வாரம் ஒரு பழங்கதை – கள்ளு பஸ் (வல்வையூர் அப்பாண்ணா)
1982 – 1983 காலப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை பஸ் சாலை, பல புதிய வழித் தடங்கல்களில் பேருந்துகளை இயக்கிய காலமது. இக்காலப்பகுதியில் கம்பர்மலை வீதியூடாக பஸ் சேவை இடம்பெற்றதை நீங்கள் அறிவீர்களா?
பருத்திதுறையிலிருந்து புறப்பட்டு வல்வைச் சந்திவரை வரும் பஸ், உடுப்பிட்டி வீதியில் கம்பர்மலைச் சந்தியில் மேற்காகத் திரும்பிப் பயணிக்கும். பாரதி வாசிகசாலைச் சந்தியில் நேர் மேற்காகத் தொடர்ந்து வேலக்காட்டுச் சந்திக்கு வருகின்றது பஸ்.
அந்த ஒடுங்கிய நாற்சந்தியின் திடீர் திருப்பத்திலும் – ஏற்றத்திலும் லாவகமாக மேலேறி, கம்பர்மலை அரசினர் பாடசாலை ஊடாக பொக்கணைச் சந்தியை சென்றடையும்.
மீண்டும் மேற்கே திரும்பி தொண்டமானாறு சந்தி – அக்கரையினூடாக அச்சுவேலி சென்று மீண்டும் இதே பாதியில் திரும்பிவரும்.
இந்த பஸ் பாதை இலக்கம் சரியாக ஞாபகம் இல்லை.
கம்பர்மலை வீதி புழுதி படர்ந்த வண்டிப்பாதையாகவே அந்த நாளில் இருந்தது. இதனால் இந்த பஸ் வீதி வழியே பயணிக்கும் போது திரண்டு எழும் புழுதிப் படலாத்தினால், பஸ்ஸின் உள்ளே இருப்பவர்களிற்கு மூச்சு முட்டும். வெளியே உள்ளவர்கள் முகத்தை மூடிக்கொள்வர்.
கம்பர்மலை வீதியில் லாவகமாக பஸ்ஸைச் செலுத்தும் சாரதிகள் – அனுபவப்பட்ட கைதேர்ந்தவர்களாகவே இருப்பார். இந்த வழிப் பாதையில் எதிர்ப்படும் சைக்கிள் காரருக்கும், பஸ் ஒதுங்கி வழிவிட்டு தான் பயணத்தைத் தொடரும்.
காலை – பகல் – மாலை என மூன்று நேர பஸ் சேவைகளும் பிரபல்யமாடைய இரண்டு காரணங்கள் இருந்தன.
1) காய்கறி வியாபாரம்
2) பெருங்குடி மக்களுக்கான பயன்பாடு
இரண்டாவது காரணமே இந்த பழங்கதையின் சுவாரசியமான பகுதியாகும்.
கம்பர்மலை ஊடாக வரும் பஸ்ஸில் காத்திருந்து ஏறிவரும் வியாபாரிகள் (குறிப்பாகப் பெண்கள்), வல்வெட்டிதுறைச் சந்தையில் காய்கறி வியாபாரத்தை முடித்துக் கொண்ட பின், 1130 மணியளவில் திரும்பிவரும் பஸ்ஸில் ஏறி வீடு திரும்புவர். கம்பர்மலையின் காய்கறி வியாபாரிகளுக்கு இந்த பஸ் பேருதவியாக இருந்தது.
இதைவிட இந்த பகல் நேர பஸ் நம்மூர் பெருங்குடி மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தமையால், அவர்கள் இந்த பஸ் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர்.
“எப்பொழுது பஸ் வரும்” எனக் காத்திருக்கும் இந்தப் பெருங்குடி மக்கள் பலரும் பஸ்சேறி தத்தமக்குரிய பல்வேறு இணைப்புக்களில் இறங்கிக் கொள்வர்.
தாகசாந்தி செய்து கொண்ட பின்னர், பிற்பகல் 2:30 மணிக்கு, திரும்பிவரும் அதே பஸ்ஸில் ஏறிவந்து வீடு சேருவர்.
திரு.அப்பாத்துரை மாஸ்டர்
பஸ்ஸில் அந்த நாளில் பாட்டுப் பெட்டி கிடையாது. ஆனாலும், இந்தக் குறை நீங்க குடிமக்கள் பலரும், பஸ்ஸினுள்ளே ஆனந்தமாகப் பாடியபடியே பயணிப்பர். இவர்கள் குறுகிய ஒழுங்கைகள் வழியாக ஓட்டமும் நடையுமாக வருவதைப் பார்த்து விட்டால், பஸ் பொறுமையாக தரித்து நின்று, இவர்களை ஏற்றிச் செல்லும் அளவிற்கு இவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர்.
இந்த பஸ் பெருங்குடி மக்களுக்கு பேருதவியாக இருந்தமையால், இதனை செல்லமாக “கள்ளு பஸ்” எனக் காதலோடு அழைத்தனர்.
”கள்ளு பஸ்” கலக்கியது ஒரு காலம்.
பி.கு:
தாகசாந்திக்கான தவறணை முறை காலஞ்சென்ற N.M.பெரேரா நிதியமைச்சராக இருந்த காலத்திலேயே நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னர் தாகசாந்திக்காக வீடுகளைத் தேடிச் செல்லும் வழமையே இருந்து வந்தது.