து கட்டும் பணியை 1956 ஆம் ஆண்டிலிருந்து பகுதியாக செய்யத் தொடங்கியிருந்த பழனி அப்பா, 1972 ஆம் ஆண்டிலிருந்து இதை முழு நேரமாக மாற்றியிருந்தார். வல்வையின் ரேவடிப் பகுதியில் நடராஜா வீதியில் (பழைய ஆஸ்பத்திரி வீதி, கிழக்குத் தெரு) அமைந்துள்ள தனது வீட்டிலும், ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள தனது காணியிலும் (பழனி கபே என்ற கடைக்குப் பிற்பக்கம்) மருந்து கட்டும் பணியைத் தொடர்ந்திருந்தார்.
வைத்தியர்களின் பயிற்சிகள், அவர்களின் அனுபவங்களை கண்ணுற்று, அதன் மூலம் கற்ற அனுபவக் கல்வி மூலம் 2005 ஆம் ஆண்டு வரை மருந்து கட்டும் தொழிலில் மிகச் சிறப்பாக இவர் செய்திருந்ததை சேவையை எவராலும் மறக்க முடியாது.
மருத்துவத்தில் பழனி அப்பா
பணிவு, திறமை, ஒழுங்கு, சேவை மனப்பான்மை, அமைதியான குணம் போன்றவற்றால் ஊரணியில் இயங்கி வந்த இலவச வைத்தியசாலைக்கு கூட போகாமல் வல்வை தவிர வல்வையைச் சுற்றியுள்ள பலரும் பழனி அப்பாவிடம் தொடர்ந்து மருந்துகட்டச் சென்றிருந்தனர்.
Goggle அப்பொழுது இல்லாத காலத்தில், களிமருந்துகளை தானே உருவாக்கி வெளிக்காயங்கள், உட்காயங்கள், தையல் போடுதல், கட்டுக்கு கத்தி வைத்தல் போன்றவற்றுக்கு மருத்துவம் செய்திருந்தார். இவரிடம் மருத்துவம் பார்த்து குணப்படாதவர்கள் எவரும் இருந்ததாகத் தெரியவில்லை.
ஒருவரிடமும் இவ்வளவு காசு தரும்படி கேட்டதில்லை. ஏழை எளியவர்கள் என்றால் காசு எடுப்பதற்குக் கூட தயங்குவார்.
காயங்களுடன் வரும் நோயாளிகளை அவர்களது வீட்டிற்குள் வைத்து பல ஆண்டுகளாக வைத்தியம் செய்ய அனுமதித்தற்காக பழனி அப்பாவைப் போற்றும் அதேவேளை அவரது குடும்பத்தினரையும் அவர்களது உதவிகளுக்காகக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
உதாரணமானவர்
கடல் அரிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, இடப்பிரச்சினை குப்பை சுத்திகரிப்பு என்றெல்லாம், கதைக்கின்றோம். வல்லிபுரக் கோவிலில் மண் கடைசி மேட்டுக்கு வந்து விட்டது. கடற்கரையோர மண்ணை அள்ளுகின்றோம். பழனி அப்பா இம்மருத்துவத்துடன் நிற்கவில்லை. அப்பொழுது நெடியாகாட்டுப் பகுதியில் Children Park எனப்பட்ட இடத்துக்கு மேற்காக மற்றும் கிழக்காக இருந்த நிலம் இவருக்குச் சொந்தமாகயிருந்தது.
கடல் அரிப்பால் நிலம் தடுக்கப்படுவதை தடுக்க வல்வைப் பிரதேசத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தனது நிலத்தை அப்போதைய காசு சுமார் 3.5 இலட்சம் செலவு செய்து அகலப்படுத்தினார். இது யாழ் பிரதேசத்தில் இதுவரை எந்தவொரு தனி மனிதனும் செய்திருக்க வாய்ப்பில்லை, சிங்கப்பூர், கொங்கோங் போன்ற நாடுகள் இதைத் தான் மிகப் பெரியளவில் செய்கின்றன. இவ் விடயத்துக்காகவே இவர் அரசு சார்பு நிறுவனங்களால் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வல்வை மகளிர் பாடசாலைக்கு உதவி
மேற்குறித்த தனது காணியில் 5 பரப்பை 1992 ஆம் ஆண்டு வல்வை மகளிர் பாடசாலைக்கு அவர்களின் வேண்டுகோளையாடுத்து மைதானத் தேவைக்காக விற்பனை செய்துள்ளார். மேலும் 2 வருடங்கள் முன்பு 2 பரப்புக் காணியை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். மிகுதியாக இருக்கும் நிலத்தையும் நன்கொடையாகக் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக பழனி அப்பா எம்மிடம் தெரிவித்துளார்.
சேவைக்குப் பாராட்டு
இவரின் சிறந்த சமூக சேவையைப் பாராட்டி 2006 ஆம் ஆண்டு கனடாவில் அமைந்துள்ள வல்வை நலன்புரிச்சங்கத்தினால் ‘சேவை செம்மல்’ வாழ்த்துப் பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
லண்டனில் அமைந்துள்ள வல்வை நலன்புரிச்சங்கத்ததின் கெளரவிப்பும் இடம்பெற்றிருந்தது. மேலும் 4 வருடங்கள் முன்பு அவுஸ்திரேலியாவில் உள்ள வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கத்தினால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் திருமணவாழ்வில் பொன்விழா கண்ட தம்பதிகள் என சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியாடப்பட்டிருந்தது.
குடும்பத்துடன் வசித்து வருகின்றார்
4 பெண் பிள்ளைகளையும் 6 ஆண் பிள்ளைகளையும் பெற்ற பழனி அப்பா தற்பொழுது தனது இரண்டாவது மகளுடன் கொழும்பில் வசித்து வருகின்றார்.
உண்மையான சேவையாளனாக
இன்றைய நவீன இணைய உலகில் Facebook, Youtube, விக்கிபீடியா என பல வழிகளில் எம்மை நாமே பிரபல்யப்படுத்திக் கொண்டிருக்க, இவை போன்ற எதனையும் அறியாதவராய், தனது ஓய்வு நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கின்றார், வல்வை மக்களின் மனதில் ஒரு உண்மையான சேவையாளனாக இடம் பிடித்துள்ள பழனி அப்பா (பழனி அண்ணா)