வாரம் ஒரு பழங்கதை – அந்தியேட்டிமடமும் தெணிக் கிணறும் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2015 (திங்கட்கிழமை)
பழைய அந்தியேட்டி மடம்
தீர்த்த மடத்திற்கு கிழக்காக வீதிக்கு வடக்காக பழைய அந்தியேட்டி மடம் இருந்தது பலரும் அறிந்ததே. தீர்த்த மடத்திற்கும் அந்தியேட்டி மடத்திற்கும் இடையே பின்னிப் பிணைந்தபடி நின்றிருந்த வேப்பமரமும் - அரசமரமும் தீர்த்த நாட்களிலும் அந்தியேட்டி நாட்களிலும் போதுமான நிழல் கொடுத்துவந்தன. பின்னாளில்வேப்பமரம் பட்டுப்போக அரசமரம் மட்டுமே தப்பிப்பிழைத்து நிற்கின்றது.
பழைய அந்தியேட்டி மடம் (Photo curtsy Meenadchisundram)
01.08.`1946 இல் “மு.சரவணமுத்துவும் பெண் நாணசுகம்” தம்பதியினரால் கட்டப்பட்டுள்ள இந்த மடம் ஒரே நேரத்தில் 2 அந்தியேட்டிகள் செய்யக்கூடியதாக இரு பகுதிகளாக உள்ளது.
அந்தநாளில் மடத்தில் அந்தியேட்டி செய்து தீர்த்தக் கடலில் கல்லுப்போடுவது என்பது பாரம்பரிய சமயக் கடமையாக அனைவரும் கருதியமையால் அந்தியேட்டிகள் அனைத்தும் மடத்திலேயே நடந்தன. ஆனாலும் இடைக் காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் அவரவர் வீடுகளிலும், வீடுகளுக்கு அருகில் உள்ள காணிகளிலும் அந்தியேட்டிகள் நடந்து வந்தன. அந்தியேட்டி மடமும் நாளடைவில் பழுதடைந்து பாவனைக்கு ஏற்றபடி இல்லாமற்போனது.
புதிய அந்தியேட்டி மடம்
பழைய மடத்திற்கு சரி வடக்காக 25.01.2011 இல் புதிய அந்தியேட்டி மடம், “”ஆ.சவணமுத்துவும் பெண் ஞானசெளந்தரியம்மா” வின் உபயமாக அதே பழைய அமைப்பில் கட்டப்பட்டது. பழைய மடம் கட்டுவித்த ஆ.சரவணமுத்துவின் பேரனே புதிய மடத்தைக் கட்டுவித்த மூ.சரவணமுத்து ஆகும். இவர் நடராசா வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆனந்தமயிலின் மகனும், ஊரிக்காடு சோடாக்கடை உரிமையாளர் சுப்ரமணியத்தின் மூத்த மருமகனும் ஆவார். இன்றுள்ள சூழ்நிலை மாற்றம் காரணமாக பழையபடி மடத்தில் அந்தியேட்டி செய்வது படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
புதிய அந்தியேட்டி மடம்
புதிய மடத்தில் நாம் அனைவரும் பாடம் கற்க வேண்டி ஒரு முன்மாதிரி கையாளப்பட்டிருக்கின்றது. பழைய மடத்தின் பெயர் விபரம் அடங்கிய வெண்கல்லினை சேதமில்லாமல் பெயர்த்தெடுத்து, புதிய மடத்தின் பெயர் விபர வெண்கல்லின் கீழாக பதித்துள்ளனர். இதனால் நமக்கு பழமை புரிகின்றது. விபரம் தெரிகின்றது.
இந்த முன்மாதிரியினை கோயில்கள், வைத்தியசாலைகள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் தொடர நாமும் முயற்சிக்கலாமே.
“கை வண்டில் கலாச்சாரம்”
மேலே கூடாரமிடப்பட்டு, முன்பக்க கைப்பிடியில் கைப்பிடித்து தனி மனிதன் இழுத்துச் செல்லக் கூடியதான “கை வண்டில்கள்” அந்த நாளில் பயன்பாட்டில் இருந்தன. வண்டில்களின் உள்ளே, பக்கத்திற்கு இருவராக நால்வர் கால்களை மடக்கியபடி உட்கார்ந்து செல்ல முடியும்.
சிதம்பரக் கல்லூரியில் கல்வி கற்ற பருவமடைந்த பெண் பிள்ளைகள் இந்த கை வண்டில்களிலேயேபாடசாலை சென்றுவந்தனர். மண்ணாச்சி மணலை (ஊரிக்காடு) தரிப்பிடமாக கொண்டிருந்த 2 கைவண்டில்களின் சேவை சிதம்பராவிலிருந்து நெடியக்காடு வரை அந்நாளில் நீடித்திருந்தது.
அந்நாளில் மனிதன் மனிதரை இழுத்துச் செல்லும் இந்த “கை வண்டில்” கலாச்சாரம் கண்முன்னே இருந்தது என்பது இன்றைய சமுதாயம் நம்புவது கடினமானதே.
மண்ணாச்சி மணல்
பால் தொழிப்பு, அந்தியேட்டி வேளைகளில் தேவையான பொருட்களை எடுத்துச்செல்ல இந்த கைவண்டில்களே அந்த நாளில் பயன்படுத்தப் பட்டன. கை வண்டியின் கை பிடியில் ஒரு லாம்பு (அரிக்கன் விளக்கு) எரிந்தபடி தொங்கிக் கொண்டிருக்கும். ஒற்றைப் பறைமேளம் – சங்கு ஒலியுடன், ஆட்கள் முன்னும் பின்னுமாக நடந்துவர பயணம் கிழக்கு நோக்கி தொடரும். மீண்டும் மிகுதிப்பொருட்களை ஏற்றியபடி திரும்பி வரும் கை வண்டில், பிள்ளையார் தென் மேற்கு மூலையில் வேப்பமர நிழலில் தரித்துநிற்கும்.
பால் தொழிப்பு அல்லது அந்தியேட்டி செய்தவரும் – அவருடன் இன்னும் இரண்டொருவரும், மடத்திற்கு முன் உள்ள ஒழுங்கையில் இறங்கி தெணிக் கிணற்றில் நீராடி, கையில் கைப்பிடியளவு முள்முருக்கு இலைக்கட்டுடன் வண்டி நிற்கும் இடம் வந்துசேருவர். மீண்டும் பயணம் மேற்கு நோக்கிநகரும்.
தெணிக்கிணறு
ஊரின் மேற்கே மணலுக் கிணறு எவ்வளவு பிரபல்யம் பெற்றதோ, அதே போல் கிழக்கே தெணிக்கிணறு பிரப்லயமானது. பின்நாளைய தெணிக்கிணற்றுக்கு வட கிழக்கு மூலையில் விறகுகாலை இருந்த இடத்தில் “சின்னத் தெணி” என்னும் பெயரில் மிகப் பழமை வாய்ந்த கிணறு ஒன்று இருந்தது. பின்னர் அது தூர்ந்து போயுள்ளது. அதன் பின்னரே தெணிக் கிணறு தோண்டப்பட்டுள்ளது.
சின்னத் தெணி
அளவுக்கு அதிகமானவர்களால் கிணறு பயன்படுத்தப்பட்டு வந்ததால், பின் புறமாக இன்னொரு கிணறும் புதிதாக வெட்டப்பட்டது. முதற்கிணறு ஒரு துலாவுடனும், அடுத்த கிணறு இரு பக்கத் துலாக்களுடனும், பின்னாளில் எல்லாமே கப்பிக் கிணறுகளாயின.
தெணிக்கிணறு
இரவும் பகலும் ஓய் வின்றி உழைத்து இப்போது தெணிக் கிணறு ஓய்ந்துவிட்டது. கிணறுகளும் காணியும் கம்பி வேலி – கதவு போடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
தெணிக்கிணறு தன் வெளிப் புறமான சேவையை நிறுத்திக் கொண்டாலும் உட்புறமாக இன்றுவரை நம்மவர்களுக்கு சேவையாற்றி வருகின்றது.
ஊறணி வைத்தியசாலையில் பெரும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, இந்த தெணிக் கிணற்றிலிருந்து நிலத்தின் கீழாக, குழாய் மூலம் வைத்திய சாலைக்கு நீர் பெறப்படுகின்றது. 1999 இல் ஆரம்பமான இத் திட்டத்தின் மூலம் இன்று வரை தெணிக்கிணற்று நீர் வைத்தியசாலையின் பெரிய நீர்த் தொட்டிக்கு ஏற்றபட்டு விநியோக்கிகப்படுகின்றது.
தெணிக் கிணறு தனது கடமையை இனிமேலும் தொடரும்...
- பழங்கதை தொடரும்
வல்வையூர் அப்பாண்ணா
குறிப்பு
இதுவரை இவரின் 5 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.