வாரம் ஒரு பழங்கதை – சுங்க வீதியும் சூத்திரக் கிணறும் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2015 (புதன்கிழமை)
வல்வையின் மிகப்பெரிய வரலாறான பாய்க்கப்பல் வாணிபம் – கப்பல் கட்டும் தொழில் ஆகியவைபற்றி வரலாற்று ஆவணங்களில் பதிவாகி உள்ளமையால் அவைபற்றி விரிவாக ஆராய்வது இந்தப் பழங்கதையின் நோக்கம் அல்ல. மாறாக அந்த வரலாற்றின் சுருக்கத்தை மட்டுமே தந்து, சுங்க வீதியும் –சூத்திரக் கிணறும் பழங்கதையைத் தொடர்கின்றேன்.
அன்ன பூரணி கப்பல்
ஒரு காலத்தில்..........
140 பாய்மரக் கப்பல்கள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.
1600 பேர் (வல்வையர்), தண்டையல், சுக்கானி மற்றும் இதர மாலுமிகளாக பாய்மரக் கப்பல்களில் கடமை புரிந்துள்ளனர்.
தண்டையல்
24 கப்பல் காட்டும் மேத்திரிகள் இருந்துள்ளார்கள்.
40 கிட்டங்கிகள் இருந்தன.
(12-01-1955 இல் வெளியான வீரகேசரி பத்திரிக்கையின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் இவை)
ஒரு தேசாபதியின் ஒப்புதல்
1905 இல் வல்வைக்கு விஜயம் செய்த இலங்கையின் தேசாதிபதி S.R.Hendry Blake என்பவர் (ஒரு சித்ரா பெளர்ணமி தினத்தில்) 30 க்கும் மேற்பட்ட கப்பல்கள் தரித்துநின்றதை தாம் கண்டதாகத் தெரிவித்திருந்தார்.
சுங்க வீதி
வல்வையின் துறைமுகப் பரபரப்பு
2 பாய்க்கப்பல்கள் துறைமுகம் நோக்கி வருகின்றது. ஒரு கப்பல் தன் பயணத்தைத் தொடங்கத் தயாராக இருக்கின்றது. நீண்ட பயணத்தை முடித்து வந்த ஒரு கப்பல் துறைமுகத்தினுள் நுழைக்கின்றது. இவற்றை விட ஆங்காங்கே சில கப்பல்கள் நங்கூரமிட்டபடி துறைமுகத்தினுள் வரக்காத்திருக்கின்றன.
துறைமுகம் நோக்கிவரும் கப்பல்களுக்கு இடம் ஒதுக்குவதற்காக ஏற்கனவே வந்த கப்பல்கள் தொண்டைமானாறு கடற்குடாவிற்குள் செலுத்த சிலர் முயற்சிக்கின்றார்கள். அதே நேரம் துறைமுக இறங்குதுறையின் அருகில் நிற்கும் கப்பலில் இருந்து அரிசி மூடைகளும் பல சரக்குப் பேழைகளும் சிறு படகுகளில் இறக்கப்பட்டு பண்டகசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதும், பண்டகசாலைகளிலிருந்து கடல் வாணிபத்திற்காக திரட்டிச் சேகரித்து வைத்திருந்த பொருட்களை பயணம் செய்ய ஆயத்தமாக நிற்கும் கப்பல்களில் ஏற்றுவதுமான துறைமுகத்தின் பரபரப்பான காட்சியினை ஈழத்துப் பூராடனார் மேலே உள்ளவாறு வர்ணித்திருக்கின்றார்.
ரேவடிகடற்கரை
சுங்கமும் சுங்க வீதியும்
இத்தகைய பரபரப்பு மிகுந்த துறைமுகப் பகுதி எமது சிறு பாராயப் பார்வையில் வித்தியாசமாக இருந்தது. தூசி படிந்து உறங்கிக் கிடக்கும் கிட்டங்கிகளையும் (பண்டகசாலைகள்) ஆழ்ந்த மெளனத்த்தில் இருக்கும் துறைமுகத்தையும் ஆங்காங்கே சிதறிக் கிடந்த பாய்க் கப்பல்களின் சிறு பகுதிகளையும் மட்டுமே எம்மால் பார்க்க முடிந்தது.
துறைமுகப் பகுதிகளின் ஏற்றுமதி இறக்குமதிகளைக் கண்காணிக்க எக்காலமும் “சுங்கம்” இருந்தது. சுங்க வரிவிதிப்பு முறையும் இருந்தது. அந்த வீதியும் “சுங்கவீதி” எனப் பெயர்பெற்றிருந்தது.
கிட்டங்கி
சுங்கவீதியின் இருபுறமும் கிட்டங்கிகளும் சுங்கவீதியின் சந்திப்பில் பிரதான வீதியின் இருபக்கமும் இருந்த கிட்டங்கிகளுமாகச் சேர்த்து மொத்தம் 40 கிட்டங்கிகள் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.
சுங்கவீதியின் இருபுறமும் இருந்த கிட்டங்கிகள் பிற்காலத்தில் குடியிருப்புக்களாக மாற்றம்பெற்றுவிட்டன. இருந்தாலும் சுங்க வீதியின் ஆரம்பத்தில் இருபுறமும் இன்றும் 2 கிட்டங்கிகள் உள்ளன. கிழக்குப்புறமுள்ள கிட்டங்கி ஓரளவு முழுமையான நிலையில் உள்ளது. மேற்குப் பக்கமாக (பிரதான வீதியைப் பார்த்தபடி) உள்ள கிட்டங்கி மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றது. “யானை நடந்த கதையில்” யான் குறிப்பிட்ட வேலாயுதம் புரோக்கரின் ஆபிசாகப் பயன்படுத்தப்பட்டது இந்தக் கிட்டங்கி தான்.
சூத்திரக் கிணறு
நவீன சந்தையின் 2 ஆம் கட்ட வேலைகள் (தேவாலயம் உள்ள பாதைக்குக் கிழக்காக) கடந்த 2 வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த வேளையில் காலஞ்ச்சென்ற கணபதிப்பிள்ளை விதானையார் வீட்டு ஒழுங்கையுடன் ஒட்டியபடி மேற்காக இருந்த கிட்டங்கி இடித்து அகற்றப்பட்டமையையும் குறிப்பிடலாம்.
சூத்திரக் கிணறு
சுங்கவீதியும் பிரதான வீதியும் சந்திக்கும் இடத்தில் கிழக்குப் பக்கமாக 4 படிக்கட்டுடனும், ஒரு வெளிச்ச வீட்டுப் படத்துடனும் உயர்ந்த சுவர்ப்பகுதியை தினமும் பார்க்கின்றீர்கள். இந்த வெளிச்சவீடும் படிக்கட்டுக்களும் உள்ள இடத்தின் கீழே சூத்திரக்கிணறு சமாதியாகிப் புதையுண்டு சமாதியாகிப் போய்விட்டது.
நவீன சந்தை
இந்தப் படிக்கட்டும் வெளிச்சவீடும் பத்துப் பதினைந்து வருடங்களின் முன்னர் வேறு ஒரு நிர்வாக அமைப்பு இருந்தபோது கட்டப்பட்டதாகும்.
காலம் பூராக கப்பிக் கிணறாக இருந்த இந்த சூத்திரக் கிணறு , பழைய காய்கறிச்சந்தையின் அருகில் இருந்த காரணத்தினால் மிகப்பயனுள்ள ஒரு பொதுக்கிணறாக பல காலம் பயன்படுத்தப்பட்டு வந்தமையையும் நாம் அறிவோம். இன்று வெளிச்சவீடும் – படிக்கட்டுப் பகுதியும் ரேவடி யூனியன் விளையாட்டுக் கழக விளம்பரப் பலகையாக பயன்படுத்தப் பட்டுவருகின்றது.