தமிழ் நாட்டின் அறிஞரும் சைவசமயப் பிரமுகருமான சுத்தானந்த பாரதியார் அவர்கள் ஒருமுறை வல்வை வந்திருந்த சமயம், ஊரின் வனப்பையும், சிவன் – அம்மன் கோயில்கள் வலமும் இடமுமாக அமைந்திருந்த எழிற்கோலங்க்கண்டு வியந்து “வல்வெட்டித்துறை” என்னும் பெயருடன் இன்று முதல் “சிவபுரம்” என்றும் இவ்வூர் அழைக்கப்படவேண்டும் எனவும் கூறிச்சென்றிருந்தார்.
சிவன் கோயில் மகோற்சவ விஞ்ஞாபனங்களில் வல்வை நகர் – சிவபுரம் என்று இருப்பதை இன்றும் காணலாம்.
வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகேயுள்ள “சிவபுரவீதி” என்னும் வழிகாட்டிப் பலகை உள்ள இடத்திலிருந்து மேற்காகப் பார்த்தால் சிவன் கோயில் இராஜகோபுரம் கண்ணெதிரே தெரியும்.
இந்த வீதியே “சிவபுரவீதி” என அழைக்கப்படுவதுடன், இடைக்காலத்தில் தார் வீதியாக இருந்து, தற்சமயம் சீமெந்து வீதியாக ஏற்றங்கண்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்த வீதியின் மேற்குப் புறமும் கிழக்குப் புறமும் (யோகநாயகி சினிமா தியேட்டர் இருந்த இடத்தின் முன்புறம்) இரண்டு, மூன்று காணிகளினால் துண்டுபட்டு தனித்தனி வீதிகளாக இருந்திருந்தன.
வல்வை பட்டினசபைத் தலவராக காலஞ்சென்ற க.சபாரத்தினம் அவர்கள் இருந்த காலத்தில், இவ்வீதி நேர்வீதியாக்கப்பட்டு காலஞ்ச்சென்ற அமைச்சர் மாநாம சமரவீர அவர்களினால் சாம்பிராய பூர்வமாக இவ்வீதி திறந்துவைக்கப்பட்டது.
11-06-1967 இல் நடைபெற்ற சிவன்கோயில் கும்பாவிசேகத்தின் விசேட அம்சமாக இந்த நேரான – நீண்ட – பெரு வீதி திறக்கப் பட்டது முதல் “சிவபுரவீதி” என அழைக்கப்படலாயிற்று.
சிவபுரவீதி வழியாக வருடத்தில் 5 முறை நடைபெறும் சுவாமிகளின் ஊர்வலங்களினால் அவ்வீதி புனிதமடைகின்றது.
1) புட்டணிப் பிள்ளையார்
புட்டணிப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழாவன்று வேட்டைத் திருவிழா முடிந்த பின்னர் சுவாமி, சிவபுரவீதி வழியாகச் செல்வார்.
2+3) சிவன் கோயில்
பிரமோற்சவத்திற்கு முந்திய மானிக்கவாசகர் ஊர்வலத்தின் போதும், வருடாந்த மகோற்சவத்தின் 14 ஆம் திருவிழாவன்று மாலையில் நடைபெறும் பிட்சாடனர் ஊர்வலத்தின் போதும் இவ்வீதி பயன்படுத்தப்படுகின்றது.
4+5) வயலூர் முருகன்
மகோற்சவ வேட்டைத் திருவிழாவன்றும், தீர்த்தோற்சவத்தன்றும் இருமுறை முருகன் சிவபுரவீதி வழியே வருவதனால் வீதி புனிதமாகின்றது.